தீபாவளி லேகியம் - வயிற்றுத் தொல்லைகளை நீக்கிக்கொள்ள...

Leave a Comment
தீபாவளி அன்று காலையில் எண்ணை தேய்த்துக் குளித்துவிட்டு பலகாரங்களை தின்பதால் தொண்டை கட்டு வரும். நெய்யில் சுட்ட‌ இனிப்பு, காரம் மற்றும் அசைவம் இப்படி வகை வகையா சாப்பிட்டு நம்ம‌ வயிறு கொஞ்சம் அப்சட் ஆகி இருக்கும்.  அதில்லாமல் வயிற்றில் அஜீரணம் ஏற்படும். மேலும் பட்டாசு புகையினாலும் சிலருக்கு சளி பிடிக்கும். இதனைத் தவிர்க்கத்தான் தீபாவளி லேகியம் தயாரிக்கப்படுகிறது. இந்த லேகியத்தை குளித்து விட்டு வந்து ஒரு உருண்டை வாயில் போட்டுக் கொள்ள வேண்டும்.

இந்த‌ லேகியத்தை சாப்பிட்டீங்கன்னா பலகாரம் எல்லாம் நல்லா சீரணமாகி வயிறு நம்மை வாழ்த்தும்.

ஓமம் சேர்த்து செய்வதால் வாய்வு கோளாறு வராமல் காக்கும். வயிற்றின் மந்த‌ நிலையைப் போக்கும்.





















தேவையான‌ பொருட்கள்:

சுக்கு = 25 கிராம்
ஓமம் = 50 கிராம்
கண்டந்திப்பிலி = 3 ஸ்பூன்
அரிசித்திப்பிலி = 3 ஸ்பூன்
சித்தரத்தை = 1 குச்சி
இள‌சான‌ இஞ்சி = 1 துண்டு
மிளகு = அரை ஸ்பூன்
மல்லி = 1 ஸ்பூன்
சீரகம் = அரை ஸ்பூன்
பொடித்த ஏலக்காய் 5 கிராம்: (விருப்பப்பட்டால்)

இஞ்சியைத் துருவி வெயிலில் உலர்த்தவும். அனைத்துப் பொருட்களையும் உலர்த்தி லேசாக‌ வறுத்து மிக்சியில் நன்கு பொடியாக்கவும்.

பொடி அரை ட‌ம்ளர் வரும்.

இதோடு வெல்லம் முக்கால் டம்ளர் சேர்க்கவும்.

நெய் = 3 கரண்டி
தேன் = 2 கரண்டி
நல்லெண்ணெய் = 1 கரண்டி

எல்லாவற்றையும் கலந்து அடுப்பிலிட்டு ஐந்து நிமிடங்கள் கிளறவும். கலவை அல்வா பக்குவம் வந்ததும் இறக்கவும். 

அதிக‌ நேரம் அடுப்பில் இருந்தால் கலவை இறுகி விடும். அப்புறம் கல்லு போல‌ கடிக்க‌ கடினமா ஆயிடும். அதனால், பக்குவமா சட்டியில் ஒட்டாமல் வந்ததும் எடுக்கவும்.

இதை காலை வேளை ஒரு கோலி அளவு எடுத்து உருட்டி அப்படியே சுவைத்துச் சாப்பிடலாம்.
தீபாவளி சமயம் மட்டுமல்லாமல் வாரந்தோறும் அதாவது ஞாயிறு தோறும் அனைவருக்க்குமே ஒரு உருண்டை கொடுத்து வந்தால் உணவு நல்லா சீரணமாகி வயிறு கலகல என்று இருக்கும். வயிற்றுக் கோளாறு எதுவும் வராது.

சுவையாக‌ இருப்பதால் குழந்தைகளும்கூட அப்படியே வாங்கி சாப்பிட்டு விடுவார்கள்.

எப்பவும் இந்த‌ லேகியம் நம்ம‌ வீட்டில் இருக்க‌ வேண்டிய‌ ஒன்று. கெட்டுப் போகாமல் ரொம்ப‌ நாள் வரும்.

சில‌ பொருட்கள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. ஓமம், சுக்கு ரெண்டும் ரொம்ப‌ முக்கியம்.



இந்த லேகியம் ரெடி பண்ண நேரமில்லாதவ்ர்கள் ஓமம், சுக்கு, வெல்லம் தலா ஒரு கரண்டி எடுத்து பொடி செய்து தேன் கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ஆளுக்கு ஒன்று சாப்பிட தீபாவளி லேகியம் சாப்பிட்ட பலன் கிடைக்கும்.




இன்னொரு டிப்ஸ் ....
உடம்பெல்லாம் வலி, கை காலெல்லாம் அசதி, ஜலதோஷம் வராப்பல‌ இருக்கும் போது...

சுக்கு, கண்டந்திப்பிலி ரெண்டையும் நைசா அரைத்து தேங்காய்ப்பால் ஒரு டம்ளர் விட்டு கருப்பட்டி போட்டு கொதிக்க‌ வைத்து குடித்தால் களைப்பெல்லாம் பறந்து போயிடும். இதுவும் குடிக்க‌ சுவையா இருக்கும்.

0 comments:

Post a Comment