வாழ்வை மாற்றும் - ஆசை விஞ்ஞானம்!

Leave a Comment

ஆசை முதல் நிலை:
விதை நிலை. பல ஆயிரம் விதைகள் பூமியில் விழுகின்றன. உலகில் பல விஷயங்களை கேள்விப்படுகிறோம். நினைவில் வைக்கிறோம்.


  
ஆசை இரண்டாம் நிலை:
முளை நிலை. பல ஆயிரம் விதைகளில் ஒன்று முளைக்கிறது. பூமியில் நுழைகிறது. பல ஆயிரம் தகவல்களில் ஒன்று முளைக்கிறது. மனதில் வேர்விடுகின்றன.


ஆசை மூன்றாம் நிலை:
தளிர் நிலை. பல ஆயிரம் முளைகளில் ஒன்று தளிர் விடுகிறது. வெளியில் படர எட்டிப்பார்க்கிறது. ஊன்றிய ஆசைகளிலிருந்து கற்பனைக் கொடி எட்டிப் பார்க்கிறது.


ஆசை நான்காம் நிலை:
படர் நிலை. கொடியின் கிளைகள் பல திசைகளிலும் பற்றிப் படருகிறது. மனதில் ஆசைகளுக்கு சம்பந்தப்பட்ட எண்ணங்கள் பல திசைகளில் பற்றிப் பயணம் செய்கின்றன.




ஆசை ஐந்தாம் நிலை:
பூக்கும் நிலை. ஆங்காங்கு ஏராளமான பூக்கள் தோன்றி வண்ணமயமாக காட்சிதருகிறது. ஆங்காங்கு நம்பிக்கை நக்ஷத்திரங்கள் தோன்றுகின்றன. வண்ணவண்ண வாய்ப்புகள் கற்பனைகள் தோன்றுகின்றன. 

ஏக்கங்களாக உருவெடுக்கின்றன. இந்தப் பருவத்தில் இருப்பது மனதிற்கு மிகவும் சுகமாக இருக்கிறது. நேரம் போவதும் தெரியாது. வயதுகள் ஓடுவதும் தெரியாது. லாப நஷ்டங்கள் தெரியாது. கவலைக் காரணங்கள் கண் முன் இருக்காது. சுகம் சுகமே.


ஆசை ஆறாம் நிலை:
காய்க்கும் நிலை. பல நூறு பூக்களில் ஒன்று பிஞ்சை உண்டுபண்ணுகிறது. பல நூறு பிஞ்சுகளில் ஒன்று காயாகிறது. மற்ற பூக்களும் பிஞ்சுகளும் உதிருகின்றன. ஏராளமான சிறு சிறு ஆசைகளும் இப்படி உதிர்கின்றன. ஏராளமான வாய்ப்புகள் காணாமல் போய், ஒரு சில வாய்ப்புகள் மட்டுமே நிலைத்து நிற்கின்றன.


ஆசை ஏழாம் நிலை:                
பழுக்கும் நிலை. அந்த காய்களில் பல நூறில் ஒன்று மட்டுமே காற்று, மழை, இடி அனைத்தையும் தாண்டி நிற்கிறது, பழமாகிறது. கண்முன் இருந்த சில வாய்ப்புகளும் விதியின் பல சோதனைகளுக்கு இடையில் காணாமல் போய், மிகக் குறைந்த வாய்ப்புகளே கனிந்து தென்படுகின்றன. அதில் ஏதோ ஒன்று பலனை வாழ்வில் ஏற்படுத்துகிறது.


ஆசை எட்டாம் நிலை:
உதிரும் நிலை. ஆசை ஆசையாய் பராமரித்து பழமாக்கிய பலன்கள் தாய்க் கொடிக்கு சுமையாகின்றன. ‘ப்பூ.... பழம் என்றால் இவ்வளவுதானா' என்று ஆகிவிடுகிறது. - கொடிக்கே 'இதை இனி என்ன செய்வது, ஒன்றும் செய்ய முடியாதே’ என்றும், ‘இந்தப் பழத்தை வைத்துக்கொண்டு இனி நான் என்ன செய்வது’ என்றும் தெரியாமல் முழிக்கிறது.விதி தாய் கொடியிடமிருந்து பழத்தை பிரிக்கிறது. 

செய்த முயற்சிகள் பலனை ஏற்படுத்தும்போது, அவைகள் தனக்கு பயனற்று இருப்பதையும் சுமைகளாகவும், தொல்லைகளாகவும் இருப்பதைப் பார்க்கிறான். விதி அவனையும் அவைகளையும் பிரிக்கிறது. அவைகளை அனுபவிக்க இயலாத, விரும்பாத, தேவை இல்லாத நிலையை அடைகிறான்.

--------------------------------



ஆசை விஞ்ஞானம் என்ன சொல்லுகிறது?




தோன்றிய ஆசைகளை எல்லாம் அனுபவித்து ஆகவேண்டும் - என்று அவசியம் எதுவுமே இல்லை. ஏராளமான ஆசைக் கனவுகளுடன் இருப்பதே இறைவனின் அருள். சுகமான நிலை.


பலர் ‘ஆசைகளை பூர்த்தி செய்தால்தான் சுகம், அதுதான் வாழ்க்கையின் லட்சியம்’ என்று என்று நினைக்கிறார்கள். அதற்காகவே வாழ்க்கையை இழக்கிறார்கள். ஆனால் உண்மையில், அப்படியெல்லாம் எதுவும் இல்லை.


ஏதோ சில பழுக்கும். பல முன்பே உதிரும். எது எதெல்லாம் என்று நாம் அறிய ஆராய வேண்டிய அவசியம் இல்லை. அதெல்லாம் விதியின் வேலை.


'ஆசைகளைப் பூர்த்தி செய்து வாழ்வது' - இல்லை சுகம். அது முதுமையின் துவக்கம். 

'ஆசைகளுடன் பூத்துக்குளுங்குவதே' சுகம். அதுவே இளமை.



ஆசைக் கனவுகளே போதும். அதுவே சுகமானது. நமது வேலை பூக்களைப் பூப்பது மட்டுமே. அதன் பின் இறைவனின் வேலை. எதற்காகவோ எதையோ காய்க்க வைக்கிறார். எதற்காகவோ எதையோ பழுக்க வைக்கிறார். எதற்காகவோ எதையோ உதிர வைக்கிறார். அதெல்லாம் நமக்குத் தேவை இல்லாதது.


அதன் பின்னும் அவற்றை 'இது பழுக்கவேண்டும்,  அது பழுக்கவேண்டும், இத்தனை நாளில் பழுக்கவேண்டும்...' என்று துரத்துவது வருத்தங்களுக்கு வாய்ப்புகளை தரலாம். காய்ப்பது காய்க்கட்டும், பழுப்பது பழுக்கட்டும். உதிர்வது உதிரட்டும்.


புதிய புதிய பூக்களுடன் பூத்துக் குலுங்கும் நிலையிலேயே வாழ்பவன் - இன்றும், என்றும் இளைஞனாகவே வாழ்வான்.


பழத்தையே லட்சியமாகக் கொண்டவன் இன்றே இப்போதே முதுமையை அடைகிறான்.


இவ்வளவுதான் வாழ்க்கை!
வாழ்க நீர் என்றும் சுகமாக!



0 comments:

Post a Comment