பாரதக் கல்வி முறை - பூரணவித்யா !

Leave a Comment
உலகில் கல்வியைப் பற்றி நிறைய நவீன கருத்துக்கள் காணக் கிடக்கின்றன. இவைகளுக்கு இடையில் பல ஆயிரம் தலைமுறைகளாக பாரதம் கொண்டு இருந்த கல்வி பற்றிய கண்ணோட்டம் மிகவும் சிந்திக்க வைப்பதாக இருக்கிறது.
ஒருவேளை இன்று நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க, ஏன் உலகின் பிரச்சினைகளை தீர்க்க இந்த முறை கல்வி ஒரு முக்கியமான தீர்வாக இருக்க முடியுமே என்று பரிசீலிக்க வேண்டிய ஒரு தகுதி உள்ள கண்ணோட்டமாகவும் இருக்கிறது. 

பாரதக் கல்வி முறை
பாரதக் கல்விமுறையானது - ஒருவன் ஒரு விஷயத்தை மனப்பாடம் செய்தவுடன் அவன் அந்த விஷயத்தை கற்றதாக ஒப்புக்கொள்வது இல்லை; ஒருவேளை அவன் அதனை பொருளைப் புரிந்தே மனப்பாடம் செய்து இருந்தாலும் கூட!
கல்வி எப்போது முழுமை பெற்றுள்ளது என்றால், அதாவது ஒருவனது கல்வி எப்போது முழுமை அடைந்தது என்றால் - கற்ற விஷயம் ஒருவனுக்கு முழுமையான பலனைத் தரும்போதுதான் என்கிறது.
அதாவது ஒருவன் ஒரு விஷயத்தைக் கற்று - அதன் பலனை அவன் அவனது வாழ்வில் இன்னமும் பார்க்கவில்லை அனுபவிக்கவில்லை என்றால் அவனது கல்வி இன்னமும் முடிவடையவே இல்லை என்கிறது பாரதீய கல்விமுறை!
அதாவது ஒருவன் ஒருவிஷயத்தை முதலில் கேட்கிறான். பிறகு மனனம் செய்கிறான். பிறகு அதன் பொருளைப் புரிந்துகொள்கிறான். பிறகு அந்தப் பொருளில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொள்கிறான். பிறகு அந்த நியாயத்தின் தோல்வி இன்மையைப் புரிந்துகொள்கிறான். பிறகு அந்த நியாயத்தின் மாற்றுக் கருத்துக்களின் தோல்வியை அறிகிறான். பிறகு மாற்றுக்கருத்துக்கள் நன்மையை செய்ய முடியாது, தொல்லையை செய்யலாம் அல்லது செய்ய முடியலாம் என்பதை அறிகிறான். பிறகு கற்ற நியாயம் நன்மை தரக்கூடியது என்பதை அறிகிறான். பிறகு அந்த நன்மையுடன் வாழ்வதுதான் புத்திசாலித்தனம் என்பதை அறிகிறான். பிறகு வேறு வழி இல்லாமல் அவனது மனம் அந்தக் கருத்திற்கு ஏற்பவே வாழவே முடிவு செய்கிறது. அதனால் அதில் வரும் சிரமங்களை அவனது மனம் சிரமமாகவே பார்ப்பதில்லை. மிக சுலபமாகவே கற்ற வழியே வாழ்கிறான்!
பாரதீய கல்வி முறையின் தேர்வும் கூட வித்தியாசமானதே. ஒருவனால் ஒரு நியாயத்தை நடைமுறை வாழ்வில் கடைபிடிக்க முடியவில்லை என்றால் கல்வியை அவன் கற்று முடிக்கவில்லை என்கிறது.
[ அதாவது 3X4=12 என்று தேர்வில் எழுதிய ஒருவன் எப்போதாவது 3X4=34 என்று பயன்படுத்தினால், அவன் இன்னமும் 3X4=12 என்பதை சரியாக கற்கவில்லை. ஏனென்றால் சரியாகக் கற்று இருந்தால் அவனால் 3X4=34 என்று பயன்படுத்த முடியாது என்கிறது! ]
வெள்ளையர்களின் மெக்காலே கல்விமுறை வரும் முன்பு வரை நம் நாட்டில் கல்வி முறை இப்படித் தான் இருந்தது. உலகில் எங்குமே இப்படி ஒரு கண்ணோட்டமே இருந்தது இல்லை.
உதாரணமாக, மெக்காலே கல்விமுறை இன்றும் தொடர்கிறது. இந்தக் கல்வி முறையின் படி ஒருவன் மது உண்ணாமை பற்றி தேர்வில் மிக நன்றாக எழுதுகிறான். தேர்வில் எழுதிவிட்டு அன்று இரவே மது அருந்தி சாலையில் விழுந்து கிடக்கிறான் என்றாலும் கூட அவனுக்கு முழு மதிப்பெண்ணும் கிடைக்கும். கல்வித்துறையைப் பொருத்தவரை அவனுக்கு முதல் மதிப்பெண்ணும் கொடுக்கும்.
அரசுத் தேர்வுமுறை அவனுக்கு மதிப்பெண்ணுக்கு உரிய பதவியையும் கூட கொடுக்கும்.
இன்றைய கல்வித்துறை சொல்கிறது இவன் நன்கு கற்றவன் என்று. ஆனால் தொல்காப்பியரும், திருவள்ளுவரும், அகத்தியரும், பதஞ்சலியும், வியாசரும், வால்மீகியும்,... இன்னும் ஆயிரம் ஆயிரம் கற்றறிந்த சான்றோரும் இவன் கல்வி கற்றதாக ஏற்பதில்லை!
ஒருவன் கல்வியை உண்மையில் கற்று இருந்தால் கற்ற வழியிலிருந்து அவனால் விலக முடியாது - வருத்தம் இன்றி, முனுமுனுப்பு இன்றி!
அப்போது தான் அவன் கல்வியைக் கற்றவன்!
அதனால் அதிக விஷயங்களை மனப்பாடம் செய்ததாலோ, அதிக மதிப்பெண்களை தேர்வில் பெற்றதாலோ, ஆராய்ச்சிகள் பல செய்து முனைவர் பட்டம் அல்லது டாக்டர் பட்டங்களைப் பெற்றதாலோ ஒருவன் கற்றவன் என்றால் அது நகைக்கைத் தக்க விஷயம் என்கிறது பாரதீயக் கல்வி முறை.
அப்படி ஒருவன் கல்விபயனை அனுபவிக்க வைக்கத்தான் கல்வியே அன்றி ஒருவனை தகல்களின் சுமையை தூக்குபவனாக ஆக்குவது அல்ல என்கிறது. மேலும், கல்வி என்ற பெயரிலோ அல்லது வேறு பெயரிலோ ஒருவன் வாழ்வில் பயன்தராத முறையில் தகவல்களை சேகரிப்பதையும் கூட பாரதீய கல்விமுறை ஏற்பதில்லை.
அதனைப் பொருத்தவரை அப்படி ஒருவன் கற்றால் அவன் சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் ஏன் தனக்கும் கூட அழிவைத்தரும் நோயாக இருப்பான் என்பது பாரதீய கல்வி முறையின் கொள்கையாக இருந்துள்ளது!
இன்றைய கல்வி முறையால் வந்தவர்களின் வாழ்க்கையைப் பார்க்கும்போது இந்த வாதம் எவ்வளவு உண்மை என்பது விளங்குகிறது. மேலும் நமது அரசுகள் ஏன் பூரணமான இந்தக் கல்வி முறையை கைவிட்டு சுதந்திரத்திற்குப் பிறகும்கூட மெக்காலேவின் கல்விமுறையையே வைத்துக்கொண்டு உள்ளது என்று ஐயங்களை மனதில் எழுப்புகிறது.  

பூரண வித்யா சாதனங்கள்

ஒருவன் பூரண விதிவினை அடைய சாதனங்களையும் பாரதீய கல்வி முறை கொடுக்கிறது. அதன்படி....
கல்விப் பாடத்திட்டத்தை முழுமையாக மனனம் செய்வதால் அல்லது மனப்பாடம் செய்வதால் கல்வியின் கால்-பாகத்தை முடிக்கிறான்!
கற்றவைகளை கற்றவர்களுடன் மீண்டும் அலசி ஆராய்தல், கடைபிடித்து சோதித்தல், அதில் வரும் சிரமங்களுக்கு தீர்வுகாணுதல் இவைகளின் மூலம் கால்-பாகம் கல்வியை முடிக்கிறான்!
கற்றவைகளை மற்றவர்களுக்கு போதனை செய்யும்போது, கற்க கடைபிடிக்க வழிகாட்டும்போது இன்னொரு கால்-பாகத்தை கற்கிறான்.
இப்படி வாழ்ந்து போதிய காலம் கல்வியின் ஞானத்தில் முழுகிக்கிடப்பதால் மீதி கால்-பாகம் கல்வியை அடைகிறான்!
எப்படி என்றால், ஒரு விதை முளைக்க... நல்ல மண், மண்ணில் எரு அல்லது உரம், தண்ணீர், காற்று, சூரிய ஒளி இவைகள் தேவை.
விதையை நல்ல மண்ணில் போட்டு தேவையான மற்ற காரணிகளைகொடுத்துவிட்டு அண்ணாந்து பார்த்தால் மரம் வளர்ந்து இருப்பதில்லை. போதிய காலம் கொடுக்கவேண்டி உள்ளது!
இப்போது நாம் எங்கே ஏமாறுகிறோம் என்பது புரியும். கல்வி அறிவு உள்ளவர்களால் இந்த நாடு காப்பாற்றப்படும் என்று சொல்லும் போது - உண்மையான கல்வி அல்லது முழுமையான கல்வி உள்ளவர்களையே காணோம். சொல்லப்போனால் கால்-பாகக் கல்வியை உடையவர்களையே நாம் கல்வி கற்றவர்கள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோம். கல்வித்துறையும் சொல்லுகிறது, அரசும் சொல்லுகிறது - நம்புகிறது.
அப்படி கால்-பாக கல்வி உள்ளவர்களின், நாட்டின் மீதான பலவித சீர்திருத்த முயர்ச்சிகளாலும் புதிய பல சோதனை முடிவுகளாலும்   இந்த நாடு ஏராளமான சோதனைகளை தாங்கி தனது சிறப்புகளை இழந்து வருவதை கண்கூடாகவே பார்க்க முடிகிறது.
நாட்டின் நிலை எப்படியோ, உண்மையான கல்வியாளனாக வாழ விரும்பும் ஒருவன் எந்த நாட்டை சேர்ந்தவனாக இருந்தாலும், எந்தக் கால கட்டத்தை சேர்ந்தவனாக இருந்தாலும், இந்த நான்கு கல்வி சாதனங்களை பயன்படுத்தினால் அவன் உண்மையான கல்வியின் பலனை அடைந்து பூரண வாழ்வினை அடைவான். மற்றவர்களுக்கும் நன்மையையே செய்வான்.
அவனே மனித வர்கத்திற்கு நம்பத்தகுந்த ஒரு மனிதன். அவன் சமூகத்திற்கு ஒரு ஈடு இணை அற்ற பரிசு!
இந்தக் 'பூரணக் கல்வி' முறையினால்தான் நம் பாரத நாடு முன்பு உலகை வியக்க வைத்து உலகில் சிறந்த நாடாக பலகாலம் திகழ்ந்தது! உலகின் கவர்ச்சியான மையமாக இருந்து உலகை கவர்ந்து இழுத்தது. நமது பாரம்பரிய பூரணக் கல்வியை அடைய முயற்சிப்போம் - குறைந்தது ஆசைப்படவாவது செய்வோமே! 

0 comments:

Post a Comment