எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் கிட்டதட்ட மறைந்து விட்டதெனக் கூறும் அளவிற்கு ஆகிவிட்டது.
இது பயனற்ற சம்பிரதாய பழக்கமல்ல;
நமது முன்னோர்கள் நலமுடன் வாழக் கண்டறிந்த நோய் தடுப்புமுறை என்று நமது சித்த மருத்துவ நூற்பாடல்கள் கூறுகின்றன.
எண்ணெய் தேய்த்து குளிப்பதனால் ஏற்படும் பலன்களை பார்ப்போம்
இரைப்பு,இளைப்பு நோய்கள், மூக்கடைப்பு, உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம், நீங்கும்.
முகத்தில் உண்டாகும் நோய்கள், அதிவியர்வை நீங்கும்.
ஐம்புலன்களுக்கும் பலம், தெளிவு உண்டாகும்.
தலை,முழங்கால்கள் உறுதியடையும்.
முடி கறுத்து வளரும்.
தலைவலி ,பல்வலி நீங்கும்.
தோல் வறட்சி நீங்கி தோல் பளபளப்பாகும்,
உடல் பலமாகும்,சோம்பல் நீங்கும்,
நல்ல குரல் வளம் உண்டாகும்.
சுவையின்மை நீங்கும்.
இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக உடற்சூட்டை சமநிலைக்கு கொண்டு வந்து, நோயெதிர்ப்புத் திறனை அதிகரித்து உடலை நோய் வராமல் பாதுகாக்கும்.
எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் முறை:
நல்லெண்ணெயையே எண்ணெய் தேய்த்துக் குளிக்க பயன்படுத்த வேண்டும்.
எண்ணெய் தேய்க்கும்பொழுது , எண்ணெயை ஒவ்வொரு காதிற்குள்ளும் மும்மூன்று துளிகளும், ஒவ்வொரு மூக்கு துவாரத்திலும் இரண்டிரண்டு துளிகளும், பின் கண்களிரண்டிலும் இரண்டு துளிகளும் விட்டு, பின் மெதுவாக தலை உச்சியிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் தேய்க்க வேண்டும்.
காதில் எண்ணெய் விடுவதினால் தலையில் வரக்கூடிய நோய்களும், கண்களில் விடுவதினால் காதின் நோய்களும், உள்ளங்கால்களில் தேய்ப்பதினால் கண் நோய்களும், தலையில் தேய்த்து குளிப்பத்தினால் அனைத்து நோய்களும் குணமாகும் என்று சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எண்ணெய் தேய்த்தவுடன் குளிக்காமல் சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும்;
அவ்வாறு குளிப்பதினால் எண்ணெயிலுள்ள சத்துக்கள் உடலினுள் உட்கிரகிக்கப்படும்.
ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க சுமார் 60 மி.லி நல்லெண்ணெய் தேவைப்படும்.
எண்ணெய்க் குளியலன்று செய்ய வேண்டியவை:
நல்லெண்ணெய் தேய்த்து சுமார் 15-30 நிமிடம் ஊறவைத்துப் பின் இளஞ்சூடான வெந்நீரில் குளிக்க வேண்டும்.
அதிகாலையிலேயே(6.30 மணிக்குள்)குளித்து முடித்துவிட வேண்டும்.
வாரமிருமுறை அதாவது,
"ஆண்கள்,புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும்,"
"பெண்கள்,செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் குளிப்பது "சிறப்பு என்று சித்த மருத்துவம் கூறுகிறது.
எண்ணெய்க் குளியலன்று செய்யக்கூடாதவை:
பகலில் தூங்கக் கூடாது.
அதிக வெயிலில் அலையக்கூடாது.
குளிர்ந்த உணவுகள்,பானங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது
.
உடல்பயிற்சி செய்யக்கூடாது.
உடலுறவு கொள்ளக் கூடாது
.
சேவிங் செய்யக்கூடாது.
நண்டு,கோழி,மீன்,செம்மறி ஆடு போன்ற அசைவ உணவுகளைத் தவிர்த்தல் நல்லது.
"ஆரோக்யமாய் வாழ ஆயில் பாத் எடுங்கள்"
0 comments:
Post a Comment