ஸ்ரீ கிருஷ்ணர் எல்லா உறவுகளுடனும் உறவாக வாழ்ந்துகொண்டே வழிகாட்டும் ஒரு உதாரண குருநாதர்!
ஆணவம் என்பது அஞ்ஞானம் இருக்கும் வரை பிறக்கும். ஞானம் அடையும் வரை யாருமே அஞாநியாகவாவது வாழ்ந்துதான் ஆகவேண்டும் . அந்த சூழ்நிலையை கண்டுபிடிக்கவும், நம்மை விழிப்புடன் நடத்திக்கொள்ளவும் மகாபாரதத்தில் ஒரு நல்ல சம்பவம் நமக்கு உதவுவதாக உள்ளது.
கிருஷ்ணபிரானும் அர்ஜுனனும் ஒருமுறை யமுனை நதிக்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். கிருஷ்ணனின் மனதில் இளமைப்பருவத்தில் தான் அங்கு விளையாடிய நினைவுகள் எழுந்தன.
அர்ஜுனனுக்கோ விரைவில் வரப்போகும் குருக்ஷேத்ர யுத்தம் பற்றிய நினைவே இருந்தது. சிறந்த வில்லாளியாக தன்னை கருதிக்கொண்ட அர்ஜுனன், அதன் காரணமாக இறுமாப்பு மேலிட இருந்தான்.
யமுனை நதியின் ஓடும்
தண்ணீரில், தன்னால் ஒரு அம்புப்பாலத்தையே கூட அமைக்க முடியும் என்று செருக்குற்றான்.
ராமன் ராவணனுடன் போர் செய்ய இலங்கைக்கு போகும்போது தனித்து பாலம் கட்ட முடியாமல்
போனதைக்கூட தன்னால் செய்ய முடியும் என நினைத்துக்கொண்டான். கிருஷ்ணர் அவன் மனதில்
தற்பெருமை தலைதூக்குவதை கண்டுகொண்டார்.
அர்ஜுனனிடம், அர்ஜுனா! உனக்குள்ளாகவே ஏதேதோ பேசிக்கொண்டே சிரிக்கிறாய் போல் தெரிகிறது. நான் ஏதாவது தவறுசெய்து அதை கேலி செய்யும் விதத்தில் சிரிக்கிறாயா? என தெரியாதவர் போல் கேட்டார். அர்ஜுனன் அவரிடம், நான் சிரித்தது உண்மைதான். ஆனால்,காரணம் நீங்கள் நினைப்பது போல் அல்ல. ராமன் இலங்கைக்கு போகும்போது கடல் மீது பாலம் கட்ட குரங்கு கூட்டத்தை அமர்த்திக்கொண்டார். நான் மட்டும் அங்கு இருந்திருந்தால் அம்புகளாலேயே கண்சிமிட்டும் நேரத்தில் ஒரு பாலம் அமைத்திருப்பேன். இதை நினைத்துதான் சிரித்தேன், என்று பெருமையோடு சொன்னான்.
அர்ஜுனனிடம் அகந்தை பிறந்துள்ளதை கிருஷ்ணர் புரிந்துகொண்டார். அர்ஜுனா! இந்த யமுனை நதியில் உன் அம்புகளால் ஒரு பாலத்தை அமை. ராமாயண காலத்தில் இருந்த ஒரே ஒரு குரங்கு இப்போதும் இந்த பூமியில் இருக்கிறது. அது அந்த பாலத்தின் வலிமையை சோதிக்கட்டும். உன் பாலம் பலமானது என அது சொன்னால், உன் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன், என்றார்.
அர்ஜுனன் மிகுந்த ஆர்வத்துடன் யமுனையின் மீது அம்புகளை
பாய்ச்சினான். மிகச்சிறப்பான பாலம் ஒன்று அமைந்தது. கிருஷ்ணர் மகிழ்ச்சி அடைந்தவராய், ஹே ஹனுமான்! வா! என அழைத்தார். அப்போது ஒரு குரங்கு வந்து குதித்தது.
கிருஷ்ணரை வணங்கியது.
கிருஷ்ணர் அந்த குரங்கை அம்புப் பாலத்தின்மீது நடக்கச் சொன்னார். குரங்கின் கால் பட்டதுதான் தாமதம். அடுத்த காலை உயர்த்தும் முன்னரே பெரும் சப்தத்துடன் முழு பாலமும் நொறுங்கி விழுந்தது. அர்ஜுனனை பார்த்து கிருஷ்ணர் சிரித்தார். அர்ஜுனன் அவமானத்தால் குன்றிப்போய் வில்லையும் அம்பையும் வீசி எறிந்துவிட்டு கிருஷ்ணரது திருவடிகளில் தொய்ந்து விழுந்தான்.
கிருஷ்ணர் அமைதியாக அவனுக்கு அறிவுரை வழங்கினார். மனதை
தளரவிடாதே அர்ஜுனா! வலிமை மிக்க இந்த குரங்குகளை தாங்கும் வகையில் ராமரால் கூட
அம்புகளால் பாலம் அமைக்க முடியவில்லை. அவராலேயே முடியாது என்ற நிலை இருக்க, உன்னால் பாலம் அமைக்க இயலாமல் போனமைக்காக நீ அவமானப்பட்டதாக கருத
முடியாது. ஆனால், எப்போதும் ஒரு பாடத்தை நினைவில்
வைத்துக்கொள். தற்பெருமையையும் அகந்தையையும் உன் மனதை எப்போதும் பற்ற விடாதே. ஒரு
வீரனுக்கு தவறாது வீழ்ச்சியைத் தரக்கூடிய மிக மோசமான எதிரிகள் இவை, என்றார்.
0 comments:
Post a Comment