ஒருசமயம் திருக்கயிலாயத்தில் பரமேஸ்வரனும் அம்பிகையும் எழுந்தருளி இருக்கும் போது அங்கே நெய்யிட்ட திருவிளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்த போது விளக்கு ஒளி இழக்கும் தருணம், எலி ஒன்று அங்கு வந்தது.
நெய்யின் வாசனை அறிந்து அதை உண்ண நினைத்து திரியை பிடித்து இழுக்க, திரி தூண்டி விடப் பட்டதால் தீபம் பிரகாசமாக எரிந்தது.
ஒளி மிகுந்ததனால் எலி ஓட ஆரம்பிக்க ஒளியைத் தூண்டிய எலிக்கு ஈசனின் அருள் கிடைக்கப்பெற்று அந்த எலி மானிடப் பிறவியை அடைந்தது.
அதற்கு அரச போகமும் அரண்மனை வாழ்வும் தந்தருளினார் ஈசன்.
முன்ஜென்மத்தில் எலியாய் இருந்த அந்த உயிர் தான், அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாய்ப் பிறந்தார்.
எண்ணற்ற செல்வங்களுக்கு அதிபதியான இவருக்கு கூடவே ஆணவமும் வளர்ந்தது.
ஒருநாள் அகங்காரத்துடன் திருக்கோயிலுக்குச் சென்றார்.
பட்டாடைகள் தரையில் புரள அலட்சியத்தோடு நடந்து சென்றதால், அங்கிருந்த அகல் விளக்கின் தீப்பொறி சக்கரவர்த்தியின் பட்டாடைகள் மீது பட்டுப் பற்றி எரிய ஆரம்பிக்க, உடல் புண்ணாயிற்று.
ஆணவம் அடங்கிய மகாபலி சக்கரவர்த்தி இருகைகூப்பி தன் தவறை உணர்ந்து தனது உடம்பில் ஏற்பட்ட ரணத்தைப் போக்கி மன்னித்தருளுமாறு வேண்டினார்.
ஈசனும் அவரது வேண்டுதலுக்கு செவிசாய்த்து, அவரை மன்னித்து அதற்கு பிராயசித்தமாக தீப்பொறியால் ஏற்பட்ட ரணத்திற்கு நாள்தோறும் திருக்கோயிலில் தீபவரிசைகளை ஏற்றித் தொழுது கொண்டு வா.
காலப்போக்கில் உன் ரணம் நீங்கும்!
என்று ஈசன் அசரீரியாகச் சொல்ல, மகாபலி மன்னன் மகிழ்ச்சியுற்றான்.
கார்த்திகை மாதமான இந்த மாதத்தில் நாள் தோறும் கோயிலுக்குச் சென்று வரிசை வரிசையாக நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டு திருவிளக்கு ஏற்றி வந்த போது, கிருத்திகை நட்சத்திரம் கூடிய பவுர்ணமி திதியில் இந்த திருக்கார்த்திகை நாளில் தான் ஈசனின் திருவுள்ளம் இறங்கி, இறைவன் ஜோதி வடிவில் வந்து, ஒளிப்பிழம்பாக நிற்க, மன்னனின் நோய் நீங்கியதாக ஐதீகம்.
இவ்வாறு தொடங்கிய தீப வரிசை வழிபாடே கார்த்திகை தீபத் திருவிழாவாக உயர்ந்தது என்பது வரலாறு.
கார்த்திகை தீபத்தன்று தீப வரிசைகளை ஏற்றி வழிபட்டால் அஞ்ஞானத்தால் பிறக்கும் ஆணவம் அழியும் .
இது அகப் பலன் !
மேலும் , தீபம் ஏற்றி வழிபடும் அளவிற்கு வீட்டிற்கும் வீட்டில் உள்ளோருக்கும் அக்னியினால் வரும் தொல்லைகளும் , விபத்துக்களும் அழியும்.
இது பரிஹாரப் பலன்.
தமிழகத்தில் மழை காலம் முடிந்தவுடன் கொசு போன்ற பிற நுண்ணுயிர்களின் இனப்பெருக்கம் அதிகரிக்கும். அவை பெரிய அளவில் பரவி மக்களுக்கு நோய்களை ஏற்படுத்துவது இந்த கார்த்திகை மாதத்தில்தான். எனவே அவைகளிடம் இருந்து நம்மை காத்து கொள்வதற்கு இந்த தீபதிருநாள் வழி செய்கிறது.
கார்த்திகை தீபத்தில் பயன்படுத்தப்படும் நல்லெண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் பருத்தித் திரியில் எரியும் போது அதில் இருந்து ஒருவித நெடி வரும். இந்த நெடியானது கொசு மற்றும் பிற நுண்ணுயிர்களின் வளர்ச்சியை முற்றிலும் அழிக்கிறது. குடும்பத்தின் ஆரோக்கியம் பாதுகாக்கப் படுகிறது.
தற்போதைய சூழ்நிலையில் பிற வேலைகளை காரணம் காட்டி, சாக்குபோக்கு சொல்லி இந்த விழாவை தவிர்க்காமல், பழைய வழக்கம் இப்போ எதற்கு? சாஸ்திரத்துக்கு 2 தீபம் ஏற்றுவோம் என்று நினைக்காமல் வீடு நிறைய விளக்கு ஏற்றி நம் குடும்பத்தை காத்துக் கொள்வோம்.
இது புறப் பலன்!
கார்த்திகை தீபம் திரு விளக்கின் சிறப்பு
கார்த்திகை தீபத்தின் நோக்கம், பாவம் போக்குதல் என்பது தான். அகல் விளக்கில் தீபம் ஏற்றும் போது, அதன் பிரகாசம் குறிப்பிட்ட தூரத்திற்கு தான் தெரியும். அதையே மலை உச்சியிலோ, தரையில் சொக்கப்பனையாகவோ ஏற்றினால் அதன் பிரகாசம் நீண்ட தூரம் தெரியும். மலையில் ஏற்றும் தீபம், அந்த ஊரில் மட்டுமின்றி பக்கத்திலுள்ள பல ஊர்களுக்கும் கூ
ட தெரியும். அத்தனை ஊர்களிலும் இருக்கும் சிறு சிறு ஜந்துகளின் உடலில் கூட அந்த பிரகாசம் படும். மனிதர் மட்டுமின்றி, சிறு ஜீவன்களும் செய்த பாவம் தீரும். இந்த நல்ல நோக்கத்தில் தான் சொக்கப்பனை, அண்ணாமலை, பழநி, திருப்பரங்குன்றம் இன்னும் பல ஸ்தலங்களில் மலை தீபமாகவும், மற்ற தலங்களில் சொக்கப்பனை கொளுத்துகின்றனர்.
ட தெரியும். அத்தனை ஊர்களிலும் இருக்கும் சிறு சிறு ஜந்துகளின் உடலில் கூட அந்த பிரகாசம் படும். மனிதர் மட்டுமின்றி, சிறு ஜீவன்களும் செய்த பாவம் தீரும். இந்த நல்ல நோக்கத்தில் தான் சொக்கப்பனை, அண்ணாமலை, பழநி, திருப்பரங்குன்றம் இன்னும் பல ஸ்தலங்களில் மலை தீபமாகவும், மற்ற தலங்களில் சொக்கப்பனை கொளுத்துகின்றனர்.
திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி, தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. தீபத்தின் ஆடி பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மகாவிஷ்ணு,நெய், எண்ணெய் நிறையும் இடத்தில சிவபெருமான் வாசம் செய்கிறார்.
கார்த்திகை விளக்கின் தத்துவம்
எண்ணெய் கரைகிறது, திரி கரிகிறது. ஆம்… தீபம் என்பது தன்னை கரைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு ஒளி வழங்குகிறது. பிறர்நலம் பேணுவதற்காக தான் உயிரையே தியாகம் செய்ய வேண்டும் என்பது கார்த்திகை தீபத் தத்துவம். எப்படி, தீபத்தின் ஒளி, மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து உயிரினங்களின் மீதும் விழுகிறதோ.. அதுபோல் மனிதனின் மனதில் எழும் அன்பு ஒளி எல்லார் மீதும் பட வேண்டும் என்பதையே கார்த்திகை தீபம் நமக்கு உணர்த்துகிறது.
முதல் விளக்கு திருவிழா
திருவிளக்கு திருவிழா இன்று நேற்று தோன்றியதல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மக்கள் இறைவனை ஜோதியாக வணங்கிப் போற்றியுள்ளனர். சங்ககால இலக்கியங்கள் இவ்வழிப்பாட்டை “கார்த்திகை விளக்கீடு”என்று குறிப்பிடுகின்றன .பெண்கள் விளக்கு வழிபாடு செய்த நிகழ்வு அகநானூறு , நற்றிணை போன்ற எட்டுத்தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளன.
கிராமங்களில், திருவிளக்கை “தாய்” என்றும் “நாச்சியார்” என்றும் அழைப்பது வழக்கம். இதை விநாயகரின் வடிவம் என்றும் சொல்வதுண்டு. திருவிளக்கு வழிபாடு செய்யும் போது விநாயகருக்குரிய மந்திரங்கள் அல்லது பாடல்களைப்பாடி பொட்டு வைத்து, மாலை அணிவித்து, தூப தீபம் காட்டினால் நிலையான பலன் கிடைக்கும்.
எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்
திருக்கார்த்திகை திருநாளில், திருவண்ணமலையில் ஏற்றப்படும் மலை தீபம் சிவாம்சமாகும். யாராலும் அணுக முடியாத ஞான மலை தான் அண்ணாமலை. தேவர்களாலும் அறிந்து கொள்ள முடியாத பரம்பொருள் இறைவன். ஆனால், நம் மீது கொண்ட கருணையினால் தன்னை எளிமைப்படுத்திக் கொண்டு அறியும் நாளே திருக்கார்த்திகை.
சூரபத்மனின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்ட போது, ஈசனே முருகனாக அவதரித்து அருள்புரிந்தார். அவரது நெற்றிக் கண்ணிலிருந்து தீப்பொறிகள் கிளம்பின, ஆறு தீபப் பொறிகளும் சரவணப் பொய்கையில் மூழ்கி சிறு குழந்தைகளாக உருவெடுத்தன. அதுபோல, பெருஞ் சுடரான அண்ணாமலை தீபமே நம் வீட்டு சிறு அகல்களில் சின்ன சின்ன குழந்தைகளாக, முருகனாக ஒளிவீசுகிறது. வீடுகளில், கார்த்திகை தீபம் ஏற்றும் போது குறைந்த பட்சம் ஆறு தீபங்களை வாசலில் வைக்க வேண்டும். அண்ணாமலை தீபம் வேறு, நம் வீட்டு அகல் தீபம் வேறு என நினைக்க வேண்டாம். இரண்டும் ஒன்றே.
ஒரு முகம் ஏற்றினால் – நினைத்த செயல்கள் நடக்கும்.
இரு முகம் ஏற்றினால் – குடும்பம் சிறக்கும்.
மூன்று முகம் ஏற்றினால் – புத்திர தோஷம் நீங்கும்.
நான்கு முகம் ஏற்றினால் – செல்வம் பெருகும்.
ஐந்து முகம் ஏற்றினால் – சகல நன்மைகளும் உண்டாகும்.
திருவிளக்கில் எத்தனை பொட்டு வைக்க வேண்டும்
திருவிளக்கின் உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீப பாதம் ஆகிய எட்டு இடங்களில் சந்தன பொட்டும், அதன் மேல் குங்குமமும் வைக்க வேண்டும். பொட்டு வைக்கும் போது ஆதி லட்சுமி, சந்தான லட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி, தான்ய லட்சுமி, கஜ லட்சுமி, வீர லட்சுமி , விஜய லட்சுமி ஆகியோரை தியானிக்க வேண்டும். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். எட்டு பொட்டுக்கள் வைப்பதற்கு தத்துவரீதியாக காரணமும் உண்டு. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களும், சூரியன், சந்திரன் ஆகிய கண்கண்ட தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றன.
இத்தனை சிறப்பு வாய்ந்த திருக்கார்த்திகை நன்னாளில் விளக்கேற்றி .. வாழ்வில் வளம் பெறுவோமாக!
0 comments:
Post a Comment