தீபாவளியை எப்படிக் கொண்டாடுவது?
ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசை, திரயோதசி, சதுர்த்தசி, பிரதமை ஆகிய நான்கு நாட்களும் தீபாவளியோடு தொடர்பு கொண்டவையாகும். வடமாநிலங்களில் அமாவாசை, பிரதமையிலும் தென் மாநிலங்களில் திரயோதசி, சதுர்த்தசியிலும் தீபாவளி கொண்டாடுகின்றனர்.
தீபாவளிக்கு சில நாட்களுக்கு
முன்பே பண்பாட்டிற்கும் உடலுக்கும் மனதிற்கும் பணவசதிக்கும் பொருத்தமான உடைகளை
வாங்கவேண்டும். அன்றைய தேதியில் பொருளாதார வசதி இல்லாத பக்ஷத்தில் வீட்டில் ஒவ்வொருவருக்கும் ஒரு துண்டாவது வாங்கவேண்டும்.
இனிப்பு காரம் போன்ற சில
பலகாரங்களை தயாரிக்கவேண்டும். மிகவும்
ருசியான ஒரு பலகாரம் வீட்டில் தீபாவளிக்கு மட்டுமே செய்வோம் என்று ஏதாவது
ஒன்றையாவது தீபாவளிக் கணக்கில் ஒதுக்கி வைப்பது சிறப்பு. [ உண்மையில் ஒவ்வொரு
பண்டிகைக்குமே இப்படி ஒரு சில விஷயங்களை அதற்கென ஒதுக்கி வைப்பது சிறப்பு.]
அன்றைய தேதியில் பொருளாதார வசதி
இல்லாத பக்ஷத்தில் குறைந்தது பால் காய்ச்சி கரும்பு சர்க்கரை போட்டும் சுவாமிக்கு
நைவேத்யமாக அர்ப்பணம் செய்யவேண்டியது.
குறிப்பாக தீபாவளி சார்ந்த
நாட்களில் ஏதாவது சர்ச்சைக்குறிய, பிரச்சினைகளை பேசவேண்டிய நிலையோ வாய்ப்போ
வந்தால், சில நாட்கள் குறைந்தது இரண்டு
நாட்கள், அவைகளை பேசுவதை தள்ளிவைக்கவேண்டியது.
எந்தக் காரணங்களால் மனஸ்தாபங்கள்
ஏற்பட்டு இருந்தாலும், பண்டிகையில் அவைகளை மறந்து, ஒற்றுமையாகவும் விட்டுக்கொடுக்கும்
மனப்பக்குவத்துடனும் கவனமாகவும் கூடி
மகிழ்ந்து இருக்க மனதில் சங்கல்பம்கொள்ளவேண்டியது.
பண்டிகை
கொண்டாடும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களில் மனம் விழிப்புடன்
இருக்கவேண்டியது.
முதல் நாள் இரவு புதிய
துணிகளுக்கு மூலைகளில் சந்தனம் பூசவும். அவைகளை சுவாமிக்கு முன் வைக்கவும். ஒரு
சிறு பாத்திரத்தில் நல்லெண்ணெயில் ஓமம் மிளகு சிறிது போட்டு காய்ச்சி சுவாமிக்கு
முன் வைக்கவும். அப்படியே, வாங்கி வந்துள்ள பட்டாசுக்களையும் வைக்கவும். பூஜை போடவும்.
இரவு தூங்கி எழவும். [ இதை, முதல் நாள் இரவே செய்ய முடியாத பக்ஷத்தில் அடுத்தநாள்
காலை 4:30
மணிக்கும் செய்யலாம். ]
பிறகு, அதிகாலையில் சுவாமியை
நமஸ்கரித்து, வீட்டில் பெரியவர்
சுவாமியிடம் இருக்கும் பட்டாசுகளையும், உடைகளையும் எடுத்து அவரவர்க்கும் கொடுக்கவேண்டியது.
பெறுபவர்கள் மற்றவர்கள், நமஸ்காரம் செய்து இது இறைவனின் பிரசாதம் என்ற
உணர்வுடன்பெறவேண்டியது.
முதலில் சில பட்டாசுகளை வெடித்து
வரவேண்டியது.
பிறகு வீட்டில் பெரியவர் சுவாமியிடமிருந்து
எண்ணையை எடுத்து சிறியவர்களுக்கு தலையில் வைத்து விடவேண்டியது. பிறகு அவரவரும் உடல் முழுவதும் பூசி, அரப்பு
அல்லது சீயக்காய் போட்டு குளிக்கவும். திறந்த வெளியில் குளிக்க வாய்ப்பு இருக்கும்
பக்ஷத்தில் திறந்த வெளியில் குளிப்பது சிறப்பு. சிறுவர்களாவது திறந்த வெளியில்
குளிக்க முடிந்தால் சிறப்பு.
குளித்து முடித்து, அனைவரும்
சேர்ந்து, விஷ்ணுவுக்கும், மகாலக்ஷ்மிக்கும் விசேஷ அலங்காரம் முடிந்தவரை
செய்யவும். பிறகு விளக்கேற்றி பலகாரங்களை படைத்து, வழிபாடு செய்ய வேண்டியது.
வீட்டில் இருக்கும்
ஒவ்வொருவருக்குமே ஒரு இலை வீதம் சுவாமிக்கு முன் போட்டு அவைகளில் பலகாரங்களை
பரிமாறி நைவேத்யம் செய்வது சிறப்பு.
விரிவான பூஜை முறை தெரியாத
பக்ஷத்தில் எளிய பூஜை முறை:
ஒரு பாத்திரத்தில் நீர்
வைத்துக்கொள்ளவும்.
சுவாமி படங்களுக்கு முகத்தை
மறைக்காத விதத்தில் பூ வைக்கவும்.
சாம்பிராணி போடவும் அல்லது ஊதுபத்தி
ஏற்றவும்.
தேங்காய் உடைத்து அர்ப்பணம்
செய்யவும்.
நேயத் தீபம், அல்லது கற்பூர
தீபம் ஏற்றி சுவாமிக்கு சுற்றிக் காட்டி வைக்கவும்.
தீபத்தை மூன்று முறை தொட்டுக்
கும்பிட்டுக்கொள்ளவும்.
ஆண்களும் பெண்களும் அவரவர்
முறைப்படி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யவும்.
வீட்டில் பெரியவர்கள் விபூதி,
குங்குமம் போன்ற தாரனங்களை எடுத்து தாமும் தரித்துக்கொண்டு, மற்றவர்களுக்கு
நெற்றியில் இட்டு விடவும்.
மற்றவர்கள் பெரியவர்களுக்கு
நமஸ்காரம் செய்து பெரியவர்களிடமிருந்து இட்டுக்கொள்ளவும்.
இலையில் படைக்கப்பட்ட
பிரசாதங்களை இலையுடன் எடுத்து சாப்பிடும் இடத்தில் வரிசையாக போட்டு, சேர்ந்து அமர்ந்து,
அருந்தி மகிழவும்.
சேர்ந்து பேசிக் களித்து
மகிழவும்.
_________________________________________
தீபாவளிக் குறிப்புகள்:
தீபாவளியன்று புத்தாடை, பட்டாசு, பலகாரங்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் கங்கா ஸ்நானம். எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு கங்கா ஸ்நானம் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து தலைமுழுகினால் நம் பாவம் எல்லாம் போய்விடும் என்பது நம்பிக்கை. அதனால், தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித
நீராடல் என்று சொல்கிறோம். அதற்குக் காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எங்குமே, தண்ணீரில் கங்கையும், லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும்
குங்குமத்தில் கௌரியும், பூமாதேவியும், மஹாவிஷ்ணுவும் தம் சக்திகளை அதிகமாக வெளிப்படுத்துகிறார்கள். அன்றைய தினம், நதிகள் ஏரிகள், குளங்கள்கிணறுகளிலும், நீர்நிலைகளும் "கங்கா தேவி" தேவியின்
சக்தி அருள் அதிகமாக வியாபித்து இருக்கிறது.
அன்றைய தினத்தில் எண்ணெயில் திருமகளும், வெந்நீரில் கங்கையும் ஒன்று சேர்வதால், எண்ணெய்க் குளியல் செய்பவர்க்கு கங்கையில் மூழ்கிக் குளித்த புனிதப்பயன் கிட்டும்! ஆல், அரசு, அத்தி, மாவிலங்கை ஆகிய மரங்களின் பட்டைகள் போட்டுக் காய்ச்சிய நீரில் கங்கா ஸ்நானம் செய்தும்
வழக்கம். அதனாலேயே அந்த நீராடலை
"கங்கா ஸ்நானம்" என்று கூறுகிறோம்.
இப்படி, தீபாவளி தினத்தில் எண்ணெய் தேய்த்து, வெந்நீரில் குளித்தால் பீடைகள் விலகி, புண்ணியம் உண்டாகும். பின் புத்தாடை உடுத்தி, பல வகையான பலகாரங்கள் செய்து விஷ்ணுவுக்கும், மகாலக்ஷ்மிக்கும் படைத்து பூஜிக்க வேண்டும்.
அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய்
கொண்டாடும் பண்டிகை தீபாவளி.
வடபாரதத்தில் தீபாவளி அன்றே வீடுமுழுவதும் தீப விளக்குகளை ஏற்றி கொண்டாடுவர். தென்பாரதத்தில்
தீபம் ஏற்றும் சடங்கினை கார்த்திகை தீபத் திருநாளில் செய்வர்.
குபேரன் கொஞ்சம் கண் திறப்பா? அருள்
தருவாரா?
செல்வத்தின் அதிபதியாகிய திருமகளின் அருளைத்
தரும் குபேர பூஜையினை தீபாவளி நாளிலோ, அதற்கு மறுநாளோ செய்வதால் வீட்டில் செல்வம் பெருகும். லட்சுமி கடாட்சத்தை அருளும் குபேரனுக்கு ராஜாதிராஜன் என்ற பெயரும் உண்டு. யட்சர்களின் தலைவனான குபேரன் மிகவும் சாந்த குணம் கொண்டவர். இவர் எப்போதும் பஞ்சதசீ என்னும் மந்திரத்தை ஜபித்தவாறு இருப்பார். மகாலக்ஷ்மியின் அஷ்டநிதிகளில் ‘சங்கநிதி’, ‘பதுமநிதி’ இருவரும் இவருடைய இருபக்கங்களில் வீற்றிருப்பார்கள். சிவபெருமானை பூஜித்ததன் பயனாக வடதிசையின் அதிபதியாகும் பாக்கியத்தை அடைந்தவர் இவர். ராஜயோகத்தை அருளும் குபேரனைப் பூஜிப்பவர்கள் தனலட்சுமி மற்றும் தைரியலட்சுமியின் அருளைப் பெறுவர்.
ஒவ்வொரு வாரமும்கூட வெள்ளிக்கிழமை குபேரனை வழிபாடு செய்ய ஏற்ற நாளாகும்.
காவல் தெய்வம் மகாலக்ஷ்மி
தீபாவளிக்கு மகாலக்ஷ்மி வழிபாடு முக்கியமானது. இது தொன்றுதொட்டு நடந்து வந்துள்ளதை, தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. முன்
காலத்தில் மகாலக்ஷ்மியின் திருவுருவம் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் பொறிக்கப்பட்டிருந்தது. இன்றும்
கிராமங்களில் பெண் காவல் தெய்வமாக காளி, மாரியம்மன், பேச்சியம்மன், இசக்கியம்மன் என்றெல்லாம்
வழக்கங்களில் வந்திருப்பது மகாலக்ஷ்மியே. மகாலக்ஷ்மியே ஊரின் காவல் தெய்வமாகவும் வழிபடப்பட்டாள்.
நம்ம வீட்டுக்குள்ளும் கங்கை வரும்
நீராடல் இல்லறத்தார் மட்டுமல்ல துறவிகளுக்கும் உரியது. பொதுவாக எண்ணெயை அபசகுனமாக கருதுவார்கள். ஆனால், தீபாவளியன்று தைலமாகிய நல்லெண்ணெயில் ஸ்ரீதேவியாகிய திருமகளே வாசம் செய்கிறாள் என்பதாள் ,
அன்று எந்த நீரில் குளித்தாலும் அது புனிதநதி கங்கையில் நீராடியதற்குச் சமமாகும். நம் ஒவ்வொரு வீட்டிலும் தீபாவளிநாளில் கங்காநதியே வாசம் செய்கிறாள். தைலத்தில் விளங்கும் லட்சுமிதேவிக்கும், நீரில் வாசம் செய்யும் கங்காதேவிக்கும் மானசீகமாக நன்றிதெரிவித்து தீபாவளிநாளில் எண்ணெய் தேய்த்து நீராடினால் நம் பாவங்கள் அகன்றுவிடும்.
செல்வ வளத்துக்கான யாகம் செய்ய வேண்டுமா?
பக்தர்களுக்கு அருள் செய்ய மகாவிஷ்ணு, மகாலக்ஷ்மியை பூலோகத்தில் பிறக்கும்படி செய்வார். ஒருமுறை பூமிக்கு வந்த மகாலக்ஷ்மி, மன நிம்மதி வேண்டி சிவபூஜை செய்தாள். சிவன் அவளுக்கு காட்சி தந்தார். மேலும், அவளது பெயரிலேயே மகாலட்சுமீஸ்வரர் என்ற பெயரும் பெற்றார். திருவாகிய மகாலக்ஷ்மி பூஜித்ததால் இத்தலத்திற்கு திருநின்றியூர் என்ற பெயர் ஏற்பட்டது. செல்வ வளம் வேண்டி மகாலக்ஷ்மிக்காக இங்கு ஹோமம் நடத்தப்படுகிறது. மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கி.மீ., தூரத்தில் உள்ளது.
மகாலக்ஷ்மியிடம் கற்க வேண்டியது என்ன?
நம்மை யாராவது சிறிதாக சீண்டினால்கூட, உடன் கோபித்து விடுவோம். ஆனால், மகாலக்ஷ்மி அப்படிப் பட்டவள் அல்ல. தாங்கவே முடியாத துன்பங்களைத் தந்த போதிலும், பொறுமையின் சிகரமாக இருந்தவள் அவள். சீதையாகப் பிறந்தபோது ராவணன் அவளை இலங்கைக்குக் கடத்தியபோதும், சிறை வைக்கப்பட்டு அசோக வனத்தில் அசுரகுலப்பெண்கள் துன்புறுத்தியபோதும் அவள் கோபப்படவில்லை. அவளைதுன்புறுத்திய அசுரப்பெண்களை தண்டிக்க ஆஞ்சநேயர் விரும்பியபோதும், அவர்களை மன்னித்துவிடும்படி சொல்லிவிட்டாள். இவ்வாறு மகாலக்ஷ்மி, எல்லையில்லாத பொறுமையின் சின்னமாக திகழ்கிறாள். அவரவர் வீடுகளுக்கு அவரவர் முன்வினைப் பயனுக்கேற்பவே அவள் வருவாள். அதிலும் கூட பொறுமை தான் காட்டுவாள். தீபாவளி திருநாளில் மகாலக்ஷ்மியிடம் பொறுமையுடன் இருக்க வேண்டுவோம்.
மகாலக்ஷ்மிக்கு, மலர் மகள் என்று சிறப்புப் பெயர் உண்டு. பாலைக் கடைந்தால் மிருதுவான தன்மையுடைய வெண்ணெய் கிடைக்கும். அதேபோல, பாற்கடலைக் கடைந்தபோது, மென்மையானவளான மகாலக்ஷ்மி தோன்றினாள். இவள் மலரைவிட மென்மையான தன்மை கொண்டதால், மலர் மகள் எனப் பெயர் பெற்றாள். தாமரையாள், பத்மவாசினி, நாண்மலராள், பூபுத்திரி (பூமியின் மகள்), மாமகள், மாதுளங்கி, பதுமை, அக்னி கர்ப்பை, ரத்தினாவதி, ஜானகி என்பன மகாலக்ஷ்மியின் வேறு சில பெயர்கள் ஆகும்.
தீபாவளியன்று சூரியன் உதயமாவதற்கு ஒரு முகூர்த்தம், அதாவது ஒன்றரை மணி நேரம் முன்னதாக நீராட வேண்டும் என்பது விதி. காலை 4.30க்கு நீராடுவது உத்தமம். இதில் இருந்து 5.30 மணிக்குள் வீட்டிலுள்ள எல்லாரும் குளித்து விட வேண்டும். சூரிய உதயத்துக்கு முன்னதாக எண்ணெய்க்குளியல் செய்யக்கூடாது என்பது பொதுவிதி. ஆனால், தீபாவளியன்று மட்டும் வித்தியாசமாக இப்படி செய்தால் தான், நரகாசுரனைப் பற்றி மக்கள் நினைப்பார்கள். அவனைப் போல நம் பிள்ளைகளை அதிக செல்லம் கொடுத்து, கெடுத்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருப்பார்கள் என பூமாதேவி நினைத்தாள். அதற்கென்றே இப்படி ஒரு விதிவிலக்கான வரத்தைப் பெற்றாள். எனவே, எக்காரணம் காலை 2மணி, 3மணி என்றெல்லாம் யாரும் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது. சூரிய <உதயத்துக்குப் பிறகும் குளிப்பதை
தவிர்க்கவும். இவ்வாறு குளித்துவிட்டு, மீண்டும் காலை 7 மணிக்கு மேல் வழக்கமான பச்சைத்தண்ணீர் குளியலையும் செய்ய வேண்டும் என்பதும்
ஒரு மரபு.
தீபாவளியன்று முன்னோர்கள் வழிபாடு
தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளித்ததும், புதிய ஆடைகளையும், புதிய பலகாரங்களையும் வைத்து வணங்குவது முன்னோர்களுக்கு (பிதுர்களுக்கு) படைக்கும் படையல் ஆகும். அன்று பிதுர்கள் வந்து
ஏற்பதாக ஐதீகம்.
தீபாவளி பண்டிகையின் தத்துவ ரகசியம்
இரண்டு பேருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்பவர் (பிரச்னைக்கு தீர்வு சொல்பவர்) என்பவர் தராசு போல நடுநிலையாளராக இருக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. தராசுக்கு துலாக்கோல் என்று ஒரு பெயர் உண்டு. தீபாவளி கொண்டாடப்படும் ஐப்பசிக்கு
துலாமாதம் என்று பெயர். தராசு எப்படி நடுநிலையாக தன் முள்ளைக் காட்டி நிற்குமோ, அதுபோல தனக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்ற பேதம் இல்லாமல் எவன் இருக்கிறானோ அவனே நீதிமான். அதனாலேயே நீதிக்கு அடையாளமாக தராசினை வைத்திருக்கிறார்கள். தீபாவளி நன்னாள் நீதியை எடுத்துச் சொல்கிறது. தாங்கள் பெற்ற மகன் என்றும் பாராமல், அநியாயம் செய்த நரகாசுரனை திருமாலும், சத்தியபாமாவும் இணைந்து அழித்தனர். இந்த நீதியும், மனஉறுதியும்,
வெற்றியும், நிம்மதியும் இல்லத்தரசன், இல்லத்தரசியாக
இருந்து தவ வாழ்வு நடத்தும் செய்யும் அனைவரிடமும் ஏற்பட வேண்டும் என்பதே தீபாவளித் திருநாளின்
சங்கல்பமும் தத்துவ ரகசியமும் ஆகும்.
கணவனை காத்த மனைவி
கிருஷ்ணர் தான் நரகாசுரனைக் கொன்றார் என்று சொல்கிறோம். ஆனால், உண்மையில் கிருஷ்ணரின் மனைவி சத்ய பாமாவே நரகாசுரனைக் கொன்றாள். பெற்ற தாயின் கையால் மட்டுமே சாவேன் என்பது நரகாசுரன் பெற்ற வரம். நரகாசுரன் கிருஷ்ணருடன் போரிட்டபோது, தேருக்கு சாரதியாக அவரது மனைவி சத்தியபாமா சென்றாள். அவள் பூமாதேவியின் அம்சம் ஆவாள். நரகாசுரன் பூமா தேவியின் மைந்தன். போரின் போது, கிருஷ்ணர் மயங்கி விழுந்ததைப் போல நடித்தார். இதனை கண்டு பதறிய சத்தியபாமா நரகாசுரனால் கிருஷ்ணருக்கு ஆபத்து ஏற்படுமோ என அஞ்சி அவன் மீது அம்பினைத் தொடுத்தாள். பெற்ற வரத்தின் படி அவன் உயிர் துறந்தான். தீபாவளியன்று பாமா ருக்மணி சமேத கிருஷ்ணரை வழிபாடு செய்வது
சிறப்பு.
தியாகத்திருநாள்
தீபாவளித் திருநாள் தியாகத்திருநாள் என்றால் மிகையாகாது. நரகாசுரனை அவளது தாயால் தான் அழிக்க முடியும் என்ற நிலை இருந்தது. பூமாதேவியே அவனது தாய். அவள் திருமாலின் அவதாரங்களில் ஒன்றான கிருஷ்ணரின் மனைவியாக சத்யபாமா என்ற பெயரில் பூலோகத்தில் வாழ்ந்தாள். நரகாசுரன் தான் தன் பிள்ளை என்ற விஷயம் அவளுக்குத் தெரியாது. தெரியாமலேயே கிருஷ்ணனின் லீலையால் அவனைக் கொன்று விட்டாள். பின்னர், உண்மையறிந்து கிருஷ்ணனிடம், தன் மகனின் இறப்பை உலகமே கோலாகலமாகக் கொண்டாடுவதால், அந்நாளில் அதிகாலை வேளையில் எண்ணெய் தேய்த்து, வெந்நீரில் குளிக்க வரம் பெற்றாள். பிள்ளையை பறிகொடுத்த வேளையிலும், மக்கள் நலம் பேணிய தியாகவதி அவள். தன் பிள்ளையைப் போல், இன்னொரு பிள்ளை யாருக்கும் பிறக்கக் கூடாது என்றும் அவள் இறைவனிடம் பிரார்த்தித்தாள். மேலும்,
வடமாநிலங்களில் தீபாவளியை லட்சுமி பூஜையாகக் கொண்டாடுகின்றனர். பூமாதேவியானவள்
தனக்கு சம்பந்தப்பட்ட இந்த விழாவை தன் சக்களத்தியான ஸ்ரீதேவிக்கும் (லட்சுமி), பரம
சிவனின் மனைவியான கங்காதேவிக்கும் விட்டுக் கொடுத்தாள். உலக நன்மைக்காக மகனையும் பறிகொடுத்தாள். இந்தக் காரணங்களால் பொறுமையின் திலகமானாள் பூமாதேவி. எனவே, தீபாவளி தியாகத்திருநாள் ஆகிறது.
ஞான தீபம் ஏற்றும் தீபாவளி
காசி என்ற சொல்லுக்கு பிரகாசம் என்று பொருள். ஆத்ம பிரகாசத்தின் புறத்தோற்றமாகவே காசி க்ஷேத்திரத்தை மகான்கள் கருதுகின்றனர். தீபாவளி சமயத்தில் மூன்று நாட்களுக்கு காசி க்ஷேத்திரத்தில் தங்கி, அன்னபூரணியாக தரிசனம் அளிக்கிறாள் அம்பிகை.
தீபாவளி சிறப்பு
* தீபாவளி விஷ்ணு, லட்சுமியைத் திருமணம் செய்து கொண்ட நாள்.
* சாவித்திரி, யமனோடு வாதம் செய்து சத்தியவானின் உயிரை மீட்ட நாள்.
* ஆதிசங்கரர், ஞான பீடம் நிறுவிய நாள்.
* நசிகேதஸ் சிறுவன், யம லோகம் சென்று வரம்பெற்று திரும்பிய நாள்.
* கோவர்த்தன பூஜை செய்யும் நாள்.
* மகாபலி சக்ரவர்த்தி முடிசூடிய நாள்.
* புத்தர் நிர்வாண தீட்சை பெற்ற நாள்.
பல்வேறு பெயர்களில் தீபாவளி
தீப ஒளி திருநாள்
ராவணசம்ஹாரம் முடிந்து சீதாதேவியுடன் ஜயராமனாக அயோத்தி திரும்பி
வந்துகொண்டு இருந்தார் ஸ்ரீராமன். அப்போது அதிகாலை மூன்று மணி. பதினான்கு ஆண்டுகளாக ஸ்ரீராமரை தரிசிக்காத அயோத்தி மக்கள், அந்த இரவில் ஏராளமான விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து, ராமரைத் தரிசித்து வரவேற்று மகிழ்ந்தனர். ஸ்ரீராமபிரான், சீதாப்பிராட்டியுடன் அரண்மனைக்குள் நுழைந்தார். அப்போது கௌசல்யாதேவி விளக்கேற்ற வந்த திருமகளே.. சீதா! நீ இல்லாததால் இந்த அரண்மனையே இருள் சூழ்ந்துவிட்டது. நீ தீபஒளி ஏற்று. அந்தகார
இருள் விலகி அருள் பரவட்டும் என்றாள். உடனே, தீபங்களை ஏற்றிவைத்து வழிபாடு செய்தாள் சீதை. இந்த நன்னாளே தீபாவளித் திருநாள் !
அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் உப்பு
தீபாவளியன்று பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களிலும் ஒவ்வொரு தெய்வத்தின் கடாட்சம் இருப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. எண்ணெய்-லட்சுமி; சிகைக்காய் - சரஸ்வதி; சந்தனம் - பூமாதேவி; குங்குமம் - கௌரி; தண்ணீர் - கங்கை; இனிப்புப் பலகாரம் - அமிர்தம்; நெருப்புப் பொறி - ஜீவாத்மா; புத்தாடை - மகாவிஷ்ணு; லேகியம் - தன்வந்தரி. தீபாவளியன்று உப்பு வாங்குவது அதிர்ஷ்டமாகக் கருதப்படுகிறது. உப்பில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பது ஐதிகம்.
வட மாநிலங்களில் தீபாவளி
வட மாநிலங்களில், முதல் நாள் லட்சுமி பூஜை, இரண்டாம் நாள் நரகசதுர்த்தி, மூன்றாம் நாள் முழுக்கு, ஐந்தாம் நாள் எமதர்ம வழிபாடு என தீபாவளியை 5 நாட்கள் கொண்டாடுகின்றனர்.
எமனுக்கு யமுனை என்ற தங்கை இருந்தாள். அவளுக்கு எமன் தீபாவளி அன்று பரிசுகளை வழங்கி மகிழ்வான். அன்று தங்கை அண்ணனுக்கு விருந்து கொடுப்பாள். இதைக் கொண்டாடும் வகையில் வட மாநிலங்களில் தங்கைகளுக்கு அண்ணன்மார் பரிசு வழங்கும் நாளாக தீபாவளி விளங்குகிறது. மூன்றாம் நாள் திருவிழாவில் இளம்பெண்கள் தீபங்களை ஆற்றில் மிதக்க விடுவார்கள். அந்த தீபங்கள் அமிழ்ந்து விடாமலும், அணைந்து விடாமலும் பார்த்துக் கொள்வார்கள். அப்போதுதான் இந்தாண்டு சுபிட்சமாக இருக்கும் என்பது நம்பிக்கை.