குழந்தைகளுக்கு நல்வாழ்வு தர விரும்பும் ஒவ்வொரு பெற்றோரும்
படிக்கவேண்டிய சிறிய கதை....
தலைமுறை தலைமுறையாக சொத்து சேர்த்து மிகுந்த வளமாக வாழ்ந்து
வந்த குடும்பம் அவசரத்திற்கு ஒருமுறை ஒரு மகன் செல்லமாக வாழ்ந்த இளம் காளை இன்பச்செல்வனுக்கு
எழுதிக்கொடுக்கும் நிலை வந்தது.
அவனது வளத்தினை அறிந்து, இயலாமைகளை கண்டறிந்து திறமையாக நாகரீக
நயவஞ்சகர் கூட்டங்கள் அவனை வளைத்தது சுற்றிச்சுற்றி, சூதாட்டக்காரர்கள், காமினிகள்,
விலை நேரப் பெண்கள், போதைப்பொருள் வியாபாரிகள், ஆடம்பரப் பொருள் ஏஜண்டுகள்,...
என்று. சுற்றத்தார்கள் சொன்னார்கள், ‘வேண்டாம் இவைகளெல்லாம், கவனம் வேண்டும்’ என்று...
‘மதி கெட்டவர்களே செல்லுங்கள் விலகி’ என்றான் இளங்காளை இன்பச் செல்வன்...
செல்வனுக்கு கிடைத்த சுகம் ஏராளம் ஏராளம். கேட்டால் கேட்டது
கிடைக்கும்! நினைத்தால் நினைத்தது நடக்கும்! உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அகமும்
புறமும் சுகம், சுகம், சுகம்,..... உடனடி சுகம். திணறவைக்கும் சுகம்! செல்வனின் செல்வம் கைமாறத் துவங்கியது கொள்ளையர்
கூட்டத்திக்கு!
இன்பச்செல்வனுக்கு யாராலும் எதையும் புரியவைக்க
முடியவில்லை. அவன் யார்பேசவும் வாய்ப்பும் கொடுப்பதில்லை. சுறுசுறுப்பாய்
சுற்றினான் சுக வலைக்குள் சுற்றிச் சுற்றி. அறிவுரை என்றுமட்டும் யார் எதை
சொன்னாலும் அவமதித்து அனுப்புவான்.
“எனது சுக வாழ்க்கை உங்களுக்கு பிடிக்கவில்லை,
உங்களுக்குதான் அனுபவிக்கத் தெரியவில்லை, என்னையும் ஏன் உங்களைப்போல மூடனாக ஆக்கப்
பார்க்கிறீர்கள்..... விவரம் இல்லாமல் எனது முன்னோர்கள் வாழ்ந்துவிட்டார்கள்,
உங்களைப் போல் மூடர்களாய். நான் இனி ஏமாறமாட்டேன்” என்றான்.
“செல்வத்தின் பயன் சுகம்தானே? உங்கள் பேச்சை என்னிடம்
காட்டவேண்டாம். நீங்களே வாழுங்கள் நல்மூடராக மூடர்களே.. நான் இப்போது விவரமாக
வாழுகிறேன். என்னை தொல்லை செய்யாதீர்கள் காட்டுமிராண்டிகளே - என்று பேசி துரத்திடுவான்
யார் சென்றாலும் எடுத்துச் சொல்ல.
மாதங்கள் நகர்ந்தன. ஆண்டு ஒன்றும் சென்றது. செலவனின்
செல்வம் தீர்ந்தது. ஒட்டியிருந்த அட்டைப்பூச்சிகள் வேறு இடம் தேடி விட்டுச்சென்றன.
செல்வன் தனிமரம் ஆனான். மது வாங்க பணம் இல்லை சட்டைப் பையில். கெட்டுப்
பொய் நோய் பிடித்த உடலுக்கு மருந்து வாங்கவும் வசதி இல்லை. வாட்டும் பசிக்கு எளிய
சோறு வாங்கக்கூட காசு இல்லை. கவலைகளை பகிர்ந்துகொள்ள ஒரு உறவும் உடன் இல்லை.
இனி சம்பாதிக்கலாம் என்றால் எந்தவேலையும் செய்து பழக்கம்
இல்லை. சம்பாதித்து பழக்கம் இல்லை. தெரிந்த ஒரே வேலை - செலவு செய்வது. அதற்கு எங்கும்
வேலையும் இல்லை. அதற்கு சம்பளமும் இல்லை.
வாடினான் செல்வன். இத்துணை நாள் உடன் இருந்த கூட்டத்திடம்
உதவிகேட்கலாமே என திரும்பிப்பார்த்தான். யாரையும் காணோம்.
எங்கே என்று எட்டிப்பார்த்தான்... அட்டைப்பூச்சிகள்
ஒட்டிக்கொண்டு இருந்தன வேறு ஒரு இளங்காளை இன்பச்செல்வனை!
இவனது நல்வாழ்வில் நாட்டம் இல்லாத, பணமே நாட்டம் என்று
இருந்த நாகரீக நயவஞ்சகர் கூட்டங்களையே கதி என்று இருந்தான் இன்பச்செல்வன், இன்று
துன்பச்செல்வன் ஆகிவிட்டான்.
இனி இவனை மதிப்பதற்கும் ஆள் இல்லை, ஏமாற்ற வரவும் ஆள்
இல்லை. நோய் பிடித்த உடல், வற்றிய தோல், வாடிய
முகம், குழிவுழுந்த கண்கள், எச்சில் வடியும் உதடுகள், அழுக்கு உடைகள், பிய்ந்த செருப்புகள்,
கிழிந்து தொங்கும் நாறும் சட்டைகள், பசிகிறது பசிக்கிறது என்று சொல்லத் தெரியாமல்
உள்ளுக்குள் அழும் வாடிய வயிறு... எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன் என்று
நினைத்துப் பார்க்கவும் தெம்பு இல்லாத மரத்துப்போன மனம்,.... தலையை வெடிக்கும் உச்சி
வெயிலில் கால்கடுக்க நடந்து அலைந்து ‘ஐயா சாமி ஏதாவது தருமம் செய்யுங்கோ’ என்று
கெஞ்சிக் கெஞ்சி பிச்சை கேட்டு தெருத் தெருவாய் நடக்கின்றான். இவனது முன்னாள்
பெயர் இன்பச்செல்வன், இந்நாள் பெயரும் அதுதான்! ஆனால் அது யாருக்கும் தெரியாது.
பரம்பரை செல்வம் எப்படியோ பாரதத்தின் பண்பாடும் ஒரு பரம்பரை செல்வமே! பண்பாடு என்றால் ஏதோ விபூதி, நாமம், தாலிக்கயிறு,... என்பது இல்லை.
அது ஒரு விஞ்ஞானப் பூர்வமாக பாதுகாக்கும் வாழ்க்கை முறை. ஆயிரம் ஆயிரம் தலைமுறைகளாக
விதவிதமான இன்னல்களை சந்தித்து, தீர்வுகளை கண்டறிந்து சேர்த்துச் சொன்ன அனுபவக்
கட்டிடம், செல்வக் களஞ்சியம்!
அதில் பிறந்து சுகமாய் வளர்ந்த இளங்காளை இந்தியச்செல்வனிடம்,
விடுதலைக்குப் பிறகு. அவசர அவசரமாக நாடு எனும் சொத்து கொடுக்கப்பட்டது.
பிறகு என்ன நடந்தது....
இன்பச் செல்வனின் கதையை ‘காப்பி’ செய்து இங்கே ‘பேஸ்ட்’
செய்யவும்!
நமது பண்பாடு மிகப் பெரிய வளம். உலகையே காக்கும், சந்தோஷமாக
வாழவைக்கும் திறமையை உடையது. ஒரு நிமிஷத்தில் சொல்லிப் புரிய வைக்க முடியாதது. ஆனால்
நிச்சயமாக நன்மை செய்வது. உலகில் வேறு எந்த கட்டமைப்பு தரும் பாதுகாப்பு நிம்மதி
சந்தோஷத்தை விட குறைந்தது நூறு மடங்காவது பாதுகாப்பு நிம்மதி சந்தோஷத்தைத் தரும்.
குழந்தைகளை பெற்று செல்லப் பிள்ளைகளாக வளர்த்து, சம்பாதிக்க
வழிசொல்லி, சொத்து கொடுத்து சென்றால் போதாது. இந்த பாதுகாக்கும் பண்பாட்டையும்
சொல்லித்தர வேண்டும். ஏனென்றால் வெளியில் காத்துக்கொண்டு இருக்கின்றன வர்த்தகக்
கம்பெனிகள் - அவனுக்கு சுகம் தருகிறேன் என்று சொல்லி - அவனை உறிஞ்சித் தள்ள.
இதிலிருந்து பாதுகாப்பை கற்றுக்கொடுப்பதுதான் குழந்தைகளுக்கு
செய்யும் முக்கியமான உதவி.
இதை பள்ளிக்கூடங்கள் கற்றுத் தராது. வித விதமான அட்டைப்பூச்சிகளிடம் சிக்க வைப்பதே கல்விநிறுவனங்களின் லட்சியமாக இருக்கிறது. அதனால் பெற்றோர்களான நாமே சரியாக கற்போம் -
குழந்தைகளுக்கும் நிச்சயமாய் கற்பிப்போம்! அதுவே அறிவுப்பூர்வமான - சரியான
பெற்றோரியல்!
0 comments:
Post a Comment