கதை- “ஹையா ஜாலி ஜாலி இன்னிக்கி ஸ்கூல் லீவு....”

Leave a Comment
பெற்றோர்களே , ஆசிரியர்களே, பள்ளிக்கூடங்களே,.... நேரம் கிடைக்கும்போது அவசியம் இதை ஒரு ஐந்து நிமிடம் படியுங்கள்.... 

ஒரு உண்மை சம்பவம் எனது மனதை கவலைப்பட வைத்தது, சிந்திக்க வைத்தது. பாத்திரங்களின் பெயரை மாற்றி கதையாக தந்துள்ளேன். 


கதை- 

“ஹையா ஜாலி ஜாலி இன்னிக்கி ஸ்கூல் லீவு....”

“ஏன்டி வானதி உன் பையனுக்கு ரிசல்ட் சொல்லிட்டாங்களா?”

“மாலதியா ... வா வா, எப்படி இருக்கே? வா உள்ள வந்து உட்காறேன் டா.”

“வானதி, என் பையன் வினுவுக்கு ரிசல்ட் சொல்லிட்டாங்க தெரியுமா, இந்த முறை பர்ஸ்ட் ராங்கில் வந்துட்டான்.”   

“உன் பையன் ஃபிஃப்த் படிக்கிறான், இவன் என்ன ஃபோர்த் தானே படிக்கிறான்.”  



“அதனால.... ஃபர்ஸ்ட்எல்லாம் வேண்டாம்ங்கரியா, சொன்னா கேளு வானதி. நீ எப்பவுமே குழந்தைங்களோட படிப்பு விஷயத்துல கவனக்குறைவாவே இருக்க. இப்பவே அவங்கள நல்ல மார்க் வாங்க வெச்சாதான் பெரியவனா ஆன பிறகும் நிறைய மார்க் வாங்குவான். நல்லா சம்பாதிக்க முடியும். உன் குழந்தையின் நன்மைக்குதானே சொல்றேன்.   பிறகு வருத்தப்படாதே. சரி குழந்தை எங்க போயிட்டான்.”

“அவன் எதிர் வீட்டுத் தாத்தா கூட போயிருக்கான்டீ. அவர்கூட விளையாண்டுட்டு பேசிட்டு வருவான். இன்னிக்கு ஸ்கூல் லீவுதானே.”

“வானு , சொன்னா கேள். ஸ்கூல் லீவுன்னா விளையாடப் போகனுமா? உட்கார்ந்து ஹோம்வொர்க் செய்ய சொல். படிக்க சொல். இப்பவே படிச்சாதானே ஹாஃப் இயர்லி எக்ஸாம் வரும்போது நல்ல மார்க் வரும். நான் பார் என் பையன் வினுவை வீட்டில படிக்க வெச்சுட்டுதான் வர்றேன். நாம எப்பவும் குழந்தைங்களோட எதிர்கால விஷயத்துல கவனமா இருக்கனும்.”

“இல்லடீ ஏற்கனவே அவங்க ஸ்கூலிலே ரொம்பவும் டார்ச்சர் பண்றாங்கன்னு பையன் அழறான். நாமவேற ஏன் சேர்ந்து கஷ்டப்படுத்தணும்ன்னு நினைச்சுதான் விட்டுட்டேன்.”

“இல்லடீ வானு. நாம இப்பவே இப்படி விட்டுட்டோம்னா எதிர்காலத்துல படிக்கவே மாட்டங்க. சொன்னபேச்சையும் கேட்க மாட்டங்க. எதிர்த்தும் பேசுவாங்க. இப்பவே கண்ட்ரோல் பண்ணினாதான் நல்லது. புரிஞ்சிக்கோ.”

“சரி மாலி, நானும் எப்பவுமே நீ சொல்ற மாதிரிதான் செய்ய பார்க்கிறேன். உன் பையன் பறவையில்லை. நீ சொன்னா கேட்டுக்கறான். என் பையன் நான் சொன்னா கேட்கறதே இல்லை.”

“அது எப்படிடீ சொல்றே, எல்லாம் நாம வளர்க்கறதிலதான் இருக்கு.”

“சரி டீ, நானும் இனிமேல் கவனமாவே இருக்கேன்.”

“வானு, எனக்கு நீ ஒரு ஹெல்ப் பண்ணனும்”

“என்னடி.”

“நாளைக்கு பையனை ஸ்கூல் அனுப்பிட்டு நான் வெளியில போறேண்டி. திரும்பி வர லேட் ஆகும். பையன் வினு திரும்பிவந்தான்னா இங்கதான் ராத்திரி வரை இருக்கணும். எட்டு மணிக்கு வந்து கூப்பிட்டுக்கறேன்.”

“அதுக்கென்னடி, தாராளமா இங்க இருக்கட்டும். இது அவன் வீடு.”

“அதனாலதான் டீ எனக்கு பயமா இருக்கு , இங்க வந்தான்னா. விளையாண்டுகிட்டே இருந்துடுவான். நீயும் கண்டிச்சு படிக்கவெக்கமாட்டே”.

“சரிடீ மாலி, உனக்கு என்ன, அவனை படிக்க வைக்கணும். அவ்வளவுதானே. சரி அனுப்பு நான் பார்த்துக்கறேன்.”

“நேரத்தை வீணாக்காம, வந்ததும் ஏதாவது சாப்பிடக்கொடுத்து, படிக்க வை. நான் வர்ற வரை படிக்கட்டும். கண்டிச்சு படிக்கவைடீ, உன் பையனையும் சேர்த்துதான்....”

‘புரியுதுடீ... நீ என் நன்மைக்கும் சேர்த்துதான் யோசிப்பே...”
 

அடுத்தநாள். மாலதி குழந்தைகள் மாலையில் வருவார்களா என நினைத்துக் காத்திருந்தால், மதியம் பனிரெண்டு மணிக்கே காலிங் பெல் அடித்தது! வானதி கதவைத் திறந்தால்... தன் குழந்தையும் மாலதியின் குழந்தையும் பள்ளிக்கூடத்திலேர்ந்து வந்துவிட்டார்கள். அவளுக்கு ஆச்சர்யம்.

“ஹேய், என்ன சீக்கிரமா வந்துட்டீங்க... “

“ஹய்யா, ஜாலி ஜாலி இன்னிக்கு ஸ்கூல் லீவு!”

“ஏன் பா என்ன ஆச்சு....?”

“இன்னிக்கு எங்க சயின்ஸ் மிஸ் லீவு அதனாலதான்.... ஹய்யா ஜாலி ஜாலி இன்னிக்கு ஸ்கூல் லீவு!” ஒரே உற்சாகமாக உள்ளே நுழைந்தார்கள்...

“சரிப்பா, அவங்க லீவுன்னா எதுக்கு ஸ்கூல் லீவு விட்டாங்க?”

“அது..., அவங்களோட.... ஹஸ்பன்ட்.... இன்னிக்கு.... ஆக்சிடன்ட்ல இறந்துட்டாராம்.... ஹய்யா ஜாலி ஜாலி இன்னிக்கு ஸ்கூல் லீவு.” என்று சொல்லிக்கொண்டே ஸ்கூல் பேக்கை தூக்கி எறிந்தார்கள். உற்சாகமாக விளையாடத் துவங்கினார்கள்...

கிரிக்கெட் பேட் பாலை எடுத்துக்கொண்டு விளையாட ஓடினார்கள்.... விளையாடத் துவங்கினார்கள்... ஒரே குஷியில் சப்தமாக இருவரும் கூவிக்கொண்டே... “ஹய்யா, ஜாலி ஜாலி இன்னிக்கு ஸ்கூல் லீவு!”


“அடக் கடவுளே....” வானதியின் கண்களில் நீர் துளிக்கத் துவங்கியது.... குழந்தைகளை கருணையின்றி கஷ்டப்படுத்தி வளர்த்தால்... அவன் மனம் இப்படித்தான் வேலைசெய்யுமா... 

"அவனுக்கும் கருணை என்றால் என்ன என்றே தெரியாதா, ஈவு இரக்கமே வராதா, அடுத்தவர்களின் கஷ்டத்தை மதிக்கமாட்டானா, இப்படியே வளர்ந்தால் நாளை இவனுடன் வாழப்போகும் மனைவி குழந்தைகளின் நிலை என்னவோ...

"நானும் கஷ்ட்டப்படுத்தி வளர்த்தால்... நாளை என் நிலை...

"என் தலை எழுத்தும் இதுதானே..."

அவள் மனம் பலவாறு சிந்திக்கத்துவங்கியது...

கண்களில் நீர்த் தாரை பெருக , களைப்புடன் போய் கட்டிலில் சாய்ந்தாள்....

நேற்று மாலதியுடன் நடந்த உரையாடல் அவள் மனதில்... ஓடத்துவங்கியது...

“அதனாலதான் டீ எனக்கு பயமா இருக்கு , இங்க வந்தான்னா. விளையாண்டுகிட்டே இருந்துடுவான். நீயும்கண்டிச்சு படிக்கவெக்கமாட்டே”.

“சரிடீ மாலி, உனக்கு என்ன அவனை படிக்க வைக்கணும். அவ்வளவுதானே. சரி அனுப்பு நான் பார்த்துக்கறேன்.”

“வானு , சொன்னா கேள். ஸ்கூல் லீவுன்னா விளையாடப் போகனுமா. உட்கார்ந்து ஹோம்வொர்க் செய்ய சொல். படிக்க சொல். இப்பவே படிச்சாதானே ஹாஃப் இயர்லி எக்ஸாம் வரும்போது நல்ல மார்க் வரும். நான் பார் என் பையன் வினுவை வீட்டில படிக்க வெச்சுட்டுதான் வர்றேன். நாம எப்பவும் குழந்தைங்களோட எதிர்கால விஷயத்துல கவனமா இருக்கனும்.”

“இல்லடீ ஏற்கனவே அவங்க ஸ்கூலிலே ரொம்பவும் டார்ச்சர் பண்றாங்கன்னு பையன் அழறான். நாமவேற ஏன் சேர்ந்து கஷ்டப்படுத்தணும்ன்னு நினைச்சுதான் விட்டுட்டேன்.”

“இல்லடீ வானு. நாம இப்பவே இப்படி விட்டுட்டோம்னா எதிர்காலத்துல படிக்கவே மாட்டங்க. சொன்னபேச்சையும் கேட்க மாட்டங்க. எதிர்த்தும் பேசுவாங்க. இப்பவே கண்ட்ரோல் பண்ணினாதான். புரிஞ்சிக்கோ.”

‘புரியுதுடீ... நீ என் நன்மைக்கும் சேர்த்துதான் யோசிப்பே...”

“நேரத்தை வீணாக்காம வந்ததும் ஏதாவது சாப்பிடக் கொடுத்து படிக்க வை. நான் வர்ற வரை படிக்கட்டும். கண்டிச்சு படிக்கவைடீ, உன் பையனையும் சேர்த்துதான்....”


அவளது கண்களில் நீர்த் தாரை பெருகியது. கோவென்று கதறி அழவேண்டும் போல இருந்தது... அவளது மனதில் ஆயிரம் ஆயிரம் கேள்விகள் எழுந்து பயமுறுத்தின... அவைகளை வெளியிலும் சொல்லவும் முடியாது.... தனக்கும் பதில் தெரியவில்லை...

மேலே.. அவளை விட்டு பிரியாமல் இருந்து வரும் ஒன்றே ஒன்று - சீலிங் ஃபேன்..... ஹீங் ஹீங் என்று சத்தம் போட்டுக்கொண்டு, எனக்கென்ன என்று சுற்றிக்கொண்டிருந்தது. உயிரற்ற பேனுக்கு, அவளது உணர்ச்சிகளையும் கண்ணீரையும் புரிந்துகொண்டு அணைக்க, ஆறுதல் சொல்ல, தெளிவைக் கொடுக்க , தீர்வை சொல்ல... எப்படி முடியும் அதுதான் மனிதனைப் புரிந்துகொள்ள முடியாத ஜடமாச்சே...

அவளது தனிமை அவளை வாட்டியது....






0 comments:

Post a Comment