மிகச்சிறந்த மிகப் பெரிய ஒரு கிரிக்கெட் விளையாட்டுக் கிராமம் இருந்தது.
அந்தக் கிராமத்தில் பல ஆயிரம் பேர் குடி இருந்தார்கள். அனைவருமே தங்கள் விளையாட்டை
உயிராக மதித்தவர்கள். அவர்கள் கிராமத்தில் தங்களுக்காக குடியிருப்புக்களை
அமைத்துக்கொண்டார்கள். அங்கு அந்த விளையாட்டையே எப்போதும் விளையாடி விளையாடி அதில்
தேவைப்படும் எல்லா விதிகளையும் கண்டுபிடிப்பதையே தங்களது வாழ்க்கை லட்சியமாகவும்
கொண்டவர்கள்.
அவர்களுக்குள்ளேயே அவர்களுக்குத் தேவையான நன்கொடையாளரும் இருந்தனர். அவர்களுக்குள்
பிரச்சினை வரும்போது தீர்க்கும் திறமையான அறிவாளிகளும் அவர்களுக்குள்ளேயே இருந்தனர்.
கிரிக்கெட்டைத் தவிர்த்த மற்ற எல்லா தேவைகளையும் வேலைகளையும் கூட கலந்து பேசி
பிரித்து, இயன்றதை பகிர்ந்து செய்து ஆனந்தமாக
வாழ்ந்து வந்தனர். அதனால் அந்த ஊர் 'கிரிக்கெட்கிராமம்' என்றே பட்டப் பெயரும் வாங்கிவிட்டது!
ஊரில் எல்லோருமே நூற்றுக்கணக்கான குழுக்களாக மைதானங்களில் விளையாடிக்கொண்டே இருப்பார்கள். சிறுவர்கள்
பெரியவர்கள் எல்லோரும் தங்கள் தங்கள் வயது திறமைக்கு ஏற்ற குழுவில்
விளையாடுவார்கள். விளையாட இயலாதவர்கள், விளையாட வராதவர்கள், விளையாட்டை
இன்னமும் பழகாதவர்கள் அனைவரும் கூட நேரத்தைப் போக்க வேடிக்கை பார்த்துக்கொண்டு
இருப்பார்கள்.
இப்படி விளையாட்டே தமது வாழ்க்கை எனக் கொண்டு, வேறு எதையுமே உலகில்
கண்டுகொள்ளாமல் வாழ்ந்து வந்தனர்.
ஒருமுறை வேறு ஒரு குழு, இவர்கள் சந்தோஷமாக இருப்பதைக் கேள்விப்பட்டது. 'விளையாட்டு' என்று ஒன்று இருப்பதே தெரியாத, எந்த
விளையாட்டையுமே எந்த விதிகளுடனும் விளையாண்டே இருக்காத, பலசாலிகளின் கூட்டம் அது.
அந்த பலசாலிகள் ஒருமுறை இந்த கிரிகெட் வீரர்களின் மைதானத்திற்குள் வந்தனர். விளையாட்டு வீரர்கள் வைத்திருந்த பந்தினை பலவந்தமாக பிடுங்கினர். கிரிகெட்
ஸ்டெம்-மின் அருகில் ஓடினர். பந்தினை பிடித்து கிரிகெட் ஸ்டெம்-மின் மீது
வீசினர். கிரிகெட் ஸ்டெம் மூன்றுமே ஓடி தூர விழுந்தது.
பலசாலிகள் அறிவித்தனர் 'நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம்' என்று. கிரிக்கெட்
வீரர்கள் விதிகளை பேசினார்கள். பலசாளிகளுக்கு அந்த விதிகள் ஏதும் புரியவும் இல்லை.
அதனால், “நீங்கள் ஏன் தேவையில்லாமல் உளறுகிறீர்கள். இப்படியெல்லாம் விதியை
பேசிக்கொண்டே இருந்தால் வெகு காலம் ஆகும் வெற்றியடைய. நாங்கள் தான் வெற்றிக்கு
சுலபமான வழியைக் கண்டுபிடித்தோம். நீங்கள் எங்களைப் போல வாழ வேண்டும். முன்னேற
வேண்டும். அதற்கு நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்” என்று உரக்கக் கத்தினார்கள்.
கிரிக்கெட் வீரர்களின் பேச்சு பலசாளிகளுக்கு புரியவும் இல்லை. கிரிக்கெட்
வீரர்களை பேச விடவும் இல்லை.
கிரிக்கெட் வீரர்களின் குழந்தைகள் சுற்றிலும் உட்கார்ந்துகொண்டு வேடிக்கை
பார்த்துக்கொண்டு இருந்தார்கள் - நடந்தது எல்லாவற்றையும். துவக்கத்தில் தங்கள்
பெற்றோர்கள் சிரமத்தில் மாட்டியதைப் பார்த்து வருந்தினார்கள்.
உள்ளே வந்த பலசாலிகள் உரக்கக் கத்தினார்கள். நீங்கள் உங்கள் காலத்தை
விரயமாக்கி உள்ளீர்கள். இனியாவது திருந்துங்கள் என்று.
விளையாட்டு வீரர்களின் குழந்தைகளில் விளையாட்டு வராத, விளையாட்டை இன்னமும்
புரிந்துகொள்ளாத குழந்தைகள் சிலருக்கு இது
சரி எனப்பட்டது. அவர்களும் பலசாளிகளுடன் சேர்ந்து கத்தினார்கள், “நாம் இன்னமும் பழமையையே
பேசிக்கொண்டு இருக்கக் கூடாது. விரைவாக முன்னேற அவர்களிடம் இருந்து நாம் கற்க
வேண்டும். நாம் அனைவரும் திருந்தவேண்டும்" என்று.
இது வரை வெற்றி பெற இயலாதவர்களுக்கும் பலசாலிகளின் பேச்சு மிகவும்
பிடித்துவிட்டது. பலசாலிகளுடன் சேர்ந்து கத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை
வளர்ந்துகொண்டே இருந்தது.
பலசாலிகளுக்கு மிகுந்த ஆச்சரியம் ஆகிவிட்டது. 'இங்கேயே நமக்குத் தேவையான
முட்டாள்கள் இருக்கிறார்களே' என்று நினைத்தார்கள். பலசாலிகளுக்கு மிகவும் சந்தோஷம்
ஆகிவிட்டது, 'இந்த சூழ்நிலையை எப்படி பயன்படுத்தலாம்' என்று சிந்தித்தார்கள்.
விளையாட்டு விதிகளை தெரிந்த, புரிந்துகொண்டு இருந்த சில குழந்தைகள், ‘இல்லை.
நம் நேரத்தை நாம் விரயமாக்கவில்லை. அப்படித்தானே விளையாட வேண்டும்' என்று கத்திப்
பார்த்தார்கள். ஆனால் பலசாலிகளின் கூச்சல், அவர்களுடன் சேர்ந்த குழந்தைகளின்
கூச்சலுக்கு இடையில் இந்தக் குரல் எடுபடவே இல்லை.
அதனால் தாங்கள் வெற்றி பெற்றதாக பலசாலிகள் அறிவித்தார்கள். “உங்களுடைய
குழந்தைகளும் எங்கள் பேச்சைத்தான் கேட்கிறார்கள். அவர்களை இனியும் நீங்கள் ஏமாற்றிக்கொண்டு
இருக்க முடியாது. நீங்கள் பழைய கற்கால விதிகளை போட்டு அவர்களை திணிக்கிறீர்கள். அவர்களை நாங்கள் எங்களது புதிய வெற்றி ரகசியங்களை சொல்லிக்கொடுத்து
உயர்த்தப் போகிறோம்”, என்று கத்தினர்.
அவர்களுடன் சேர்ந்த குழந்தைகளை இந்தப் பேச்சு சந்தோஷப்படுத்தியது. “ஆஹா,
பரவாயில்லை. நல்லவேளை இவர்கள் வந்தார்கள். நமது பெற்றோர்கள் எப்போதுமே இவ்வளவு
அக்கறையை நம்மிடம் காட்டியதே இல்லை. என்று மகிழ்ந்து அவர்களை தலைவர்களாக
வழிகாட்டிகளாகவும் ஏற்றுக்கொண்டார்கள்.
பெற்றோர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. உள்ளே வந்த பலசாலிகள் அந்த
ஊரிலேயே தங்கிவிட்டார்கள். அவர்களின் பக்கம் சாய்ந்த குழந்தைகளை தினசரி அழைத்து தங்களது
சீக்கிரம் வெற்றியடையும் தந்திரங்களை சொல்லிக்கொடுத்தார்கள். அதற்கு கைமாறாக கிரிக்கெட்
வீரர்களின் வீடுகளிலிருந்து பணம் மற்றும் பொருட்களை வாங்கிவர அந்தக் குழந்தைகளை பலசாலிகள்
அனுப்பினர்.
பெற்றோர்கள் தரமுடியாது என்றனர். அவர்களை மீறி வீட்டுக்குள் சென்று பலவந்தமாக
எப்படி எடுத்துவருவது என்று பலசாலிகள் தந்திரங்களை சொல்லிக்கொடுத்தார்கள்.
தங்களை சார்ந்த குழந்தைகளிடம் யார் ஊரில் பெரிய பணக்காரன், எங்கே வீடுகளில்
பணம் வைக்கிறார்கள், அவைகளை எப்படி எடுக்கலாம்,... என்றெல்லாம் கலந்து பேசினார்கள்
பலசாலிகள்.
தேவைஎன்றால் எப்படி திருடிக்கொண்டு வருவது என்றும் பலசாலிகள் சொல்லித்தந்தார்கள். அவைகளை எல்லாம்
நன்றாக திறமையாக கற்றுத் தேர்ச்சி அடைந்த சிறுவர்கள் வீடுகளுக்கு வந்து சண்டைபோட்டு
பிடுங்கி சென்றார்கள். பலசாலிகளிடம் கொடுத்தார்கள். இதற்குப் பெயர் 'டெக்னாலஜி' என்று சொல்லித்தந்தார்கள். சிறுவர்களும் டெக்னாலஜியை நன்கு கற்று தேர்ச்சி அடைந்தார்கள்.
பலசாலிகளும் அவர்கள் கொண்டுவந்து கொடுத்ததிலிருந்து நூற்றில் ஒரு பகுதியை டெக்னாலஜி தெரிந்த அந்த
சிறுவர்களுக்கு செலவு செய்தனர். மாத சம்பளம், பணியில் சம்பளத்துடன் விடுமுறை, பதவி உயர்வுகள்,
சம்பள உயர்வுகள், பணியிலிருந்து ஓய்வுக்குப் பிறகும் வேலை செய்யாமலேயே குறைந்த
பக்ஷ சம்பளம்,... என்று பல நன்மைகளை சொன்னார்கள் அந்த பலசாலிகள்.
இதற்கெல்லாம் சிறுவர்கள் கொண்டுவந்ததில் நூற்றில் ஒரு பகுதிதான் தேவைப்பட்டது.
அவைகளை தாராளமாக அவர்களுக்கு செலவு செய்ய பயன்படுத்திக்கொண்டு மீதி தொன்னூற்று ஒன்பது
பகுதியையும் ஜாலியாக சாப்பிட்டுக்கொண்டும், தமது ஊருக்கு வீட்டுக்கு என்று அனுப்பிக்கொண்டும் இருந்தார்கள் பலசாலிகள்.
அதற்காக பலசாலிகள், அந்த சிறுவர்களுக்கு மாத சம்பளம் கொடுத்தார்கள்.
சிறுவர்களுக்கோ மிகுந்த சந்தோஷம் நமது பெற்றோர்கள் எப்போதுமே இப்படி சம்பளம்
தந்ததே இல்லையே. என்று ஆச்சரியப் பட்டார்கள்.
சில நாள் கழித்து பலசாலிகள் சிறுவர்களுக்கு பணம் வசூல் செய்து கொண்டுவருவதற்காக
மோட்டார் பைக் வாங்கிக் கொடுத்தார்கள். ஓட்டவும் கற்றுக்கொடுத்தார்கள். சிறுவர்களுக்கு
மிகவும் சந்தோஷமாக ஆகிவிட்டது.
சிறுவர்கள் அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள், “அப்பாடா, நல்லவேளை, இங்கு வந்தோம் நம்முடைய
பெற்றோர்கள் நமக்கு சைக்கிள்தான் கொடுத்து இருந்தார்கள். இவர்கள் பைக் கொடுத்து
உள்ளார்கள். பைக் ஓட்ட ரோடும் போடுகிறார்கள். இவர்களுடன் வாழ்ந்துகொள்வதுதான் புத்திசாலித்தனம்.
“ என்று.
அதற்கு, பலசாலிகள் சொன்னார்கள், "இவைகள் எல்லாம் உனது உரிமைகள். உனது உரிமைகளை
உனது பெற்றோர்கள் ஏமாற்றி வந்துள்ளார்கள். உங்களை அறியாமையில் வைத்துக்கொண்டு
இருந்துள்ளார்கள். நாங்கள் நிச்சயம் உங்களை காப்பாற்றுவோம்", என்று சொன்னார்கள். அவர்களை
சார்ந்த குழந்தைகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியாகி விட்டது.
குழந்தைகளை சேர்த்து கிராமத்திற்குள் அனுப்பி கிரிக்கெட் வீரர்களை அடித்து
உதைத்து செல்வங்களை எடுத்து வர வைத்தனர் .
கிரிக்கெட் வீரர்களுடன் மோதத் தேவையான கிரிக்கெட்டை மட்டுமே பயிற்சி செய்து
வந்தவர்கள் ஊரில் இருந்த பெரியவர்கள், இந்த கிரிகெட் தெரியாத பலசாளிகளால் பிரச்சினை வந்தால் என்ன செய்வது
என்று என்றுமே சிந்தித்ததும் இல்லை. அதனால்
அதற்காக அவர்கள் பயிற்சி செய்ததும் இல்லை. அதனால் இந்தப் பிரச்சினையை தீர்க்கும் அறிவோ திறமையோ அவர்களுக்கு இல்லை.
இப்போது என்னசெய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார்கள்.
பலசாலிகள், தங்களுக்கு சேவை செய்யும் குழந்தைகளுக்காக பள்ளிக்கூடங்களையும்
துவங்கினார்கள். அங்கு "உங்கள் முன்னோர்கள் உங்களை எப்படி ஏமாற்றி முட்டாளாக
வைத்திருந்தார்கள் என்றும், நாங்கள் வந்து எப்படி உங்களை காப்பாற்றினோம்" என்றும் சொல்லித்
தந்தார்கள். சிறுவர்களுக்கு அவைகளைப் படிக்கப் படிக்க மிகவும் சந்தோஷம்
ஆகிவிட்டது.
நல்லவேளை
இவர்களுடன் வந்தோம், பிழைத்தோம் என்று நினைத்து பெருமைப் பட்டார்கள். அதேசமயம்.
இங்கு வராமல் ஏமாந்து வாழும் மற்றவர்களுக்காக மிகவும் வருத்தப்பட்டார்கள். அவர்களையும்
எப்படியாவது நம்மைப் போன்று திருத்த வேண்டும் என்றும் நினைத்துக்கொள்வார்கள்.
ஒருமுறை பலசாலிகள் பள்ளிக்கூடத்தில் பாடம் நடத்தினார்கள்,...
உங்கள் ஊரின் பெயர்
'மூடரூர்'.
உங்கள் பெற்றோர்கள் எல்லோரும்
வாழத் தெரியாமல் வாழ்ந்துகொண்டு இருந்தார்கள்.
அதனால் உங்களுக்கு என்று பழைய
கட்டுக்கதைகளைத் தவிர வரலாறு என்று எதுவும் கிடையாது.
நாங்கள் வந்த பிறகுதான் உங்கள்
வரலாறு துவங்குகிறது.
நீங்கள் எப்படி வாழவேண்டும் என்பதற்கு நாங்கள் சட்டம் போட்டு
உள்ளோம். அப்படித்தான் வாழவேண்டும்.
அதை மீறினால். கடுமையான தண்டனை கிடைக்கும்.
எதிர்த்துப் பேசினால், சிந்தித்தாலும் தண்டனை கிடைக்கும்.
ஆனால் எதிர்த்து
சிந்திக்காமல் எதிர்த்துப் பேசாமல் வாழ்ந்தாள் நாங்கள் உங்களுக்கு மிகுந்த
நன்மைகளை எப்போதும் செய்வோம்.
ஏனென்றால் இது உங்கள் உரிமை.
உங்களது பெற்றோர்களை
போல நாங்கள் உங்களை ஏமாற்ற மாட்டோம்.
அதனால் நாங்கள் உங்களுக்கு தெய்வம் போல என்று
எப்போதும் சொல்லுங்கள்.
எங்கள் பெயருக்கு முன்னாள் லார்ட் என்றும், பின்னால் பிரபு
என்றும் சேர்த்துதான் சொல்லவேண்டும்.
நாங்கள் இப்போது சொல்லச் சொல்ல அனைவரும்
திரும்பச் சொல்லவேண்டும்.....
“நாங்கள் எல்லோரும்...”
“நாங்கள் எல்லோரும்...”
“மூடரூர் குடிமக்கள்”
“மூடரூர் குடிமக்கள்”
“நாங்கள் மூடரூர் குடிமக்கள் என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.”
“நாங்கள் மூடரூர் குடிமக்கள் என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.”
“நாங்கள் சட்டத்தை மதித்து எப்போதும்
ஒற்றுமையாக வாழுவோம்.”
“நாங்கள் சட்டத்தை மதித்து எப்போதும் ஒற்றுமையாக வாழுவோம்.”
“எங்கள் தெய்வங்கள் லார்ட் வெல்லஸ் லி
பிரபு, லார்ட் வாரன் ஹேஸ்டிங் பிரபு, லார்ட் மெக்காலே பிரபு, லார்ட்
மவுண்ட்பேட்டன் பிரபு, லார்ட் ராபர்ட் கிளைவ் பிரபு,...”
“எங்கள் தெய்வங்கள் லார்ட் வெல்லஸ் லி பிரபு, லார்ட் வாரன் ஹேஸ்டிங் பிரபு, லார்ட் மெக்காலே பிரபு, லார்ட்
மவுண்ட்பேட்டன் பிரபு, லார்ட் ராபர்ட் கிளைவ் பிரபு,...”
நன்கு உரக்கச் சொன்னவர்களுக்கு முதல் பரிசு, இரண்டாம் பரிசு,... என வழங்கப்பட்டது. கழுத்தில் டாலர்
மாட்டப்பட்டது. பலசாலிகளின் தலைவர் கை குலுக்கினார். சிறுவர்களுக்கு மிகவும்
பெருமையாகி விட்டது.
“பசங்களா எல்லோரும் கைதட்டுங்கள் பார்ப்போம்...!”
எல்லோரும் பலமாக கைத்தட்டினார்கள்...
ரெண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு எல்லாம் வழங்கப்பட்டன...
பலசாளித் தலைவர் பேசினார், “இதே போன்று மற்றவர்களும் நன்றாக முயற்சி செய்து
அடுத்த முறை முதல் இடம் பிடிக்க முயற்ச்சிக்க வேண்டும், சரியா? “
“சரீங்க சார்...!”
“முயற்சி எடுத்தால் உங்களால் நிச்சயம் முடியும் , முயற்சி எடுப்பீர்களா...”
“எடுப்போம் சார்....”
“உங்களில் நன்றாக திறமையாக படித்த முயற்சி செய்த சில பேரை இப்போது போலீசாக
ஆக்கப் போகிறேன், நீதிபதியாக ஆக்கப் போகிறேன். உங்களுக்கும் எங்களுக்கும் எதிராக
யார் வந்தாலும் இவர்கள் அவர்களை பிடித்து கடுமையாக தண்டிப்பார்கள் அழிப்பார்கள்.
இப்படி செய்வோமா...”
“செய்யலாம் சார்...”
“நீங்க எல்லோரும் ஒத்துக்கறீங்களா....”
“ஒத்துக்கறோம் சார்....”
“வெரிகுட், பசங்க எல்லோரும் பள்ளிக்கூடத்தில நல்லா படிச்சி இருக்கீங்கன்னு
தெரியுது, எல்லோருக்கும் பாராட்டுக்கள்.... எல்லோரும் கைதட்டுங்கள் பார்ப்போம்...!”
அனைவரும் கைதட்டினர்....
“உங்களுக்கு நல்லா பாடம் சொல்லிக்
கொடுத்ததுக்காக உங்கள் ஆசிரியருக்கு இந்த ஆண்டுக்கான நல்லாசிரியர் விருது
கொடுக்கொறோம். பசங்களா எல்லோரும் கைதட்டுங்கள் பார்ப்போம்...!”
அனைவரும் கைதட்டினர்....
“இதே போன்று நீங்களும் நல்லாசிரியர்
போன்ற விருதுகளை எங்களிடம் இருந்து வாங்க இன்னும் நிறைய உழைக்கணும், முயற்சி
எடுத்துக்கொண்டே இருக்கணும், செய்வீங்களா...”
“செய்வோம் சார்....”
“வெரிகுட் சில்ட்ரன்...”
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இது பாரதத்தின் நிலை.
பழங்காலத்தில் பாரதத்தின் குடிமக்கள் பாரதிகள், இந்த சிருஷ்டி, வாழ்க்கை,
இவைகளை இயக்கும் விதிகள், இவை அனைத்துக்கும் காரணம் ஆன இறைவன் இவைகளை கண்டுபிப்பது,
இவைகளே தமது வாழ்க்கை என்று வாழ்ந்த விஞ்ஞானிகள் அவர்கள். கண்டுபிடித்த உண்மைகளின்
துணையுடன் நிம்மதியாக எப்படி ஆனந்தங்களை அடைந்து வாழ்வது என்று மட்டுமே வாழ்க்கை
லட்சியமாகக் கொண்டு, வாழ்ந்தவர்கள். இந்த கிரிக்கெட்கிராமத்து வீரர்களைப் போல.
கதையில் பலசாலிகளைப்போல வெளி நாட்டவர்கள் வந்து பாரதத்தின் கட்டமைப்புகளை இப்படித்தான் குழப்பி வைத்து
உள்ளனர். இந்தியாவாக ஆக்கி உள்ளனர்.
இதற்கு என்னதான் தீர்வோ? கதை புரிந்தவர்கள் யோசிக்க வேண்டும். சொல்லவேண்டும்.
செய்யவேண்டும்!