முன்
ஒரு காலத்தில் மூடர் நாடு என்று ஒரு நாடு இருந்தது. அங்கு ‘நேர்மையன்’ என்று ஒரு
கணவனும் ‘மனசாட்சினி’ என்று ஒரு மனைவியும் இன்பமாக வாழ்ந்து வந்தார்கள்.
-------
மாமா
இன்னிக்கு லீவு போட முடியாதா, எனக்கு ரொம்பவும் வலியா இருக்கு இன்னிக்கு. எனக்கு
தனியா இருக்க பயமாதான் இருக்கு.”
“இல்ல
டா தங்கம், இன்னிக்கு கம்பெனியோட இன்னொரு லாரி ஆக்சிடன்ட் ஆயிடுச்சி. நான்தான்
ஓனர் கூட போயி ஒத்தாசயா இருக்கனும். அவரும் கொஞ்சம் சந்தோஷமா ஆனார்ன்னா சம்பளம்
ரெண்டு நாள் முன்னாடியே தேவைப்படுதுன்னு சொன்னா கொடுப்பார். நாளைக்கு நாம
ஹாஸ்பிடலுக்கு போகலாம். கையில பணமும் இருக்கும்.
-------
மாமா,
இப்ப எங்க இருக்கீங்க. இங்க நிலைமை சரி இல்லை. ஒருவாரம் முன்னாடியே சர்ஜரி
பண்ணிடனும்ன்னு டாக்டர்ங்க சொல்றாங்க”
தங்கம்,
இப்ப நான் பஞ்சாபில இருக்கேன். லாரியும் ப்ரேக் டவுன் ஆயிக் கிடக்கு. நான் நாலு
நாளில வந்துடுவேன் பா. பணத்துக்கு நான் சேட்டுகிட்ட ஒரு லட்சம் வேணும்னு
கேட்டுருக்கேன். உன்கிட்ட தரதா சொன்னார். சாயந்தரத்துக்குள்ள உன் கைக்கு வரும்.
ஒரு
லட்சமா? எப்படிங்க திருப்பி கொடுக்கிறது?
தங்கம்,
அதையெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். குழந்தை பத்திரமா பிறக்கட்டும். நீ
எப்படியாவது மேனேஜ் பண்ணிக்க. நான் இன்னும் நாலு நாளில வந்துடுவேன்.
------------
ஏனுங்க
மாமா, உங்கள மாதிரி அப்படியே சேட்டை பண்றான் குழந்தை. நீங்க ஒருவாரம்
பத்துநாள்ன்னு வெளியூருக்கு வேலையா போகும் போதெல்லாம், எனக்கு எதிர்காலத்த நெனச்சு
பயமா வரும். இந்தக் குழந்தைய பார்க்கும் போதெல்லாம் இவனும் உங்கள மாதிரியே என்னை
நல்லாதனே பாத்துப்பான்ன்னு நெனைச்சா எனக்கு பெருமையா இருக்கும்.
தங்கம்,
உனக்கு ஏன் பயம். உன்னை நான் என்னிக்கு கைவிட்டேன். நானும் உன்னை சாகும் வரை விட
மாட்டேன். என் குழந்தையும் உன்னை விடமாட்டான். என் பையனாச்சே!
----------------
பையனுக்கு
இன்னிக்கு ஸ்கூல் பீஸ் கொடுத்து அனுப்பிடு. சாப்பாடு எனக்கு வேண்டாம். தம்பிக்கு
டப்பால சாப்பாடு போட்டு குடுத்திடு. என்னவோ தெரியல ஒருவாரமா சரியா பசியே இல்ல.
நான் இன்னிக்கும் வாழைப்பழம் சாப்பிட்டுக்கிறேன். என்னடா தங்கம், ஒரு சீப்பு
வாழைப்பழம் இருந்துச்சே காணோம்.
எனக்கும்
ஒரு வாரமா சரியா பசிக்கவே இல்லீங்க. நானும் தினமும் ஒரு பழம்தான் சாப்பிடறேன். சரி
பையனுக்கும் ஸ்கூல் பீஸ் தயார் பண்ணனுமே.”
------------------
ஏண்டி
மன்சி. நேத்து பையன் ரொம்ப நேரம் படிக்கிறத பார்த்தா எனக்கு ரொம்ப சந்தோஷமா
இருந்துச்சு. நீயும் அவனுக்கு இடையில் மூணு முறை டீ வெச்சு கொடுத்துகிட்டு
இருந்தியா எனக்கு இதுக்கு மேல சந்தோஷம் என்ன வேணும்?
ஆமாங்க
, பையனை எப்படியாவது நல்லா படிக்க வெச்சுட்டா போதும். அப்புறம் என்ன கவலை. அதனால
படிக்க வெக்க எவ்வளவு கஷ்டப்பட்டாலும் ஒன்னும் நஷ்டம் இல்லீங்க.
------------
ஏனுங்க
மாமா. பிரசவத்தில நமக்கு ரொம்ப ஒத்துழைப்பா இருந்தாளே மாமா பொண்ணு மல்லி. அவளோட
பையன் கல்யாணத்துக்கு நாம எல்லோரும் பையனோட ஒருநாள் முன்னாடியே வரணும்ன்னு
பிடிவாதமா இருக்கா.
பையன்
இந்த வருஷம் டென்த். படிப்பு பாதிக்குமே, பையன ஸ்கூலுக்கு அனுப்பிட்டு, நாம்
ரெண்டுபேரும் போயிட்டு, பையன் வரதுக்குள்ளே வந்திடுவோம். படிப்பு பாதிக்கக்
கூடாதில்ல.
-----------------
ஏனுங்க,
குலதெய்வம் கோவிலுக்கு போகணும். கும்பாபிஷேகமாம். மூணு பெரும் போயிட்டு
வந்திடுவோமே.
மன்சி.
பையன் ப்ளஸ் டூ படிக்கிறான். அவனை தொல்லை பண்ண வேண்டாம். நீ அவனை பார்த்துக்கோ.
கோவிலுக்கு நான் மட்டும் போயிட்டு பிரசாதம் கொண்டுவரேன். அது போதும்.
------------
மாமா,
பையன் கம்ப்யூடர் இஞ்சினீரிங் படிக்கணும்ங்கறான். அவனுக்குதான் நல்ல மார்க்
இருக்கே மெரிட்டிலியே கிடைச்சுடுமாம். மீதி படிப்பு
செலவ நாம பாத்துகிட்டா போதுமாம்.
எனக்கு
ஒன்னும் பிரச்சினை இல்லைடா தங்கம். குழந்தை பிறந்ததிலிருந்து நீ நல்ல சாப்பாட்டை
என்னிக்குமே பார்க்கல. மிச்சம் பண்ணி குழந்தைய படிக்க வெக்கிறதிலேயே இருக்க. நானாவது
ஆம்பள, கொஞ்சம் உடல் பலம் இருக்கறதால ஓடிகிட்டு இருக்கேன். நீயோ பலஹீனம், என்ன
பண்ணுவியோ. இப்படியே ஒவ்வொரு வருஷமும் ஒரு செலவ கொண்டு வா. சரியா சாப்பிடாத.
--------------
ஒன்னும்
ஆரம்பிக்காதீங்க. பையன் வளர்ந்துட்டான் அவனும் பத்து ரூபா சம்பாதிச்சுட்டான்னா
எல்லாம் சரியா போயிடும். அப்புறம் உங்க பையன் கையால நல்ல சோறு சாப்பிட்டா உங்க
கையால சாப்பிட்ட மாதிரிதானே. அதுலதான் எனக்கு மனசு பூரணமாவும்.
மன்சி,
எனக்கோ குழந்தை மேல அதிக பாசம் வந்துட்டதால் உன்னை சரியா கவனிக்க முடியாமலே
போயிட்டுது. சில நேரம் ரொம்பவே வருத்தமா இருக்கும். ஆனா என்னை விட நீ அவன் மேல
ரொம்பவும் நல்லா பாசமும் நம்பிக்கையும் வெச்சிருக்கே. எனக்கு எவ்வளவு சந்தோஷம்
தெரியுமா? உன் முன்னால நான் நிக்கவே முடியாது போல இருக்கு.
உண்மைய
சொல்லட்டா மாமா. எனக்கு உங்க மேலதான் உணமையிலேயே இன்னமும் காதலும் அக்கறையும் அதிகமா
இருக்கு. குழந்தைய நான் அக்கறையா பார்த்துகிட்டா நீங்க சந்தோஷப்படறீங்கல்ல. அந்த
மூஞ்சிய பார்க்க நான் எவ்வளவு வேணும்னாலும் கஷ்டப்படுவேன்.
---------
மாமா,
ஒன்னு சொல்லட்டா. ஆறு மாசமா பையனோட பாக்கட்டுல தினமும் சிகரெட் பாக்கெட் இருக்கு.
என்ன
சொல்ற மான்சி, ஏன் இத்தனை நாளா சொல்லல.
எனக்கு
சொல்ல பயமா இருந்துச்சு. உங்க மனசு கஷ்டப்படுமேன்னு. ஆனா, இன்னிக்கு அவனோட
டேபிளுக்கு கீழ ஒரு பாட்டில் இருந்துச்சு. அதனாலதான் சொல்லிடலாம்ன்னு சொன்னேன்.
லூசு,
அதான் நீ ஆறு மாசமா சரியா தூங்கவே இல்ல. அழுகிட்டே கிடந்த. இப்ப நாலு நாளா
சாப்பிடவும் இல்ல. என்னிக்கு பாட்டில பார்த்த.
நாலு
நாளா. தினமும் ஒன்னு.
அவனை
கண்டிச்சாதான் சரிவரும். நீயும் அப்பதான் ஒழுங்கா சாப்பிடுவ.
மாமா
இப்ப ஒன்னும் கேட்க வேணாம். இப்ப அவனுக்கு பரீக்ஷை நடந்துகிட்டு இருக்கு.ஏதாவது
பேசப்போய் அவனுக்கு பரீக்ஷைல மார்க் குறைய வேண்டாம்.....
----------
மாமா,
பையன் நல்லாதான் படிக்கிறான். நாமளும் தேவையான செலவெல்லாம் பண்றோம். நல்ல
மார்க்கும் வாங்கறான். அப்புறம் ஏன் கெட்ட பழக்கமெல்லாம் வருது?
யார்
கண்டா தங்கம். பள்ளிக்கூடத்தை நம்பறோம், கல்லூரியை நம்பறோம். அவங்களா குடிக்க
சொல்லித் தரப் போறாங்க?
இல்ல
மாமா. பதினஞ்சு வருஷம் படிச்சானே, தனக்கு எது நல்லதுன்னு கூட தெரியலைன்னா, அது
என்ன படிப்போ?
அதெல்லாம்
கெட்டதுன்னு கூடவா தெரியாது?
அதான்
டப்பாவிலேயும் பாட்டிலிலேயுமே அச்சடிச்சு போட்டிருக்கானுகளே.... உடம்புக்கு
கேடுன்னு. அதுக்கு பள்ளிக்கூடமும், கல்லூரியும் என்னப்பாபண்ணும்.
அது
சரி மாமா. நல்ல பண்பை கடை பிடிக்க வைக்கதானே பள்ளிக்கூடம் கல்லூரி எல்லாம் இருக்கு. சும்மா
படிச்சுட்டு இப்படி அழிச்சுக்கவா. அதுக்கு எதுக்கு பள்ளிக்கூடமும் கல்லூரியும்?
தங்கம்
, உன் கேள்வியெல்லாம் நியாயம்தான், ஆனா, நம்ம தலை எழுத்தை நினைச்சா இப்ப எனக்கு
அழுகையா வருது.
-----------------
மாமா,
பையனுக்கு மாசம் ஒரு லக்ஷம் சம்பளமாம். வர ஒன்னாம் தேதி முதல் மாச சம்பளம்
வந்துடும். பையனுக்காக வாங்கின படிப்பு செலவு , வைத்திய செலவுக் கடனை அடைக்க
ஆரம்பிச்சா வட்டி சுமையாவது குறையுமில்லையா?
அது
பாத்துக்கலாம் தங்கம். குழந்தை பிறந்ததிலிருந்து உனக்கு நான் நல்ல துனிமணியே
வாங்கித் தரலை. உன்னை அழைச்சுகிட்டு போயி ஒரு நாலு செட்டு டிரஸ் வாங்கணும்.
-----------------------
என்னங்க,
தேதி பத்தாச்சு பையன் சம்பளத்தைப் பத்தி எதுவுமே பேசல. நீங்களும் என்னை நானா எதுவும்
பையன்கிட்ட கேட்க வேணாம்னு சொல்லிட்டீங்க.
நாம
ஏன் பா கேட்கணும். அவனுக்கும் இதயம் இருக்குமில்லையா.
அவனோட
மேஜையில நாலு நாலா வைர வளையல் இருந்துச்சு. இப்ப அதை அழகா பேக் பண்ணி ஒரு பொண்ணோட
போடோ ஒட்டி லவ் வாசகம் எழுதி இருக்கான்.
என்னடி
தங்கம் சொல்ற. எனக்கு குழப்பமா இருக்கு.
-------------------
டாய் ரகு, யார் அவ, வளையல் பெட்டி ஃபோட்டோவில, அவளை கல்யாணம் பண்ண யோசிச்சின்னா என்கிட்டே பேச வேண்டாமா?
அப்பா, நான் ஒன்னும் அவளை
கல்யாணம் பண்ணப் போகலை. அவ எனக்கு கேர்ல் ஃபிரண்ட் அவ்வளவுதான்.
வளையல் என்ன விலை?
நாலு லட்சம்?
ஏது உனக்கு நாலு லட்சம்?
லோனில் வாங்கி இருக்கேன்.
இது என்ன, கையில கிஃப்ட் பெட்டி?
வைர நெக்லஸ்?
என்ன விலை
எட்டு லட்சம்.
ஏது பணம்?
அதையும் லோனில்தான் வாங்கி இருக்கேன்.
இது யாருக்கு டா?
அவளதான் நான் கல்யாணம் பண்ணப்போறேன்.
அவளுக்கு இது பிறந்த நாள் கிப்ட்.
--------------------
என்னங்க,
நம்ம பையனுக்கு ஆக்சிடென்ட்டாம். ஆர்.கே.ஹாஸ்பிடல் ஐ.சி.யூ.வில அட்மிட் பண்ணி
இருக்காங்களாம்.
சரி
பா, இப்ப வரேன். நீ நேரே ஹாஸ்பிடல் வந்துடு, நானும் வந்துடுறேன். ஃபோனை நீயே
கட்பண்ணு. லாரி ஓட்டிகிட்டு இருக்கேன்.
----------------
யாருப்பா
அந்தப் பொண்ணு அதுவும் இவனோடவே ஆக்சிடென்ட்?
சண்டே
பார்டி முடிஞ்சு, ரெண்டுபேருமே போதையில டூ வீலர்ல சுத்திகிட்டு இருந்தாங்களாம். அப்போதான்
ஆக்சிடென்ட்.
யாரு
அந்த பொண்ணு அவனோட கல்யாணம் பண்ணப் போற பொண்ணா, இல்ல அந்த கேர்ல் பிரண்டா?
ரெண்டு
பெரும் இல்லீங்க இவ வேற யாரோ புதுசாம்.
என்னன்னு
சொல்லி ஹாஸ்பிடலில சேர்த்திருக்காங்க. அவங்க வீட்லேர்ந்து யாரும் வரலையா?
பதிவு
பண்ண மனைவின்னு சொல்லி இருக்கான். அவளுக்கும் நாம தான் பணம் கட்டி இருக்கோம்.
என்னடா
தங்கம். நீ காலைலேர்ந்து ஒன்னும் சாப்பிடவே இல்லை. ஹோட்டலுக்கு வா சாப்பிடலாம்.
முதலில
பையனை பார்க்கலாம்ங்க.
----------------------
ஏன்டா
ரகு, நீ என்ன நினைச்சுட்டு இருக்கிற. வேலைக்கு போய் ஒரு வருஷம் ஆகுது வீட்டுக்கு
ஒன்னும் கொடுக்கலை. என்னென்னவோ செலவு பண்ற. இப்ப ஆக்சிடண்ட் நடந்து ஆறு மாசமாச்சு
எல்லோருக்கும் எவ்ளோ கஷ்டம். நீ என்னதான் நினைச்சுகிட்டு இருக்க. பணமெல்லாம் என்ன
ஆகுது?
என்
சம்பளம் என் பணம். நான் என்னவோ பண்ணுவேன். உங்களுக்கு என்ன?
ஆக்சிடென்ட்
வைத்தியத்துக்கு உங்க ரெண்டு பேருக்கும் சேட்டுகிட்ட வட்டிக்கி வாங்கி இருக்கேன்.
அதை
எல்லாம் நான் அடைச்சுக்கிறேன்.
யார்
அந்த பொண்ணு. இவ்வளவு செலவு வெக்கிறா?
அவ
வேற ஒரு கேர்ல் பிரண்ட்.
-----------------------
கல்யாணம்
பண்றதா சொன்னவ என்ன ஆச்சு?
அவளை
விட்டுட்டேன்.
இவளைதான்
கல்யாணம் பண்ண போறியா?
இல்லை.
வேற ஒருத்திய லவ் பண்றேன்?
இப்படியெல்லாம்
நடந்துக்காதே. எனக்கு கெட்ட கோபம் வரும்.
அப்பா
அளவுக்கு அதிகமா பேசாதீங்க. நான் ஒன்னும் உங்க இஷ்டத்துக்கு வாழ முடியாது. என்
பணம். என் வாழ்க்கை. என் இஷ்டத்துக்குதான் வாழுவேன். இது என்னோட வாழ்க்கை. என்னோட
உரிமை. நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம்.
எதிர்த்து
பேசாதே. சொன்னா கேள்.
உங்க
சவடாலை எல்லாம் யாராவது எழுதப் படிக்கத் தெரியாத, கட்டவண்டிக் காலத்து காட்டுப்
பசங்க இருப்பாங்க. அவங்க கிட்ட போயி காட்டுங்க. எங்கிட்ட முடியாது.
நான்
இனிமே உங்க வீட்டுக்கும் வரலை. போயி தொலைங்க.
-------------------------
என்ன
மாமா, ஒரு வாரமா சாப்பிடாம அழுதுகிட்டே கிடக்கீங்க.
மன்சி,
எனக்கு பையன் பிரிந்து போனது வருத்தம்
தான். ஆனா பையன் நல்லாருக்கணும்ங்கற என் விருப்பத்துக்காக, என் சந்தோஷத்துக்காக,
உன் இளமை சந்தோஷம் ஒய்வு எல்லாத்தையும் அடமானம் வெச்சு என் மகனுக்கு சேவை
செஞ்சியே. உன்னை ஏமாளியா ஆக்கிட்டேனே. அத நெனச்சா எனக்கு ரொம்பவே குற்ற உணர்ச்சியா
இருக்கு தங்கம்.
மாமா,
நீங்க என்ன இன்னமும் தங்கம்னு கூப்பிடரீங்கள்ல. அப்ப வர்ற சந்தோஷத்துக்கு நான் இன்னமும்
விலை கொடுக்கலாம்.
தங்கம்
உன் பையனைக் கெடுத்தவங்களை நான் பழிவாங்காம விட மாட்டேன்.
அவன்
நல்ல பையங்க. அவனுக்குன்னு யாரும் அவனைக் கெடுக்கும் சகுனி கிடையாது. அவன்
பள்ளிக்கூடம்தான் போனான் கல்லூரிதான் போனான். நல்லாதான் படிச்சான்.
ஆமா
தங்கம் இப்பதான் எனக்கு புரியுது. பள்ளி கல்லூரிதான் அவனது சகுனி.
-------------------
என்ன
மாமா கொஞ்சம் நாளாவே ரொம்ப நேரம் கழிச்சு வரீங்க. ஏதோ நெனைச்சு சிந்தனையாவே
இருக்கீங்க.
நான்
ஒரு நல்ல வக்கீலின் துணையுடன் கல்வித்துறை மேல கோர்டில கேஸ் போட்டிருக்கேன்.
நமக்கு
ஏனுங்க மாமா இந்த வேலை எல்லாம்.
தங்கம்
உன் கண்ணீருக்கு காரணம் ஆனவங்கள நான் விட மாட்டேன். அவன் படிச்ச பாடத்தைத் தவிர
அவனுக்கு வேற சகுனி இல்லை. அதுதான் உண்மை. நான் விடமாட்டேன்.
---------------
நீதிபதி
அவர்களே, கல்வி தருவதர்காகவே நாங்கள் எங்கள் எல்லா சுகங்களையும் அடமானம் வைத்து
படிக்க வைத்தோம். ஆனால் சரியான கல்வி போதிக்கப்படவில்லை. அதனால்தான் எனது மகனின்
வாழ்க்கை அழிந்தது.
நீதிபதிகள்
கவனிக்கவேண்டும். மகனின் வாழ்க்கை அழிந்து விட்டது என்று இவர் சொல்லுவதாலேயே
இவருக்கு மனநோய் இருக்கிறது என்பது நிரூபணம். மகன் மாதம் ஒரு லக்ஷம் சம்பளம்
பெறுகிறார். நல்ல கிரானைட் கல் பதித்த வீட்டில் வாழுகிறார். நல்ல கார், நல்ல பைக்
வைத்திருக்கிறார். நன்றாகவே வாழுகிறார்.
நீதிபதி
அவர்களே, படிக்க வந்தவனை ஒழுக்கமாக வாழ வைக்க முயாத கல்வி என்ன கல்வி?
சம்பாதித்தால் போதுமா?
மது
அருந்தக் கூடாது என்று திருவள்ளுவர் சொன்னார் என்று புஸ்தகத்தில் போட்டுதான்
இருக்கிறோம். அதை உங்கள் பையன் படித்துதான் மதிப்பெண் வாங்கி உள்ளான்.
ஆனால்
கல்லூரி முடிந்து கல்லூரிப் பேராசிரியரும் மாணவனும் ஒன்றாகவே மது அருந்தும்
பழக்கத்துடன் இருந்துள்ளார்கள். மது அருந்தும் ஒருவரை கல்வித்துறை எப்படி
பேராசிரியராக வைக்க முடியும்?
அது
அவர்களுடைய தனிப்பட்ட பிரச்சினை. கல்வித்துறை அதை எல்லாம் பார்க்க முடியாது.
புஸ்தகத்தில் இருப்பதை அவர் வகுப்பில் நடத்தி முடித்தார்.
அப்படி
என்றால் புஸ்தகத்தில் இருப்பதை படித்து எழுதி மார்க் வாங்கிவிட்டு பையன் எப்படி
வேண்டுமானாலும் வாழலாமா?
தாராளமாக.
அதை எல்லாம் கல்வித்துறை. சரியாக கண்காணித்து வழிகாட்டிக்கொண்டு இருக்க முடியாது.
அதெல்லாம் பெற்றோரின் வேலை.
பெற்றோருக்கு
பையனுடன் பழகவோ, பேசவோ நேரம் இருந்தது இல்லை. பள்ளிக்கூட பாட சுமை. பள்ளிக்கூடம்
செல்லத் துவங்கியதிலிருந்து பெற்றோரை மதிப்பதும் அவர்களின் பேச்சை ஏற்பதும்
குறையத் துவங்கிவிட்டது. படிக்கும்போது உறவினர்களுடன் பழக, மதிக்க நேரம்
இருந்ததில்லை. அதனால் இன்று அவன் உறவினர்கள் சொன்னாலும் கேட்பதில்லை. யாருக்கும்
அடங்காதவனாக இருக்கிறான்.
அதெல்லாம்
எங்கள் பொறுப்பு இல்லை.
ஏன்
இல்லை. உங்களை நம்பி என் வருமானத்தை எல்லாம் செலவு செய்தேன். மகனின் நேரத்தை
எல்லாம் செலவு செய்ய வைத்தேன்.
எங்களுக்கு
உள்ள கடமைகள் பற்றிய சட்டத்தில் இதையெல்லாம் செய்ய அனுமதியும் இல்லை, வாய்ப்பும்
இல்லை.
-----------------------
வாதி
தனது அடுத்த வாதத்தை துவக்கவும்.
நீதிபதி
அவர்களே, இவன் வளர்ந்து இன்று சம்பளம் வாங்குவதில் பலரின் பங்கு இருக்கிறது.
அவர்களுக்கு திரும்பச் செய்யும் கடமை உணர்ச்சியும் நன்றி உணர்ச்சியும் இவனுக்கு
இல்லை. அவைகளை ஏற்படுத்த வேண்டியது கல்வித்துறையின் வேலை. கல்வி அவனுக்கு வேண்டிய
எல்லா பண்புகளையும் கொடுக்கும் என்று நம்பிதான் பள்ளி கல்லூரிக்கு அனுப்பினோம், கஷ்டப்பட்டு
சுகங்களை அடமானம் வைத்து செலவும் செய்தோம்.
உங்கள்
குழந்தையை கல்விகற்க வர நாங்கள் ஒன்றும் உங்கள் வீட்டுக்கு வந்து கையைப் பிடித்து
இழுக்கவில்ல. நீங்கள்தான் அனுப்பினீர்கள். எங்கள் கல்வித்திட்டம் இவ்வளவுதான்.
இஷ்டம் இருந்தால் படிக்கவைக்கலாம்.
அவனை
சிறுவயதில் வேலைக்கு அனுப்ப நான் முயற்ச்சித்த போது குழந்தைத் தொழிலாளர் சட்டப்படி
அது தவறு என்று அவனை இழுத்து வந்து பள்ளிக்கூடத்தில் விட்டீர்கள்....
அது
எங்கள் துறை இல்லை. அது குழந்தை தொழிலாளர் ஒழிப்புத்துறை...
அடக்
கடவுளே. நான் என்ன ஒவ்வொரு துறையா இப்படி கேஸ் போட்டுக்கிட்டு அலைய முடியுமா? உங்களுக்கே
அறிவு இருக்கக்கூடாதா?
------------------------
தீர்ப்பு
அறிவிக்கப்படுகிறது. வாதி அவர்களின் வாதம் எந்த விதத்திலும் சட்டப்படி சரியாக இல்லாததாலும் .....
முடியாது
இதனை ஏற்க மாட்டேன், எது நியாயமோ அப்படித்தான் சட்டம் இருக்க வேண்டும். சட்டப்படி
எனக்கு தீர்ப்பு வேண்டாம் நியாயப்படிதான் தீர்ப்பு வேண்டும்.
நியாயப்படி
என்னால் தீர்ப்பு கூற முடியாது...
ஏன்
அப்படி?
சட்டப்படி
தீர்ப்பு சொல்லத்தான் எனக்கு சம்பளம் தருகிறார்கள். நியாயப்படி தீர்ப்பு சொல்ல
அல்ல.
முடியாது.
இதனை நான் ஏற்க மாட்டேன். உங்களை நீதிபதி என்றும் நான் ஏற்க முடியாது. இதனை நீதி
மன்றம் என்றும் நான் ஏற்க மாட்டேன். இங்கு நீதியே இல்லை.
இவர்
கோர்ட்டை அவமதித்த காரணத்திற்காக இவருக்கு இருபது ஆண்டுகள் சிறைதண்டனை
விதிக்கிறேன்.
முடியாது
நாங்கள் கட்டிய வரியில் சம்பளம் வாங்கி சாப்பிட்டுக்கிட்டு மோசமான தீர்ப்பையும்
கொடுக்கிறீங்களே நல்லா இருப்பீங்களா, நீங்க எல்லாரும் நாசமா போவீங்க.
இது
கோர்ட், நாகரீகமாக பேச வேண்டும்.
எதுக்காகடா
நான் நாகரீகமா உங்க கிட்ட பேசணும். உங்க பணத்தில நான் வாழறேனா? எங்க பணத்தில நீங்க
வாழறீங்களா? திருட்டு அயோக்கிய பசங்களா...
இது
கோர்ட், நாகரீகமாக பேச வேண்டும்.
முடியாதுடா
அநாகரீகப் பசங்களா. முதலில நாகரீகம்ன்னா என்னன்னு நீங்க தெரிஞ்சிக்கீங்கடா.
நாகரீகமா நீங்க முதலில சிந்திக்கப் பழகுங்க, நாகரீகமா வாழப்பழகுங்கடா பயித்தியம்....
இது
கோர்ட், நாகரீகமாக பேச வேண்டும்.
நாகரீகம்கறது
பேச்சிலயும் உடையிலையும், காரிலையும், டைல்சிலேயும் இருந்து என்னடா பிரயோஜனம் ?
சிந்தனையிளையும் வாழும் முறையிலையும் இருக்கணும். சார்ந்தவங்களை ஏமாத்தியும்,
வயிறெரிய வைத்தும் வாழ்வது நாகரீகமில்லை டா லூசுங்களா.....
இதையெல்லாம்
பற்றி சட்டத்தில் எதுவும் சொல்லப்படவில்லை.
சட்டத்தில்
இல்லைன்னாலும் பரவாயில்லை. உங்களுக்கு இதயம் இல்லையா. சொந்த அறிவு இல்லையா?
இதயப்படி,
சொந்த அறிவின்படி நான் தீர்ப்பு சொல்ல எனக்கு அனுமதி இல்லை. நான் சட்டத்தின்படிதான்
தீர்ப்பு சொல்ல முடியும்.
உனக்கு
யார் டா அனுமதி கொடுக்கனும். நான் நேர்மையாக எனது மனசாட்ச்சிக்கு வாழுகிறேனே.
எனக்கு யார் அனுமதி கொடுக்கனும். சட்டமா கொடுத்தது. என் இதயம்தான் கொடுத்தது.
நாங்கள்
இருப்பது அரசுப்பணி. நாங்கள் உங்களைப்போல இருந்தால் எங்கள் பதவியை பறித்துக்
கொண்டு, எங்களை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்.
கேவலம்
இந்த சம்பளத்துக்காக ஏன் மனசாட்சியை அடமானம் வைத்து, எங்களை கொடுமை செய்துகொண்டு,
அடியாட்களைப் போல அநியாயத்திற்கு வேலை செய்யவேண்டும்?
இது
கோர்ட், நாகரீகமாக பேச வேண்டும்.
உங்க
கோர்ட்டை, சட்டத்தை தூக்கி குப்பையில போடுங்கடா. அது என்னங்கடா குருட்டு சட்டம்?
இவர்
சட்டத்தை அவமதித்த காரணத்திற்காக இவருக்கு மேலும் இருபது ஆண்டுகள் சிறைதண்டனை
விதிக்கிறேன்.
அயோக்யப்
பசங்களா, நீங்கள்லாம் நாகரீகமான உடை, கல்லூரி சர்டிபிகேட், என்ற போர்வைகளுக்குள்
இருக்கும் திருட்டு ரௌடிக் கூட்டமடா...
வாதிஅவர்கள்
மன நிலை பாதிக்கப்பட்டவர் என்று அறிவிக்கப்படுகிறது. அதனால் அவரை மனநிலை
சிகிச்சைக்கும், மன நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறைச்சாலையில் அடைக்கவும்
தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-------------
ஏன்மா
, இது போலீஸ் வேன். இதுக்கு முன்னால வந்து படுத்துகிட்டு அழுது புலம்பிகிட்டு
கிடக்கீங்க. எழுந்து எட்ட போங்க.
வேனில
இருக்கற என் வீட்டுக்காரரை விட்டாதான் நான் எழுந்திருப்பேன். கடவுளே... எனக்கு ஏன்
இந்த சோதனை சாமி...
சட்டப்படி
அவரை சிறையில் அடைக்க தீர்ப்பு வந்திருக்கு நாங்க விட முடியாது, வழி கொடும்மா.
ஓரமா போ.
முடியாது.
நான் எழுந்திருக்க மாட்டேன். நீங்க அவரை இறக்கி விட மாட்டீங்கன்னா ஏன் மேலே வேனை
ஏத்தி என்னை கொலை பண்ணிட்டு அவரை அழைச்சுகிட்டு போங்க.... கடவுளே எனக்கு ஏனப்பா
இப்படி ஒரு விதி.... நான் என்ன பாவம் பண்ணினேன்.... பிள்ளைய பள்ளிக்கூடம்தானே
அனுப்பினேன்.
-------------
நீதித்துறையின்
சட்டங்களின் படி, நடந்த சம்பவங்களின்படி, வாதியுடைய மனைவியும் மன நோயாளி என்று
அறிவிக்கப்படுகிறது. அவருக்கும் மன நோய் சிகிச்சைகள் அளிக்க உதரவிடப்படுகிறது.
சட்டம்
தன் வேலையை செய்ய தடையாக இருந்ததால் அவருக்கும் இருபது ஆண்டுகள் சிறைதண்டனை
அளிக்கப்படுகிறது.
-------------
யாரை
நினைத்து வருத்தப்படுவது? மூடரூரை நினைத்தா? அல்லது நேர்மையன் மனசாட்சினி தம்பதியை
நினைத்தா?
யார்
திருந்தவேண்டும் இப்போது? மூடரூர் சட்டமா? நேர்மையன் மனசாட்சினிகளா?
0 comments:
Post a Comment