காதல் வாழ்க்கை சிறக்க...

Leave a Comment
காதல் வாழ்க்கையும் சிறப்பாக அமையுமாறுதான் ஒருவன் வாழ்க்கையை திட்டமிடவேண்டும். 

[ இந்தக் கட்டுரையை எழுதும் + படிக்கும் சௌகர்யம் பொருட்டு ஆண்பாலில் எழுதப்பட்டாலும், ஆண் பெண் இருவருக்குமே பொருந்துவதுதான். ] 

வாழ்க்கையைப் பொருளுள்ளதாக ஆக்குவதில் காதலுக்கும் ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. 

காதல் வாழ்க்கை வெற்றிகரமாக இருப்பதற்கு ஏற்ப ஒருவன் தன்னை அமைத்துக்கொள்ளும் போது, நிறைய சுய பரிசீலனை, மாற்றம், வளர்ச்சி அனைத்தும் ஏற்படுகின்றன. 


குறிப்பாக பாரதீயப் பண்பாட்டு திருமண வாழ்வு அதற்கு ஏற்பவே மிகுந்த அறிவுப்பூர்வமாக, கவனமாக, அன்புபூர்வமாக, அக்கறையுடன் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டுள்ளது, முன்னோர்களால். 


அதில் முக்கியமான ஒரு அம்சம் - திருமணம் முதல் வாழ்நாள் முழுவதும் கணவன் மனைவி இருவரும் மரணம் சேர்ந்தே வாழ்வது. 






இருவருக்கிடையே வளரும் காதல் என்பது....

முதலில் ஏக்கத்தில் தான் துவங்குகிறது. இது ஆண் பெண் இருவருக்குமே நன்கு தெரிந்து இருக்கவேண்டும் + எப்போதுமே நினைவில் இருக்கவேண்டும். 

ஏனெனில், இதுதான், அதாவது இந்த ஏக்கம் தான் காதலை தொடர்ந்து பாதுகாப்பது + வளரச்செய்வது. 

அதாவது 'ஏதோ ஒரு அம்சம் தன்னை திருப்தி செய்யும் - பூர்த்தி செய்யும், தன் இயலாமையில் கைகொடுக்கும் ஒரு அம்சம் - இன்னொரு நபரிடம் இருக்கிறது, .... அதன் துணை எனக்கு வேண்டும்' -  என்ற நிலை - அதனால் வரும் மன உணர்வு - அதுதான் ஏக்கம் என்பது. பற்றிப் படர ஏங்கும் இந்த மனநிலைதான் இன்னொரு நபர்மேல் கவர்ச்சியை ஏற்படுத்துகிறது. 

உண்மையில் இந்த ஏக்கம் வரும்போது ஒருவன் இயலாமையில் இருக்கிறான். அந்த ஏக்கத்தை தீர்க்கும் வேறு ஒரு நபர் இந்த நபருக்கு அந்த நேரத்தில் ஒரு பெரிய உதவியை செய்கிறார்.  

அதனால் அந்தநபர் துணை என்று கூறப்படுகிறார். உண்மையில் அந்த வேறு ஒரு நபர், அதாவது துணை - இந்த இடத்தில் ஏமாற்றவும் முடியும். ஏனெனில் ஏக்கம் என்பது உண்மையில் இயலாமையில் வந்தது. 


அதனால்தான் என்னவானாலும் வாழ்நாள் முழுவதும் உடன் இருக்கும் ஒரு வாழ்க்கைத் துணை தேவை. ஏனெனில் பிரிந்து செல்ல வாய்ப்பு இருக்கும் , வரும் , என்னும் நிலையில்தான் இன்னொரு நபருக்கு ஏமாற்ற வேண்டிய அவசியமோ, நிலையோ,... வருகிறது. மரணம் வரை ஒன்றாகவே வாழ்ந்து இறக்க வேண்டியதுதான் எனும்போது ஏமாற்றுதல் என்பது நினைக்கவும் வாய்ப்பு இல்லாத ஒரு விஷயம். அதனால்தான் 'பாரதீயப் பண்பாட்டுத் திருமண வாழ்வு' உலக அரங்கில் வெற்றிகரமான + நிகரற்ற கட்டமைப்பாக இன்று வரை நடைமுறையில் இருக்கிறது. 


தனது குழந்தைகளுக்கு நன்மையையே நினைக்கும் பெற்றோர்களும், அவர்களுக்கு நிலையான நன்மையை செய்யும் பொருட்டு, தங்கள் வாழ்வில் கிடைத்த அனுபவங்களின் துணையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இதுதான் சிறப்பு , வேறு வழி இல்லை என்பதால் இதனையே தங்களது குழந்தைகளுக்கும் கொடுக்கிறார்கள். 


சிறுவயதில் , ஏக்கத்தாலும், ஆனால் அனுபவக் குறைவினாலும், ஒருவனுக்கு இது ஒரு குறைபாடு உள்ள முறையாகத் தோன்றலாம். 

உலகில் குறையே இல்லாத எந்த ஒரு முறையும் கிடையாது, நிறையே இல்லாத எந்த ஒரு முறையும்கூட கிடையாது, ஆனாலும் ஒப்பிட்டுப் பார்த்தால் நிறை அதிகமாகவும், குறை குறைவாகவும் இருக்கவேண்டும். 

அந்த விதியின் படி இந்த பாரதீய திருமண முறை, உலக அரங்கில் வெற்றி கொடுப்பதில் முன்னிலையில் இருக்கிறது - ஒப்பீட்டுக் கணக்கின் அடிப்படையில்.  


அது இருக்கட்டும். நமது இப்போதைய விஷயத்திற்கு வருவோம்.


உண்மையில் இந்த ஏக்கம் வரும்போது ஒருவன் இயலாமையில் இருக்கிறான். அந்த ஏக்கத்தை தீர்க்கும் வேறு ஒரு நபர் இந்த நபருக்கு உடன் இருந்து, உதவி, அந்த நேரத்தில் ஒரு பெரிய உதவியை செய்கிறார். அது ஒரு சுகத்தை ஏற்படுத்துகிறது. 


அதனால் வந்த நன்றி உணர்ச்சியும், இதே சூழ்நிலையை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்ற ஒரு ஆசையும் எழுகிறது. இந்த உணர்வுக்குப் பெயர் காதல். 


உண்மையில் காதல் என்பது திருமணத்திற்குப் பிறகுதான் முழுமையான பரிமாணத்திற்கு வருகிறது. 


உண்மையில் - அது கிடைத்து பூர்த்தியாகும்போது அதைக் கொடுத்த இன்னொரு நபர் மேல் இருக்கும் ஏக்கம் முடிகிறது. வெறுக்கவில்லை என்றாலும் கூட கவர்ச்சி குறைகிறது. 


இது உண்மையில் ஒரு சிக்கலான இடம் - சிந்திக்கவும் - புரிந்துகொள்ளவும். 

ஏக்கத்தை, கவர்ச்சியை தொடர்ந்து பாதுகாக்க இன்னொரு நபருக்கு மேலும் மேலும் கொடுப்பதற்கு விஷயத்தை வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். 

கொடுக்கும் விதத்திலும் திறமைகளை வளர்த்துக்கொண்டே இருக்கவேண்டும். 


குறிப்பாக இன்னொரு நபரை புரிந்துகொள்ளுதல், அவர்களின் உணர்ச்சிகளை மதித்தல், தவறுகளை முதலில் பொறுத்துக்கொண்டு, பிறகு நல்ல சூழ்நிலையில் அன்பாக எடுத்துக்காட்டுதல், தவறுகள் இருந்தாலும்கூட முன்பு இருந்த அன்பும் அக்கறையும் குறையாமல் இருத்தல், சிரமத்தில் உடன் இருத்தல், நிறைகளை மதித்தல் + பாராட்டுதல், பேசுவதை காதுகொடுத்துக் கேட்டல், தனிப்பட்ட விருப்பங்களுக்கு சுதந்திரம் கொடுத்தல்,..... போன்றவைகளில். 

இன்னொரு நபரின் தவறுகளை சரிசெய்ய நியிக்கும்போதுகூட....

'இந்த நபரின் இந்த தவறுகள் உலகில் யாருக்கு பிரச்சினையோ அவர்கள் அதை செய்துகொள்ளட்டும். எனக்கு இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்த நபர் இப்படியே இருக்கலாம். ஆனாலும் அவரது இந்த தவறு தெரியாததினால் சமுதாயத்தில் பல சிரமங்களை அவர் சந்திக்கவேண்டி வரலாம். அந்த சிரமத்தைக் குறைக்க நான் உதவி செய்ய விரும்புகிறேன். அதற்காக நான் அதனை சொல்லவேண்டி இருக்கிறது. அப்படி நான் சொல்லும்போது அவரால் ஏற்கமுடியலாம், அல்லது பல காரணங்களால் இப்போதைக்கு ஏற்க முடியாமலும் போகலாம். அந்த காரணங்கள் எல்லாம் எனக்கு தெரிந்து இருக்கவேண்டும் என்பது இல்லை. அது அந்த நபரின் பிரச்சினை. நான் சொல்ல வேண்டியதை சொல்லி வைத்தால், அது அவருக்கு , சரி என்று தோன்றும்போதோ அல்லது அதனை ஏற்க முடியும் சக்தியோ அனுபவமோ வரும்போதோ ஏற்கட்டும். அந்தக் குறை இருப்பதால் எனக்கும்கூட சில சிரமம் இருக்கலாம். பரவாயில்லை. உலகில் எங்கே இருந்தாலும் எதனை செய்துகொண்டு இருந்தாலும் சிரமங்களை தவிர்கமுடியாது. ஏதோ சிரமத்திற்கு இது பரவாயில்லை, எனது நபர்தானே.' என்ற உணர்வுடன், 

சுருக்கமாக ...
அழகாகச் சொன்னாள் ஒரு தாய் தன் குழந்தையின் தவறுகளில் நடந்துகொள்ளும் விதத்தில் நடந்துகொள்ளவேண்டியதுதான். 

அறிவுப்பூர்வமாக சொன்னால், ஒருவன் தனது தவறுகளின் விஷயத்தில் எப்படி தனக்கு விட்டுக்கொடுத்து, திருந்த வாய்ப்புக் கொடுத்து செல்கிறான், இதே விதத்தில் தனது துணையையும் தன்னில் ஒரு பகுதி என்று நினைத்து, தானே அப்படி இருந்தால் என்ன செய்யப்போகிறேன், என்று நினைத்து நடந்துகொள்ளவேண்டியதுதான்

அதனால் வரும் சில சிரமங்களை தாங்கிப் பழகவேண்டும், நஷ்டங்களைத் தாங்கிப் பழகவேண்டும்,  அதில் தான் அந்த ஒருவன் உயருகிறான். அந்த உயர்வுக்கு இதுதான் விலை. அதனால் இதில் நஷ்டம் ஒன்றுமே இல்லை - தனது உயர்வினை மதித்தால். 

பணம், பதவி, புகழ்,... போன்றவைகளை மட்டுமே மதித்தால் இது நஷ்டமாகத் தோன்றும். 


'இவ்வளவெல்லாம் செய்யவேண்டும் என்றால் அதற்கு கல்யாணமே இல்லாமல் இருந்துகொள்ளலாமே' என்று ஒருவருக்குத் தோன்ற முடியும். 

உண்மையில் ஒருவனுக்கு, எல்லாவற்றையும் தனக்குத் தானே செய்து ,  திருப்தியடையும் வாழ்வை விட , இன்னொருவருக்காக செய்து உதவி வாழும் வாழ்க்கையில்தான் மனிதனது மனம் திருப்தி அடைகிறது,  பூர்த்தி அடைகிறது. அதை ஒருவன் இழக்கக்கூடாது. 

வாழ்க்கையில் ஒருஜீவனையாவது சந்தோஷப் படுத்தி திருப்திப்படுத்தி வாழ்ந்து பார்க்கவேண்டும். அதனால் வரும் திருப்தியை, பூர்த்தி உணர்வை அனுபவிக்கவேண்டும். 

பணம் சம்பாதித்தல், தொழிற்சாலைகளை நடத்துதல் போன்று பல கார்யங்களை செய்துவிட்டு, இந்த அனுபவம் கிடைக்கவில்லை என்றால் வாழ்க்கை வெறுமையாக ஆகிவிடும். அதனால் இதனை பிறர் வெற்றி என்று பாராட்டினாலும், இந்த வாழ்க்கை ஒருவனுக்கு நல்லதில்லை. ஒரு 
திருப்தியை, ஒரு பூர்த்தி உணர்வை தராது. 

இந்த உண்மைக்கு ஏற்பத்தான் ஒருவன் தன் வாழ்வை திட்டமிடவேண்டும். தனது சந்ததிகளின் வாழ்வையும் திட்டமிடவேண்டும். கற்றுத்தரவேண்டும். 



ஒரு விஷயம் கவனம்: இன்னொரு நபரின் உதவியினால் நான் சிரமமின்றி வாழப்போகிறேன். அதற்காகத் திருமணம் செய்துகொள்ளப்போகிறேன். என்ற உணர்வு நல்லது இல்லை. 

இன்னொரு நபரை சந்தோஷமாக வழவைத்துப் பார்க்கப்போகிறேன். என்னையே நான் மதிப்பிடவும், உயர்த்திக்கொள்ளவும் விரும்புகிறேன். அதற்காகத் திருமணம் செய்துகொள்ளப்போகிறேன். என்ற உணர்வு  நிச்சயம் ஒருவனை உயர்த்தும். 


அதற்கு இந்த விலை கொடுக்கலாம்.


தகுதி உள்ள செயல். புத்திசாலித்தனமான செயல். 



இனிய காதல் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். :) 









கவலையா மன அழுத்தமா....

Leave a Comment
கவலை [ worry ] என்பதையும், மன அழுத்தம் [ ஸ்ட்ரெஸ் stress ] என்பதையும், பிரித்துப் புரிந்து கொள்ள வேண்டும்.

‘கவலை’ என்பது ஒருவனுடைய மனதினால் ஏற்படுத்தப்படும் குறைபட்ட வர்ணனை [ அல்லது Negative interpretations ]  .




உதாஹரனமாக வெயில் தாங்க முடியவில்லை, குளிர் தாங்க முடியவில்லை, உடல் வலி தாங்க முடியவில்லை, பொருளாதார சிரமத்தில் இருக்கிறேன்,.... போன்றவைகள்.  


இதே வர்ணனைகள் மிகைப்பட்ட வர்ணனைகளாக [ அல்லது positive interpretations ]  ஆக இருக்கும்போது அதனை ‘சந்தோசம்’ என்கிறோம்.

‘கவலை’யில் உணர்ச்சிகளுக்கு காரணமான புற சூழ்நிலைகளில், தன்னுடைய மனதைத்தவிர வேறு நபர்கள் குறிப்பாக மனங்கள் நேரடி காரணங்களாக இருபதில்லை.\



ஆனால் மன அழுத்தம் என்பது மற்ற நபர்களால் குறிப்பாக மற்ற நபர்களின் மனங்களால் ஏற்படுத்தப் படுவது.  

உதாஹரனமாக....
இன்று அலுவலகத்திற்கு நான் விடுமுறை போட முடியாது, சீனியர் வருகிறாராம், சூபர்வைசிங் இருக்கிறது, ஆடிட்டிங் இருக்கிறது...... என்று பல பிரச்சனைகள் இருக்கும்போது, “நீ இன்று விடுமுறை போட்டுவிட்டு என்னுடன் அம்மா வீட்டுக்கு வரவில்லை என்றால் எனக்கு கெட்ட கோவம் வரும். வந்தே தீர வேண்டும்”, என்று கட்டாயப்படுத்தப்படும் நிலை.

இப்போது அந்த கோரிக்கை வைக்கும் நபரிடம் தான் ஒத்துழைக்க முடியாத காரணத்தை சொன்னால் அந்த நபர் அதை ஒத்துக்கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ தயாரில்லை.

அது மட்டும் இல்லாமல் “நான் அந்த நபர் சொல்லவதை புரிந்துகொள்ளாவிட்டாலோ, அல்லது நான் சொல்வதை அந்த நபர் புரிந்துகொண்டு ஏற்காவிட்டாலோ, நிச்சயமாக எனக்கும் பிரச்சனை இருக்கிறது.

நான் சொல்வதை அந்த நபர் புரிந்துகொண்டு ஏற்கத் தயார் இல்லை,  ஆனால் என் நிலையோ அந்த நபர் சொல்வதையும் ஏற்க முடியாத சூழ்நிலை.

இப்போது எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.


இதற்குப்பெயர் நெருக்கடி. இதுபோன்று பல நெருக்கடிகள் சேரும்பொழுது ஏற்படும் மன நிலையே ‘மன அழுத்தம்’ (ஸ்ட்ரெஸ் stress).



கவலை  (worry) என்பது மனப்பக்குவ குறைவினால் வருகிறது.
மனப்பக்குவ குறைவு என்பது சரியான அனுபவக் குறைவினாலும் நேர்மை குறைவினாலும் [ அதாவது – மன சாட்சிக்கு ஏற்ப வாழ இயலாத தன்மையினாலும் ] வருகிறது.

சரியான அனுபவம் என்பது சரியான அறிவினால் வருவது. அதேபோல நேர்மையும் [ அதாவது – மன சாட்சிக்கு ஏற்ப வாழ இயலும் சக்தியும்கூட ] சரியான அறிவினால் வருவது.

அதனால் சரியான அறிவை சம்பாதிப்பதன் முலம், சரியான அனுபவம் மற்றும் நேர்மை இவைகளை ஒருவன் அடைகிறான்.
நேர்மை இருந்து  மனசாட்சிக்கு விரோதமில்லாமல் வாழ்வதன் மூலம், வாழ முடியும் அளவிற்கு மனப் பக்குவம் ஏற்படுகிறது. மனப் பக்குவம் வளரும் அளவிற்கு விரைவில் கவலையை நீக்க முடியும்.

ஆனால் மன அழுத்தம் என்பது சரியான மனப் பக்குவம் உள்ள ஒரு நபருக்கும், அதாவது சரியான அனுபவமும் நேர்மையும் உள்ள ஒரு நபருக்கும் கூட வர முடியும்.

ஏனென்றால், அது தன்னைச்சுற்றி இருக்கும் மனிதர்களின் மனப்பக்குவத்தை சார்ந்து உள்ளது. அதாவது அது தன்னைச்சுற்றி இருக்கும் மனிதர்களின் சரியான அனுபவம் நேர்மை இவைகளை சார்ந்து உள்ளது.

தன்னைச்சுற்றி இருப்பவர்கள் மனப்பக்குவம் இல்லாதவர்களாக இருக்கும்பொழுது, தான் ஒரு வேலை சரியான அறிவும் நேர்மையும், சரியான அனுபவமும், சரியான மனப்பக்குவமும் இருந்து கவலைகள் இல்லாமல் வாழ முடிபவராக இருந்தால் கூட, அவருக்கும் மன அழுத்தம் வர முடியும்.

ஏன் என்றால் மன அழுத்தம் இருப்பதும், இல்லாததும் அவருடைய திறமைகள் இயலாமைகளை சார்ந்தது இல்லை. ஆனால் அவரை சார்ந்தவர்கள், மற்றும் அவர் சார்ந்திருபவர்களின் அறிவுடைமை அறிவீனம் இவைகளை சார்ந்துள்ளது.

[ ஒருவேளை, யாரவது ஒருவர், இப்படியெல்லாம் இல்லை. ஆனால் மன அழுத்தம் இல்லாமல் வாழ்கிறாரே என்றால், அவருக்கு மன அழுத்தம் ஏற்படுத்தப்படுகிறது. அவருக்கும் ஏற்படுகிறது. அவர் சமாளிக்கத் தெரிந்தவராக இருக்கிறார். ஆனால் இது நிலையான தீர்வு இல்லை. ஒருநாள் அது தாங்கும் சக்தியை தாண்டும்போது வெடிக்கும். அப்போது அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்! ]



அதானால் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். கவலைகளில் இருந்து ஒருவரை விடுவிக்க [  to free one from worries ] அவருக்குள் சரியான அறிவை [  the right knowledge  ] ஏற்படுத்தி வேலை செய்யவேண்டும்.

ஆனால் மன அழுத்தங்களில் இருந்து ஒருவரை விடுவிக்க [  to free one from stress ] அவர் சார்ந்திருக்கும் சூல்நிலையில் இருப்பவர்களுக்குள் சரியான அறிவை [ the right knowledge  ] ஏற்படுத்தி வேலை செய்யவேண்டும்.

இந்தக் காலத்தில்.கவலையினாலும், அதைவிட அதிகமாக மன அழுத்தங்களினாலும், வாழ்க்கையை வெறுத்துப்போய் வாழப்பிடிகாமல் [ frustration ] வாழ்பவரின் எண்ணிக்கையும், தற்கொலை செய்துகொள்வோரின் [ suicide attempt ] எண்ணிக்கையும்  அதிகமாகி வருகிறது.

முன் காலத்தில் ஒவ்வொரு நபரும் பெரும்பாலும் கவலையின்றியே நம் நாட்டில் வாழ்ந்தார்கள்.


அதற்கு சுருக்கமாகவும் சுலபமாகவும் சொல்லப்படும் காரணம், அவர்கள் விதியின் மேலும் இறைவன் மேலும் பாரத்தைப்போட்டு வாழ்ந்தார்கள்.
சுருக்கமாக இறைவன் விதி என்று சொல்லப்பட்டாலும் கூட அதற்கு பிரத்யக் விஞ்ஞானபூர்வமான [ Introvert Science ] காரணங்கள் உள்ளன.
அதைத்தான், அந்த விஞ்ஞான காரணத்தைத்தான் [ scientific reasons and causes ] வேதங்கள் விரிவாக பேசுகின்றன.

இந்த பிரத்யக் விஞ்ஞானம் [ Introvert Science ] ஒரு தனிநபரை சிறந்த அறிவாளியாக ஆக்கி, சிறந்த மனப்பக்குவத்தை அடைய செய்வது.  
இந்த பிரத்யக் விஞ்ஞானத்தை [ Introvert Science ] அக அறிவியல், அல்லது ஆன்மிகம், அல்லது அத்யாத்மம், அல்லது அக விஞ்ஞானம்,... என்று அழைக்கிறோம்.

இதையே நமது முன்னோர்கள் ‘அக நானூறு’ என்று நூல்களுக்கு பெயரிட்டனர்.

வேதங்களின் இந்த பிரத்யக் விஞ்ஞானப்பேச்சுதான் புராணங்கள், இதிகாசங்கள், தேவாரம், திருவாசகம், திருக்குறள். நாலடியார்,.... போன்ற கட்டமைப்புகளின் மூலமும் குருகுலங்கள், நாடகம், வில்லுபாட்டு, தெருகூத்து,.... போன்ற சாதனங்களின் மூலமும் மக்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டது.  

இது பாரத நாட்டின் தொன்மையான பிரத்யக் விஞ்ஞானபூர்வமான [ Introvert Scientific ] மனோவியல் ரீதியான [ psychological ], சுலபமான [ easy way ], அனைவரையும் அடைந்த [ wider reaching ] ஒரு கல்வி முறை [ education ].
இந்தக்காரணத்தினால்தான் நம் நாட்டில், பொதுவாகவே ஒவ்வொரு தனி நபரும் சிறந்த அறிவினையும் மனப்பக்குவத்தையும் உடையவராக இருந்தார்கள்.

அதனால் தனி நபர்கள் கவலை அற்றவர்களாக இருந்தார்கள்.
அந்த தனி நபர்களுக்கு சூழ்நிலையில் இருந்தவர்களும் இதே போன்று சரியான அறிவு, சரியான மன பக்குவத்தில் இருந்ததால் அந்த தனி நபருக்கும் மன அழுத்தங்களையோ அல்லது நெருக்கடிகளையோ சந்திக்கவேண்டிய சூழ்நிலை வந்தது இல்லை.

ஆனால் இன்று புற அறிவியல் [ extrovert science ] என்ற பராக் விஞ்ஞானத்தை மட்டும் படித்து விட்டு, இதுமட்டும்தான் ‘பகுத்தறிவு’ [ discriminative power ] என்று நினைத்துக்கொண்டு, அகஅறிவியல் [ Introvert Science ] அல்லது பிரத்யக் விஞ்ஞானத்தை அல்லது வேத நெறிப் பண்பாட்டு கல்விகளை கணக்கில் எடுத்து கொள்ளாமலேயே மக்கள் வாழ்வதால், ஒவ்வொரு தனி நபருக்கும் [ individuals ] கிடைக்கவேண்டிய சரியான அறிவு [ right knowledge ] கிடைப்பதில்லை.  

அதனால் வரவேண்டிய சரியான அனுபவங்கள் [ right experiences ] மற்றும் நேர்மை [ honesty ], அதனால் வரவேண்டிய சரியான திறமைகள் [ right skills ] எதுவும் அமையாமல் போய்விடுகிறது.

எனவேதான் ஒவ்வொரு சராசரி மனிதனுக்கும் கவலை [ worry ] என்பது இன்று தவிர்க்க முடியாமல் ஆகிவிடுகிறது.  

அதேபோல அவரை சார்ந்திருப்பவர்களுக்கும், அவர் சார்ந்திருப்பவர்களுக்கும் இதே அறிவுப்பற்றாக்குறை இருப்பதால் இவர் மன அழுத்தத்திற்கும் உள்ளாகிறார்.

இவருடைய அறிவுப்பற்றாக்குறையினால் இவர் பங்கிற்கு, இவரும்கூட  இவரை சார்ந்தவர்களுக்கு மன அழுத்தங்களையும் வாரி வழங்கிக்கொண்டே இருப்பார்.


நமது முன்னோர்கள் நடத்திய ஆட்சி முறையில், நாட்டில் இந்த அக அறிவியல், புற அறிவியல் இரண்டுமே சரியாக வளர்ந்து வருகிறதா என்று கண்காணிக்கப்பட்டு வந்தன, அரசால் வளர்க்கப்பட்டும் வந்தன - முன்பு சொல்லப்பட்ட நூல் மற்றும் சாதனங்களின் கட்டமைப்புகளின் துணையுடன்.

ஆனால், இன்றைய அரசும் மக்களும் புற அறிவியலை [ extrovert science ] மட்டும் வைத்துக்கொண்டு அக அறிவியலை [ Introvert Science ] விட்டுவிட்டு ஒரு காலில் முன்னேறும் சர்க்கஸ் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எது பிற்போக்கோ எது முற்போக்கோ

இன்றைய அரசு தரும் கல்வி மன ஊனமானவர்களையே [ psychologically imbalanced, psychologically challenged, psychologically handicapped , psychologically disturbed, psychologically undergrown, psychologically weak  and hence [ emotionally imbalanced, emotionally challenged, emotionally handicapped , emotionally disturbed, emotionally undergrown, emotionally weak  ] உண்டு பண்ணுகிறது.

பழைய மன்னர்கள் உருவாக்கிய கல்வி முறை மனபலம் உள்ள தனி நபர்களையும் சமுதாயத்தையும் உருவாக்கிக்காட்டி இருக்கிறது.
உலகில் வேறு எந்த நாடும் இதுவரை இந்த சதவிகிதத்தை எட்டிப்பிடித்ததில்லை. உலகில் எந்த நாடும் இதுவரையில் இந்த அளவிற்கு நேர்மையானவர்களை உருவாக்கிக்காட்டியதில்லை.

உலக நாடுகளில் எங்காவது ஒரு நல்லவர், அறிவு உள்ளவர், கருணை உள்ளவர், மனிதத்தன்மை உள்ளவர்,... என்று இருந்தாலே, தங்களால் வாழ முடியாத விதத்தில் இவர் வாழ்கிறார் என்பதால், அவரை எல்லோரும் இறைவனின் தூதர் என்று கொண்டாடினார்கள்.

ஆனால் இந்த நாட்டிலோ வீதிக்கு ஆயிரம் பேர்,, வீட்டிற்கு பத்துபேர் அப்படி இருந்தார்கள் – அதாவது அநேகமாக அனைவருமே!


என்ன செய்ய,....

மக்களோ ஆட்சியாளர்களோ தங்களுக்கு வாழ்க்கையில் எது முக்கியம்,...

பொருளாதார வளர்ச்சியா அல்லது மன நிம்மதி வளர்ச்சியா.... என்பதை.... 

தங்களுக்கு இருக்கும் அறிவுக்கு ஏற்பதானே புரிந்துகொண்டு,....

அதற்கேற்ப தன் வாழ்க்கைப் பயணத்தையும் , நாட்டின் வாழ்க்கைப் பயணத்தையும் அமைக்க முடியும்.???....



பகவத் கீதை சுருக்கமாக. 001

Leave a Comment

பகவத் கீதை கற்க மிகவும் இனிமையானது,
பகவத் கீதை அறிவுக்கு விருந்து,  
பகவத் கீதை மனதிற்கு இதமானது,
பகவத் கீதை வாழ்வில் பயன் தருவது,
பகவத் கீதை எங்கும் எப்போதும் கைகொடுப்பது!
பகவத் கீதை கற்றவரைக் காப்பது!
பகவத் கீதை உன் பிறவிக்குக் காரணமான தெய்வத்தின் குரல்!

அதனைப் புரிந்துகொள்ளவேண்டிய விதத்தை சுருக்கமாகப் பார்ப்போம்.




அர்ஜுன உவாச்ச
ந காங்க்ஷே விஜயம் க்ருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகாநி ச  l
கிம் நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகைர் ஜீவிதேந வா   ll  1.32




அர்ஜுன உவாச்ச  – அர்ஜூனர் கேட்டார் [ - ஸ்ரீ கிருஷ்ணரிடம் ]

ந காங்க்ஷே  - நான் விரும்பவில்லை

விஜயம் -  [ இப்படி ஒரு ] வெற்றியை

க்ருஷ்ண  - ஓ கிருஷ்ணா.

ந ச ராஜ்யம்  - ராஜ்யத்தையும்கூட [ நான் விரும்பவில்லை ]

ஸுகாநி ச – [ இன்பங்களையும் கூட [ நான் விரும்பவில்லை ]


கிம் நோ  - நமக்கு என்ன [ பிரயோஜனம் ] ?

ராஜ்யேந  - இந்த ராஜ்ஜியத்தாலோ

கோவிந்த – ஓ கோவிந்தனே

கிம் போகைர்  - இந்த உலக போகங்களால் [ லௌகீகம் சுகங்களால் ]

ஜீவிதேந  வா – வாழ்வதாலும் சரி  [ நமக்கு என்னதான் பிரயோஜனம் ] ?

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------



ஓ கிருஷ்ணா. [ இப்படி ஒரு ] வெற்றியை நான் விரும்பவில்லை, ராஜ்யத்தையும் [ இன்பங்களையும் கூட [ நான் விரும்பவில்லை ]. ஓ கோவிந்தனே இந்த ராஜ்ஜியத்தாலோ இந்த உலக போகங்களால் [ லௌகீகம் சுகங்களால் ] அல்லது வாழ்வதாலும் சரி  [நமக்கு என்னதான் பிரயோஜனம் ] ?

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


இது வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்து வாழும் ஒருவன் ......

ஒரு நல்ல அறிவாளியாக இருந்தால்
தனது கருத்துக்கள் கொள்கைகளை எப்போதுமே தேவைப்பட்டால் மறுபரிசீலனை செய்யத்தயாராக இருக்கும் நேர்மையானவனாக இருந்தால்

அவனுக்கும் மனம் விட்டுப் பேச ஒரு தகுதிஉள்ள நம்பகமான இடம் கிடைத்தால்

அப்போது வெளிப்படும் வார்த்தைகள் இவைகள்.


இந்த அனுபவம் மனசாட்சி உள்ள யாருக்குமே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நிச்சயம் வருவதுதான்.

ஆனால் , எல்லோருக்குமே, இதை மனம் விட்டுக் கேட்க ஒரு தகுதி உள்ள நபர் கிடைப்பதில்லை.

அர்ஜுனனருக்குக் கிடைத்த இந்த வாய்ப்பு அப்படிப்பட்ட எல்லோருக்குமே கிடைத்த வாய்ப்பாகிவிட்டது –

ஸ்ரீ வியாஸாச்சாரியாரின் கருணையினால்.

பயணம் செய்யும் ஒருவன் எத்தனையோ கேள்விகளை தள்ளிவைக்கலாம். ஆனால், நான் போகும் பேருந்து நான் போகவேண்டிய ஊருக்குதான் செல்கிறதா ? இதில் நான் பயணம் செய்வது சரியா?  – என்ற சந்தேகம் வந்துவிட்டால், அதனைத் தள்ளிவைக்க முடியாது. \

‘அப்படி ஒரு சந்தேகமெல்லாம் வரவேகூடாது’ என்றும் சொல்லமுடியாது.

அர்ஜுனருக்கு இப்படி ஒரு சந்தேகம் வந்துள்ளது, அவரது, நேர்மையை, அறிவுக்கூர்மையை, மனப் பக்குவத்தை, தனது சரியான நல் வாழ்க்கையில் இருக்கும் அக்கறையை,.... காட்டுகிறது.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


இதில் இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. இந்தக் கேள்வியை அர்ஜூனர் கேட்கிறார் என்றால், அவருக்கு இதற்கு பதில் தெரியாது என்பது கிடையாது.

இதே கேள்வியை அவரிடம் வேறு யாராவது கேட்டிருந்தால், அவரும் நிச்சயமாக ஒரு நல்ல பதிலைக் கூறியிருப்பார்!

அர்ஜூனர், உண்மையில் வேதங்களைக் குருகுலத்தில் கற்றவர், அதற்க்கும் மேல் மன்னர்களுக்கே தேவையான பல சாஸ்த்திரங்களையும், சாஸ்த்திர பூர்வமாக பல கலைகளையும், ராஜ நீதிகளையும், வாழ்க்கைத் தத்துவங்களையும் ஏற்கனவே கற்றவரே.

ஏற்கனவே ஆட்சியில் இருக்கும்போதும், மற்றும் பல நேரங்களிலும், தனது மிகச் சிறந்த மனப்பக்குவத்தைக் காட்டியுள்ளார்.

பிறகு என் இந்தக் கேள்வியைக் கேட்டார்? பதில்  தெரியாததால் கிடையாது.

இதில் ஒரு சிறந்த  அறிவாளித்தனம் இருக்கிறது. அது...

எப்போதுமே  தன்னைக் காட்டிலும் சிறந்த அறிஞர்கள் இருக்கும்போது, ....

எனக்கே இதற்கெல்லாம் பதில் நன்றாகத் தெரியும் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளாமல்,
தனது சிறிய சந்தேகத்திற்கும் தன்னிடமே பதில் இருந்தால்கூட,
பெரியவர்களின் கோணத்தில் இதற்கு என்ன பதில் என்று கேட்டுத் தெரிந்துகொள்வது.


இன்னொரு மனோவியல் ரீதியான உண்மையும் இருக்கிறது...

பல நெருக்கடிகளில் ஒரு தீர்வு நமக்கே தெரிந்திருந்தாலும்கூட, அதை மற்றவர்களுக்கு சொல்லி ஏற்க, கடைபிடிக்க வைக்க திறமை இருந்தாலும்கூட,

தனக்கு கடைப் பிடிப்பதில் மனதில் பல இயலாமைகள் குறுக்கே வரமுடியும் – சில சந்தர்பங்களில்.

அந்த நேரத்தில் , அவருக்கே , வேறு ஒருவர், அவருக்கு தெரிந்த அதே பதிலை செல்லும்போது , குழப்பம் தீருகிறது, செயல்படுத்தும் சக்தி கிடைக்கிறது.

அதனால் ஒருவன் தெரிந்த விஷயம் என்றாலும்கூட , தகுதி உள்ளவர்களிடம் இருந்து மீண்டும் மீண்டும் கேட்டாலோ , கற்றலோ மிகுந்த நன்மையை செய்வது!

இந்த இரு காரணங்களாலும் நமது பண்பாட்டில் இந்த நடைமுறை எங்குமே என்றுமே இருந்துள்ளதை நமது நூல்களில் நாம் காண முடியும்.

இந்தப் பக்குவத்தை கடைபிடிப்பவன் வாழ்வில் உண்மையான உயர்வினை அடைவான்.


மிகுந்த அறிவினைப் பெற்று, சிறந்த கல்விகளைக் கற்று, சாதனைகள் பல புரிந்து, நாடு முழுவதும் தனது திறமைகளுக்கு நிகரற்றவன் எனப் புகழ் பெற்றிருந்து, அதற்குமேல் உலகப் புகழும் பெற்றிருந்த அர்ஜுனரே இந்தக் கேள்விக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து கேட்டுள்ளார்,......

அதுவும் , வாழ்வில் மிகுந்த நெருக்கடியான , வேறு எதையும் நினைக்கக்கூட நேரம் இல்லை, என்று சொல்லப்படும் போர்க்கால நேரத்தில், .....

இந்தக் கேள்வி மிக முக்கியமான கேள்வி,

எனது பயணத்தில் தவறு நடந்துவிட்டால் அது நியாயம் கிடையாது , இது ஒரு அடிப்படைக் கேள்வி, இதற்கு பதில் கிடைக்காமல் நான் எதையுமே செய்ய விரும்பவில்லை, ஏனெனில் என்னிடம் ஒரு தவறு நடந்து, அது என்னையும் என்னை சார்ந்தவர்களையும் பிறகு ஒருநாள் வருத்தப்படவைக்கும் நிலை வரக்கூடாது,..... என்று மன சாட்சியுடன், முக்கியத்துவம் கொடுத்து, கேள்வியைக் கேட்கிறார்.

அது அவருக்கு மிகுந்த நன்மையையும், செயலூக்கத்தையும் தந்தது. அதுமட்டுமல்ல,....

அவரது, நியாயமான செயல்பாட்டால், அவருக்கு கிடைத்த பதில் பல்லாயிரம் ஆண்டுகளாக பல கோடிபேருக்கு வாழ்க்கையில் விளகேற்றி நன்மையை செய்துள்ளது!

நியாயங்களை தைரியமாக கடிபிடித்தால் இப்படித்தானே, .....

அப்போது கஷ்டமாக இருந்தாலும், பிறகு அது மிகப்பெரிய நன்மையை செய்துவிடுகிறது!

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


 சுவைத்தவர்கள் உங்களுக்கு முக்கியமானவர்களுக்கும் சொல்லலாமே!