என்னைக் கொஞ்சம் கொல்லுங்களேன் - இப்படிக்கு உங்கள் அன்புக் குழந்தை !

Leave a Comment

பாசமுள்ள அம்மா அப்பாவுக்கு
பயத்துடன் உங்கள் அன்புக் குழந்தை
என்னை சிறு எறும்பு கடித்தாலும்
துடித்துக் கண்ணீர்விடும் அன்புப் பெற்றோரே....
ஒரு விஷயத்தில் நீர்
கல்நெஞ்சர் ஆவது ஏனோ?
பள்ளிக்கூடங்கள் என்னை
சித்திரவதை செய்வதை மட்டும்
நீர் பெருமையாகப் பார்ப்பது ஏனோ?

கொளுத்தும் வெயிலிலே
வேக வைக்கும் கட்டிடத்திலே
தலை முதல் பாதம் வரை 
இறுக்கி மூடி துளி காற்றையும் விடாமல்
கழுத்தை அறுக்கும் அழகிய டை
கால்களை வேகவைக்கும் பளபளக்கும் ஷூ
இடுப்பை இருக்கும் பலமான பெல்ட்
உடலை வறுத்து எடுக்கும் 
இன்னர் அவுட்டர் டிரஸ்

யார் கண்களுக்கோ நாங்கள் 
அழகாக தெரியவேண்டும் என்பதற்காக 
எங்களை ஏன் இப்படி 
சித்திரவதை செய்ய வேண்டுமோ?
நாங்கள் பிஞ்சுக் குழந்தைகள்
எங்களுக்கு சொல்லத் தெரியவில்லை
அப்படியே தடுமாறி சொன்னாலும் 
நீ சின்னக் குழந்தை 
உனக்கு ஒன்றும் தெரியாது 
என்று உதறித் தள்ளும் அறிஞர் நீங்கள்!

கருணை அற்ற கொலைக் கும்பலைப் போல
வேகவைக்கும் வெயிலில் 
எங்களை பள்ளிக்கூடங்கள்
சீருடையில் வேகவைத்து வாட்டிவதைப்பதை
நீர் பெருமையாகப் பார்ப்பது ஏனோ?

வெள்ளையன் நாடு குளிர் நாடு
பனிக்காற்று வீசும் நாடு
அவன் மூடத்தான் வேண்டும்
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை
அவனைப் போல என்னை ஆக்க வேண்டும்
என்ற வெறிக்கு நான் பலி ஆகுவதை
நீர் பெருமையாகப் பார்ப்பது ஏனோ?

இதன் பெயர்தான் நாகரீகம் என்றால்
இப்படித்தான் வாழவேண்டும் என்றால்
வேறு வழி இல்லை என்றால்
தவறு என்னிடம்தான், அது
இந்த நாட்டில் பிறந்தது
உங்கள் வீட்டில் பிறந்தது
அதற்காக என்னை
மன்னியுங்கள் பெற்றோர்களே....

ஒரே ஒரு உதவி செய்யுங்கள் எனக்காக
சீக்கிரம் என்னை கொன்றுவிடுங்கள்
நான் குளிர் நாட்டில் பிறந்துகொல்கிறேன்
என் தவறுக்காக இந்த நாடு எனக்கு
தூக்குத்தண்டனை கொடுத்தால்
நாம் மிகவும் மகிழுவேன்
தினமும் சாகவேண்டாமே
பள்ளிக்கூடத்திலே....

நான் வயதில் சிறியவன்,
பேசிப் புரிய வைக்கத் தெரியாத
பிஞ்சுக் குழந்தை, என்றெல்லாம்
என்னை உணர்ந்து நேற்று வரை
கொஞ்சி வளர்த்த தாயே  தந்தையே
பள்ளிக் கூடங்களிலே நான்
நாள் முழுவதும் வாட்டி எடுக்கப்பட்டு
வீட்டிலும் வீட்டிலும் வீட்டுப்பாடம் எனும்
ரிமோட் கண்ட்ரோல் மூலம் வாட்டப்படுவதை
நீர் பெருமையாகப் பார்ப்பது ஏனோ?

உங்கள் அன்புக் கணக்கு எனக்கு
காதில் விழுகிறது தாயே தந்தையே
‘எல்லாம் என் எதிர்கால வாழ்க்கைக்காக’
என்பதுதானே
என்மேல் உங்கள் அக்கறை
தாயே தந்தையே கெஞ்சிக் கேட்கிறேன்

அந்த எதிர்காலம் வரும்போது
கொஞ்சம் என்னை
வாழாது கொல்லுங்களேன்
அது வரை நான்
கொஞ்சம் நிம்மதியாக
வாழ்ந்துகொள்வேனே

இப்படிக்கு
தாங்க இயலாத துயரத்தில்
பாசத்துடனும்  பயத்துடனும்
உங்கள் அன்புக்குழந்தை!


0 comments:

Post a Comment