இன்றைய கல்வித்திட்டத்தில் இருக்கும் குற்றங்கள்.

Leave a Comment
1.
காகிதத்தில் எழுதி கருத்தைப் பதியவைத்தல் இன்று பெரும்பாலும் தேவைப்படாத, மற்றும் விரும்பப்படாத நிலையாக உள்ளது. ஆனால் பள்ளி கல்லூரிகளில் பதினைந்து ஆண்டுகள் எழுதும் முறையே பதியவைக்கும் முறையாக உள்ளது.
பணிக்களங்களில் வேலை செய்யும் பலர், பல ஆண்டுகள் காகிதத்தையோ, பேனாவையோ தொட்டதே இல்லை.
படிப்பு முடிந்து வெளியில் வந்தால் கீபோர்டை பார்க்காமல் பதிவு செய்யவேண்டிய அவசியம் பணிக்கலத்திலும் சரி, தனது சொந்த பயன்பாட்டிற்கும் அவசியமாக உள்ளது. ஆனால் பதினைந்து ஆண்டு கல்வியில் அந்தத் திறமை வளர்க்கப்படுவதே இல்லை.
2.
பதினைந்து வயது சிறுமியின் மனப் பக்குவமும் உடல் பக்குவமும் சிறுவர்களுக்கு பதினெட்டு வயதுக்கு முன் அமைவதே இல்லை.
ஆனால் பள்ளியில் ஒரே பாடத்தை படிக்க வேண்டும். ஒரே தேர்வை எழுத வேண்டும். அதில் தோல்வி என்றால் வாழ்க்கையை நடத்துவது இயலாது என்ற நிலையையும் இந்த அரசே ஏற்படுத்தி வருகிறது.
இது விஞ்ஞானத்திற்கு புறம்பான மூடத்தனமான செயல்.
3.
ஆண்டு முழுவதும் நிறைய சிரமப்பட்டு நன்றாக படித்த ஒரு பனிரெண்டாம் வகுப்பு சிறுமி தேர்வு நாள் அன்று தனது மாதசுற்று உடல் உபாதையுள் சிக்கினால் நிச்சயம் அவளது தேர்வுப் பதிவு பாதிக்கப்படும். ஆனால் வேறு வழி இல்லை. திறமை இருந்தும், சிரமப்பட்டு உழைத்து இருந்தும், தகுதிகள் இருந்தும் நியாயமான பலன்களை இழக்க வேண்டியதுதான்.
4. பல நேரங்களில் பணிக்களங்களில் நினைவாற்றல் தேவைப்படுகிறது. பல நேரங்களில் பணிக்களங்களில் நினைவாற்றல் இல்லை என்றாலும் சிந்திக்கும் திறமை தேவைப்படுகிறது. ஆனால் சிந்திக்கும் திறமை உள்ள மாணவன், நினைவாற்றல் குறைந்தவன் தகுதி அற்றவனாக கல்வித்துறையின் தேர்வு முறை அறிவிக்கிறது. அதனால் அவர்களின் திறமை அவமதிக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கை அழிக்கப்படுகிறது. மேலும் அவர்களால் நடக்க வேண்டிய வளர்ச்சிப்பணிகள் அந்தத் திறமை உள்ளவர்கள் இல்லாமலேயே நிறைவேற்றப்படுகின்றன. அப் பணிகளின் தரம் நிச்சயமாக குறைவாகவே இருக்கும். தச்சுத் தொழிலாளியால் ஆகவேண்டிய ஒரு வேலையை கொத்தனாரை வைத்துக்கொண்டு நிறைவேற்றுவது போல. இது தனது குழந்தைகளுக்கும் தேசத்திற்கும் அரசே செய்யும் மிகப்பெரிய ஒரு துரோகம்.
5. மோட்டார் வாகனங்கள் ஓட்டத் தெரிந்திருப்பது இன்று பெரும்பாலானவர்களுக்கு முக்கியமான ஒன்று ஆகிவிட்டது. இருபது ஆண்டு பள்ளி கல்லூரிக் கல்வி இந்த அவசியாமான ஒன்றை சொல்லித் தராது. அவசியம் அற்றவைகளை மட்டுமே சொல்லித்தரும்.
அவசியமானவைகளை அவன் அதற்குப் பிறகு வேறு எங்கோ ஓடி கற்றுக்கொள்ளவேண்டும். அப்படி என்றால் எதற்குதான் கல்வியோ.
6. பள்ளி கல்லூரிகளில் தான் படித்தது என்ன என்பது யாருக்குமே நினைவில் இருப்பது இல்லை. ஏன், ஆசிரியர் பேராசிரியர்களுக்கே நினைவில் இருப்பதில்லை. அப்படி என்றால் அவைகள் தினசரி வாழ்வில் பயன்படுவதில்லை. அந்தப் பயன் தராத விஷயங்களை பாடங்களாக ஏன் வைக்கவேண்டும். குழந்தைப் பருவத்தில் ஏன் அவைகளை திணிக்கவேண்டும்? அவைகளைப் படிக்காவிட்டால் எதற்குமே தகுதி இல்லாதவன் என்று ஏன் முத்திரை குத்தவேண்டும்? அந்த சான்றிதழை ஏன் அளவுகோலாக ஆக்கவேண்டும். அதனை ஏன் தகுதிச் சான்றிதழ் என்று அழைக்கவேண்டுமோ?
7. பல ஆயிரம் தலைமுறைகளாக இந்த நாட்டில் பல துறைக் கல்வி இருந்து வந்துள்ளது. மிகப் பெரிய சாதனைகள் நடந்துள்ளன. மிகச்சிறந்த கல்வியாளர்கள் தோன்றி உள்ளார்கள். வால்மீகியும், வியாசரும், அர்ஜுனரும், காளிதாசரும், ஆர்யபட்டரும், சுசுருதரும்,  திருவள்ளுவரும், கம்பரும் கற்றுவந்த கல்வியில் என்ன இருந்தது என்பதுகூட தெரியவில்லை. சொல்லித்தரப்படவில்லை. ஆங்கிலேயன் இங்கே இருந்துகொண்டு அவனது நாட்டிற்கு கொள்ளையடித்துக்கொண்டு செல்ல, அவனுக்கு உதவ நமக்குள் கைக்கூலிகளை கண்டுபிடிக்க, உற்பத்தி செய்ய, அவனுக்கு அடிமையாக வாழ்வதை பெருமையாக நினைக்க, அவனுக்கு கொள்ளையடித்துத் தருவதை உயர்வாக நினைக்க ஒரு சதிக்கல்வியை ஏற்படுத்தினான். அதே கல்வி முறையும் பாடத் திட்டமும் நாடு ஸ்வதந்த்ரம் பெற்றும், இன்றும் தொடர்கிறது, இது ஏன் என்று அறிஞர்கள் யாருக்கும் புரியவே இல்லை.
8. பல பள்ளிகல்லூரிகளில் மாணவர்களுக்கு காலுக்கு ஷூ, இடுப்புக்கு பெல்ட், கழுத்துக்கு டை,... போன்றவைகள் கட்டாயமாக ஆக்கப்பட்டு உள்ளன. அந்தப் பள்ளிகளில் ஏ.சி.யோ காற்றாடியோ எதுவுமே கிடையாது. குழந்தைகள் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை உடலை வேகவைக்கும் அந்த உடைகளுடன் அமர்ந்திருக்கவேண்டும், மேலும் பாடங்களைக் கற்கவேண்டும். ஆனால், ஆசிரியர்கள் இவைகளை அணியவேண்டாம். அவர்கள் ஓய்வு வேளையில் காற்றாடியில் ஓய்வெடுப்பார்கள். தலைமை ஆசிரியர்கள் காற்றாடியிலும் ஏ.சி,யிலும் இருப்பார்கள். பெற்றோர்களும் கூட வீட்டிலும் பணிக்கலத்திலும் வெயிலின் சூடு தாங்காமல் காற்றாடியிலும் ஏ.சி,யிலும் இருப்பார்கள். கல்வித்துறை அதிகாரிகளும் சூடு தாங்காமல் காற்றாடியிலும் ஏ.சி,யிலும் இருப்பார்கள். கல்வித்துறை அமைச்சர்களும் சூடு தாங்காமல் காற்றாடியிலும் ஏ.சி,யிலும் இருப்பார்கள். இந்த நாட்டிற்கு நன்மையை செய்ய முனைந்து நிற்கும் அறிவிலும் நேர்மையிலும் சிறந்த நீதிபதிகளும்கூட சூடு தாங்காமல் காற்றாடியிலும் ஏ.சி,யிலும் இருப்பார்கள். ஆனால் மூன்று வயதிலிருந்து இருபது வயது வரையுள்ள பச்சிளம் குழந்தைகள் காலுக்கு ஷூ, இடுப்புக்கு பெல்ட், கழுத்துக்கு டை,... போன்றவைகளுடன் ஏ.சி.யோ காற்றாடியோ எதுவுமே இல்லாத பள்ளிகளில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை உடலை வேகவைக்கும் அந்த உடைகளுடன் அமர்ந்திருக்கவேண்டும், மேலும் பாடங்களைக் கற்கவேண்டும்.
வெயிலின் கொடுமை தாங்காமல் சட்டை பித்தான்களை கழட்டி விடுவது , ஷூவை கழட்டி வைப்பது, டையை கழட்டி வைப்பது, பெல்டை கழட்டி வைப்பது,... இவையெல்லாம் அநாகரீகம் என்று பள்ளிகளில் சொல்லித்தரப்படுகின்றன, தடுக்கப்படுகின்றன, கண்டிக்கப்படுகின்றன. தண்டிக்கப்படுகின்றன. ஆனால் இவை எல்லாம் மன நிம்மதியை அழித்து, மன அழுத்தங்களை அதிகரிக்கும். ஈவு, இறக்கம் கருணை அற்ற இந்த செயல்களின் வழியாக வளரும் குழந்தைகளும் நாளை வளர்ந்த பிறகு ஈவு, இறக்கம், கருணை போன்றவைகள் அற்றவர்களாகத்தானே இருக்க முடியும்.
நாகரீகம் என்பதெல்லாம் மனிதன் மனதில் வளர்த்துக்கொள்ளும் எண்ணங்களின் முடிவுகளே. தனக்கு தொல்லை செய்யும் விஷயங்களை நாகரீகம் என்று எண்ணங்களை ஏற்படுத்திக்கொள்வதும், ஏற்பதும், வளர்ப்பதும், எதிர்பார்ப்பதும் வெறும் மூடத்தனமான செயலே.
அதனால்தான் 'மூடத்தனத்தை நீக்கவேண்டிய, அறிவுப்பூர்வமாக சிந்திக்கப் பழக்கப்படுத்தவேண்டிய கல்விக்கூடங்களே இதுபோன்ற பழக்கங்களை கடைபிடிப்பதும் பச்சிளம் குழந்தைகளிடம் திணிப்பதும், நேர்மையற்றதும், கீழான உள்நோக்கம் உள்ளதும், மிகவும் கொடூரமான செயலாகவும்தான் இருக்க முடியும்' என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.



0 comments:

Post a Comment