பொங்கல் கொண்டாட - சுவையான செய்திகள்... :)

Leave a Comment
பொங்கல் என்று கொண்டாடப்படும் மகர சங்கராந்தியை 
எப்படி கொண்டாடுவது....



புதுப்பானை, புதுஅரிசி, சர்க்கரை, பயறு, தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, சாம்பிராணி, கற்பூரம், கரும்பு, இஞ்சி இலை, மஞ்சள் இலை போன்ற பொருட்கள்  பொங்கலில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறன. இப்பொருட்கள் அனைத்தையும் முதல் நாளே வாங்கி கொள்ளவும். 


தைப்பொங்கல் தினத்தன்று ஒவ்வொருவரும் தம் வீட்டுப் பொங்கல் படையலானது சூரியன் உதிக்கும் போதே முதல் நல்விருந்தாக அமைய வேண்டும் என்ற உணர்வுடன் அதிகாலையே விழித்தெழுந்து பொங்கலுக்கான ஆயத்தங்களைச் செய்யவும். 

எல்லோரும் அதிகாலையில் குளித்து (தலை முழுகி), வீடு பெருக்கி, கழுவி, முற்றம் கூட்டி, வாசலில் சாணம் கொண்டு மெழுகி அதில் உலக்கை வைத்து, அரிசி மா, மஞ்சள் மாவினால் அல்லது செங்கட்டி மண்ணால் கோலம் போடவேண்டும். சிமெண்டினால் ஆன முற்றம்  என்றால் அதனை சுத்தம் செய்து கழுவி கோலம் போடவும்.


சூரிய பகவானை வரவேற்க வீட்டு வாசலில் (கதவு நிலையில்) மாவிலை கட்டிவைக்கவும். 


புதுமணமக்கள் இருப்பவர்கள் பொங்கல் விழாவை தலைப் பொங்கல் என வெகு சிறப்பாக கொண்டாடுவார்கள். வீட்டிற்கு வெள்ளையடித்து, வீட்டை அலங்கரித்து, தாமும் புத்தாடை அணிந்து சூரிய பகவானின் ஆசியைப் பெறுவதில் கண்ணும் கருத்துமாக இருக்கவும்.


துக்க நிகழ்வுகள் நிகழ்ந்த குடும்பத்தினர் பொங்கல் விழாவை ஒரு வருடத்திற்கு தவிர்த்துக்கொள்ளவும்.


வடக்கு வாசல் அல்லது கிழக்கு வாசல் வீடுகளாக  இருக்கும் பக்ஷத்தில் வீட்டு முற்றத்தில் காலையில் சூரிய ஒளி விழக்கூடியதாக அமைந்திருப்பதனால் சூரிய ஒளி பற்றி சிந்திக்க தேவை ஏற்படுவதில்லை. ஆனால் வீடு மேற்கு அல்லது தெற்கு வாசல் வீடுகளாக  இருக்கும் பக்ஷத்தில் சூரிய ஒளி படும் படியான இடமாக தேர்ந்தெடுத்தல் அவசியமாகின்றது. 


வெளிநாடுகளில் வசிப்பவர்கள் காலநிலை, வாய்ப்புகள் மற்றும்  சட்டங்களுக்கு ஏற்ப பொங்க வேண்டி இருப்பதனால் வசதிகளை கருத்திற் கொண்டு வீட்டு வாசலை சுத்தம் செய்து பொங்கல் பொங்கி சூரியஒளி படும் இடத்தில் படைத்து வழிபடவேண்டும். 


நாற்சதுரமாக நாற்புறமும் வாசல் வைத்து கோலம் போட்டு குறிக்கப்பட்ட இடத்தை புனித இடமாக மதிக்கவும்.  கோலம் போடப்பெற்ற இடத்தினை நான்கு கம்புகள் நட்டு அவற்றில் கயிறு கட்டி  தோரணம், மாவிலை தொங்க விட்டு, கோலமிட்டு அலங்காரம் செய்யவும்.

புனிதமாக்கிய இடத்தின் நடுவில் புதிதாக மண்ணினால் பிடித்து வைத்த மூன்று அடுப்பு கட்டிகளையும் வைத்து பொங்கல் பானை வைப்பதற்கு அடுப்பை தயார்படுத்தவும்.

பிறகு நல்ல நேரம் பார்த்து, வீட்டின் சுவாமி அறையில் தீபம் ஏற்றி வணங்கியபின் சூரிய பொங்கலை ஆரம்பிக்கவும்.

பொங்கல் பானைக்கு அருகில் குத்துவிளக்கு ஏற்றவும்.

வாழை இலை போட்டு, இடது ஓரமாக தாழி நிறைய பச்சை நெல் வைக்கவும். இலையில் பச்சரிசியை கொட்டிப் பரப்பவும். அதன் மேல் பூசணிக் காயின் ஒரு துண்டு, அவரை, சீனி அவரை, பிடி கிழங்கு, சிறு கிழங்கு, கருணைக் கிழங்கு, கத்தரிக்காய், வள்ளிக் கிழங்கு, இவற்றில் முடிந்தவரை கிடைத்தவைகளை வைக்கவும். பக்கத்தில் வெல்லமும் பச்சரியும் கலந்த காப்பரிசி சிறிது வைக்கவும். வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள் கிழங்கு, ஒரு பாத்திரத்தில் பால்  ஆகியவற்றையும் வைக்கவும்.

இரண்டு கரும்புகளை சாய்த்து வைக்கவும். [ ஒற்றையாக வைப்பது நல்லதில்லை. ] அவை மன்மதனும் ரதிதேவியும், அதுபோல குடும்பத்தை நடத்தும் இனிமையான தலைவனும் தலைவியும்.  இருவரின் வாழ்வும் குடும்பத்தில் அனைவருக்கும் மகிழ்வு தருவதாக இனிமையாக அமையட்டும் என்று குறிப்பது.

பொங்கல் அடுப்புக்காக செய்த விசேஷ கற்களிலோ அல்லது மூன்று கற்கள் வைத்தோ [ அல்லது மண் அடுப்பிலோ ] புதிய பானையை வைக்கவும் [ மண் பானையே சிறப்பு ]. புதுப்பானையின் கழுத்தில் மாவிலை, இஞ்சி இலை, மஞ்சள்இலைகளைக் கட்டி(காப்புக் கட்டி), விபூதிக் குறிகள் வைத்து, திலகமிட்டு புனிதமாக்கவும்.  அடுப்பினில் விறகுகளை வைக்கவும்.

இந்த அமைப்புக்கு அருகில் திரு விளக்கினை ஏற்றவும். விளக்கிற்கும் குல தெய்வம் இருக்கும் திசை நோக்கியும், சூரிய பகவானுக்கும், அடுப்பிற்கும்  அகர்பத்தி காட்டவும்.

தேங்காய் உடைத்து, உடைத்த தேங்காயிலிருந்து தேங்காய் குடுமியை நீக்கவும். தேங்காய் மூடிகளை இலையில் அல்லது அருகாமையில் வைக்கவும்.

விளக்கிற்கும் குல தெய்வம் இருக்கும் திசை நோக்கியும், சூரிய பகவானுக்கும், அடுப்பிற்கும்  ஆரத்தி காட்டவும்.   


[ இப்படி பொங்கல் பொங்கும் முன் சூரிய பகவானுக்கு வீட்டின் சுவாமி அறையில் தீபம் ஏற்றி வணங்கியபின் சூரிய பொங்கலை ஆரம்பிக்கவும். ]


குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் ஒன்றுகூடி தோத்திரங்கள் பாடி, சாணத்தினால், அல்லது மஞ்சள் பொடியால் பிள்ளையார் பிடித்து வைத்து (பிள்ளையார் சிலையும் வைக்கலாம்), நிறைகுடம் வைத்து, குத்துவிளக்கு ஏற்றி, தேங்காய் உடைத்து வைத்து தூபம், தீபம் காட்டி  விநாயகரை வழிபெற்றபின்,  அடுப்பில் உள்ள பானையில்  பாலும், நீரும் விட்டு, அடுப்பில் நெருப்பு மூட்டி,  பொங்க வைக்கவும். 


பால் பொங்கி எழுந்து வழியும் வரை நெருப்பை கூட எரிய விடவும். பால் பொங்கி வழியும்போது கடவுளை வணங்கி பொங்கலோ பொங்கல் என உற்சாகமாக, ஆரவாரம் செய்து, மணி ஓசை எழுப்பி,  புது அரிசியை வீட்டுத் தலைவர், தலைவி, பிள்ளைகள் என அங்கு இருப்போர் அனைவரும், ஒவ்வொருவராக இரு கைகளினாலும் அரிசியை அள்ளி எடுத்து மூன்று முறை ( பிரதட்சிணமாக -- வலஞ்சுழியாக ) சுற்றி பானையில் இட்டு மகிழ்ச்சியுடன் அடுப்படியை தொட்டு வணங்கிக் கண்களில் ஒற்றிக்கொள்ளவும். .


காத்திருந்து அரிசி வெந்து பொங்கல் தயாரானதும் இறக்கிவிட்டு, சர்க்கரைப் பொங்கல் செய்யவும்.

பிறகு சக்கரைப் பொங்கலுக்கு பயிற்றம் பருப்பு, சக்கரை, கஜு, ஏலக்காய் முதலியவற்றை போட்டு பொங்கல் செய்யவும்.

பிறகு, தேவைக்கு ஏற்ப சாம்பாரும் (காய் கறியும்) தயாரிக்கவும்.


பால் பொங்கி அரிசி போட்டபின் பானையில் இருக்கும் மிதமிஞ்சிய நீரை ஒரு சுத்தமான பாத்திரத்தில் எடுத்து அதனை பூஜைகள் முடியும் வரை வைத்திருந்து அதனை மாவிலை கொண்டு வீட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் படும் படியாக தெளிப்பதும் வழக்கம். அந் நீரில் சூரியனின் சக்தி இருப்பதால் சூரிய பகவானின் சக்தி வீட்டின் எல்லா இடங்களிலும் பட்டு பிரகாசிக்கும் (தோஷங்கள் நீங்கும்). 



பொங்கிய பொங்கலை ஒரு தலை வாழையிலையில் வைத்து, அதன் மேல் பகுதியை குழிவாக்கி அதன் மேல் வாழைப்பழத்தை உரித்து வைத்து அதன் மீது தயிர் விட்டு, சக்கரையும் வைக்கவும். பலகாரங்களை (வடை, மோதகம், முறுக்கு) என்பனவற்றை இன்னொரு தலைவாழையிலையிலும், சுத்தம் செய்யப் பெற்ற பழங்களை வேறு ஒரு தலை வாழையிலையிலும் வைக்கவும். 


படையல் படைக்கும் போது (சூரியனுக்கு) வலப் பக்கத்தில் இலையின் அகன்ற பகுதி இருக்குபடி படைத்தல் வேண்டும்.  வாழை இலைகளில் படைத்த பின், தேங்காய் உடைத்து வைத்து சூரிய பகவானுக்கு தூப, தீபம் ஆராத்தி எடுத்து அனைவரும் பக்தியோடு ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி, அல்லது பஜனை பாடி சூரியனை வணங்கவும்.

ஆரத்தி காட்டும்போது இதனை சொல்லி மற்றவர்கள் திரும்பச் சொல்லவும்...


          சூரிய வந்தனம்

சூரியன் நீயே தந்தையர் தந்தை
சூரியன் நீயே உலகின் தந்தை
சூரியன் நீயென் வாழ்வைத் தந்தாய்
சூரியன் நீயென் உயிராய் நின்றாய்

நீ தந்தவற்றை உனக்கே தந்தேன்
நன்றிகள் அனைத்தையும் உனக்கே சொன்னேன்
அறம் பொருள் இன்பம் வீடனைத்தையும்
அடையும் திறன்களை அளித்திடுவாயே!

என்று சொல்லி வழிபட்ட பின் சூரியனைப் பார்த்து நமஸ்காரம் செய்து எழவும்.

சிறுவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடலாம்.

பின்னர் காகத்திற்கு பொங்கல் வைக்கவும். முடிந்தால் காகம் முதலில் சாப்பிடும் வரை காத்திருக்கவும். பிறகு குழந்தைகள் அல்லது இருப்பவர்களில் இளையவர்களுக்கு சர்க்கரைப்பொங்கல் கொடுக்கவும்.


பிறகு சூரியனுக்கு படைத்த (படையல்) பொங்கலை குடும்பத்தில் அனைவரும், வந்துள்ள அன்பர் நண்பர்களுடன் சேர்ந்து உண்டு மகிழவும்.  


உறவினர்கள், நண்பர்களில் துக்க நிகழ்வுகள் அல்லது வேறு சமூகத்தவர் என்னும் காரணமாக பொங்கள் செய்யாது இருந்தால் அவர்களுக்கும் தமது பொங்கலை பரிமாறி அவர்களையும் மகிழ்விக்கவும்.

முதலில் குடும்பத் தலைவனும் தலைவியும் கரும்பினை துண்டுகளாக வெட்டி மற்றவர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.


இந்த நல்ல நாளில் சச்சரவுக்கான, விவாதத்துக்கான பேச்சுக்கள் வருமாயின் தவிர்க்கவும். 


இந்தப் பொங்கல் தினம் சங்கராந்தி என்ற பெயரிலும், மகர சங்கராந்தி என்ற பெயரிலும் பாரத நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

பூமி சுற்றும் விதத்தில், இனி சூரியனை மகர ராசியில் பார்க்க முடியும். இனி இரவு குறைந்து பகல் அதிகரிக்கத் துவங்கும். அதனால், இந்த நாளைக் கொண்டாடினால் வாழ்வில் இருளும் அறியாமையும் குறைந்து ஒளியும் ஞானமும் அதிகரிக்கும்.  J

ஆண்டுதோறும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரையுள்ள ஆறு மாதங்களில் சூரியனின் காட்சி [ அல்லது பயணம் ] வட பகுதியில் அமைவதால்  உத்தராயணம் என்றும், ஆடி முதல் மார்கழி வரையுள்ள மாதங்களில் சூரியனின் காட்சி [ அல்லது பயணம் ] தென் பகுதியில் அமைவதால்  தட்சிணாயணம் என்றும் கூறப்படுகிறது.



இதில் தை மாதம் முதலாம் நாளை மகர சங்கராந்தி, தைப் பொங்கல் என்று கொண்டாடுகிறோம். 

அன்றைய தினம் சூரிய வழிபாடு செய்ய மிக உகந்த நாளாகும். எனவேதான் அன்று சூரியனுக்கு விருப்பமான சர்க்கரைப் பொங்கல், கரும்பு முதலிய பொருட்களைப் படைக்கிறோம்.

சூரியனை வழிபடுவதால் உலகில் அடைய முடியாதவையே கிடையாது என வேதம் கதிரவனைப் பலவாறும் புகழ்கிறது. "நாஸ்திகர்களாலும் இல்லை என்று கூற முடியாத கடவுள் சூரிய பகவானே"என்று வேதம் கூறுகிறது.

மேலும், சூரியன் ஆன்மாவைத் தட்டி எழுப்பி நல்வழிப்படுத்துபவர் என்பதை "ஓம் ய ஏஷோந்தராதித்யே ஹிரண்மய புருஷ" எனப் புகழ்ந்து காட்டுகிறது.

இந்த கால கட்டத்தில் சூரியனை இயக்கும் ஆதித்ய தேவன் உள்ளம் குளிர்ந்து அருள் பொழிபவராக இருப்பதால், எல்லா சுபகாரியங்களையும் இப்போது, இந்த தை மாதத்தில் துவக்கிக்கொள்ளுகிறார்கள்.  


“மாட்டுப் பொங்கல்



பொங்கல் தினத்திற்கு அடுத்தநாள் பட்டிப் பொங்கல் / மாட்டுப் பொங்கல்தினமாக உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்துக்கும் இயற்கைக்கும் நன்றி உணர்வை நினைவுக்குக் கொண்டுவரும் நாள்.


அதற்கு அடையாளமாக பசுவுக்கும், மாட்டுக்கும், கால்நடைகளுக்கும், அலங்காரம் செய்து கொண்டாடும் வழக்கம். 




அன்றைய தினம் மாடு வளர்ப்போர் மாடுகளைக் குளிப்பாட்டி, விபூதி குறிகள் வைத்து, சந்தனம், குங்குமம் பொட்டுகள் இட்டு, மலர் சாத்தி அல்லது மலர் மாலை அணிவித்து, மாட்டின் கொம்புகளுக்கு வர்ணம் பூசி அலங்கரித்து;  பொங்கலோ பொங்கல் - மாட்டுப் பொங்கல்;  மனசு பெருக - பால் பானை பொங்க; நோயும் பிணியும் - தெருவோடு போக  என்று கோஷமிட்டு, மாட்டுத்தொழுவத்தில் பொங்கல் பொங்கவும். மாட்டை இறைவனின் அருளாக  மதித்து அதற்கு பொங்கலை படையல் படைத்து,  உண்ணக் கொடுக்கவும்.

மாடு உண்ட எச்சில் தண்ணீரை மாட்டுத் தொழுவத்தில் தெளிக்கவும்.


பிறகு அனைவருடனும் சேர்ந்து உண்டு மகிழவும்.


மாடு வளர்க்காதோர், மாடு வளர்ப்போரின் வீட்டுக்கு சென்று சேர்ந்து கொண்டாடி, மாட்டுக்காக தானங்களை செய்து வருவது சிறப்பு.

மாட்டுப் பொங்கலின் போது கிராமங்கள் தோறும் ஜல்லிக்கட்டு போன்ற பலவித விளையாட்டுக்களை நடத்தி இளம் தலைமுறைக்கு பலவித திறமைகளையும், ஊக்கத்தையும், மற்றவர்களுடன் அறிமுகம், பழகும் திறமைகள்,...  போன்றவைகளை கொடுத்து, கூச்சம் நீக்கி, ஒற்றுமையாக வாழ பழக்கப்படுத்துவதும் - பெரியோர் கடமைகள்.


பொங்கலோ பொங்கல் !!!!

 நாமும் செய்வோம் - நண்பருக்கும் சொல்லுவோம்! 



0 comments:

Post a Comment