பாரதத் தாய் தாய் உள்ளம் கொண்டவளாக இருக்கவேண்டும்.
அதற்கு பாரத நிர்வாஹம் தாய் உள்ளம் கொண்டதாக இருக்கவேண்டும்.
திறமை உள்ளவர்கள் வாழ முடியும். திறமை இல்லாதவர்கள் வாழ முடியாது என்று சொல்ல
நிர்வாஹம் தேவை இல்லை. திறமை இல்லாதவர்களுக்கும் வாழ்வளிக்க நிர்வாஹம்
கடமைப்பட்டுள்ளது.
10 ஆண்டுகள் 12 ஆண்டுகள் படித்த ஒருவன் தோல்வி அடைந்தவன்
என்று நிரூபிக்க, சான்று அள்ளிக்க ஒரு நிர்வாஹம் தேவையா என்று யோசிக்க வேண்டும்.
பள்ளிக்கே வராத ஆடு மாடுகள் வாழ முடியும் போது, ஏராளமான பணம், ஏராளமாக 10 ஆண்டுகள் 12 ஆண்டுகள் படித்தல் மற்றும் எழுதுதல், மனப்பாடம் செய்தல், பெற்றோர்கள்,
உறவினர்கள் பலரின் பலவித ஒத்துழைப்புக்கான உழைப்புக்கள், அரசு யந்திரங்களுக்கான
நிர்வாஹ செலவுகள்,... ஓய்வு போன்ற சுக இழப்புக்கள்,... இப்படி மிகப்பெரிய முதலீடு
போடப்பட்டு, கடைசியாக ஒரு தேர்வின் முடிவு அவன் தகுதி அற்றவன் என்று அறிவித்தால்
குழந்தைகள் ‘தான் வாழவே தகுதி அற்றவர்கள்’ என்ற மன நிலையை அடைந்து தற்கொலை
செய்துகொள்கிறார்கள்.
எல்லா முதலீடுகளும் விரயம். கஷ்டப்பட்ட மாணவனின் வாழ்க்கையும் விரயம்.
1௦ ஆண்டுகள் 12 ஆண்டுகள் படித்த ஒருவனிடம் ஏதோ திறமை
இருக்கிறது. நிரவாஹமும், அறிவாளிகளும் என்ன சொல்கிறார்கள் என்றால், உனக்கு ஒரு
பாடமோ, சில பாடமோ வரவில்லை என்பதற்காக வருத்தப்பட வேண்டாம். உன்னிடம் ஏதோ திறமை
இருக்கிறது. அதனை கண்டுபிடித்து அதில் ஈடுபடு நீ முன்னேறலாம்’ என்று.
அது உண்மைதான். அப்படி என்றால் ஏன் இவ்வளவு அதிகம் படித்த, ஏராளமான சம்பளம்
பெரும் நிர்வாகம் அந்த திறமையை கண்டுபிடிக்காமல் குழந்தையிடம் கண்டுபிடிக்கும்
பொறுப்பை கொடுக்கவேண்டும்?
இந்தப் பொறுப்பை எடுத்துக்கொள்ளாத, நேரம் இல்லை என்று சொல்லும் ஒரு நிர்வாஹம்,
அவன் தேர்வில் தோல்வி அடைந்தவன் என்று ஏன் சான்றிதழ் கொடுக்கவேண்டும்?
1௦ ஆண்டுகள் 12 ஆண்டுகள் படித்த ஒருவனிடம் ஏதேதோ திறமைகள்
கட்டாயம் இருக்கும். அவனிடம் எதில் 100%,
எதில் 100%, எதில் 90%, எதில் 80%, எதில் 70%, எதில் 60%, எதில் 50% திறமை
இருக்கிறது என்பதை கண்டுபிடித்து அதற்கு சான்றிதழ் கொடுக்க மட்டுமே ஒரு தாயுள்ளம் கொண்ட
நிர்வாஹம் அதிகாரத்தை எடுத்துக்கொள்ளவேண்டும்.
அதைவிட்டுவிட்டு தானே ஒரு 5 அல்லது 10 தேர்வுகளை நடத்திவிட்டு அதில்
சொல்லப்பட்ட மதிப்பெண்ணை வாங்காதவர்கள் எல்லோரும் தோல்வி அடைந்தவர்கள் என்று
அறிவிப்பது, எந்த நிர்வாஹத்திற்கும் அழகாக ஆகமுடியாது. அதிலும் அறிவைக் கொடுக்க
வேண்டிய கல்வித்துறை நிர்வாகம் இப்படி நடந்துகொள்வதை நியாயப்படுத்தினால் அது நிச்சயமாக
அழகாகாது. அது அங்கு படித்த எல்லோருக்குமே குற்றங்களை நியாயப்படுத்தும்
குணத்தையும் அதற்கு உரிய திறமையை வளர்க்கும் தொழிலையும் ஏற்படுத்தும்.
அதேபோல, கொடுக்கப்பட்ட வினாத்தாளுக்கு இரண்டரை அல்லது மூன்று மணிநேரத்திற்குள்
பதில் எழுத வேண்டும். அப்படி எழுத முடியாவிட்டால் ‘நீ தகுதி அற்றவன்’ என்று
முடிவுசெய்வதும் சிறப்பான நடைமுறையாக இருக்க முடியாது. ஏனெனில் வேலை வாய்ப்புகளின்
அடிப்படையில் கூட, பல நிர்வாகங்களில், வேகமாக எழுதவோ, வேகமாக வேலைகளை செய்யவோ
முடியவில்ல என்றாலும்கூட, ஆழமாக சிந்திக்கும், புரிந்துகொள்ளும், தீர்வுகளைக்
கண்டுபிடிக்கும், புதுமைகளைப் படிக்கும் திறமை உள்ளவர்கள் தேவைப்படுகிறார்கள்.
அவர்களை இந்த தேர்வு முறை தகுதி அற்றவன் என்று சான்றிதழ் அளித்துவிட்டால், அந்த
குறிப்பிட்ட மதிநுட்பம் உள்ளவர்களின் சேவை இந்த நாட்டின் வளர்ச்சிக்கு கிடைக்காமல்
போய்விடும், மேலும் அந்த நபரிடம் ஒரு திறமை இருந்தும் அந்த நபரும் நல் வாழ்க்கையை
அடைய முடியாமல் போகும். பெற்ற பெற்றோர்களும் சார்ந்த குடும்பத்தினரும் பல
வருத்தங்களை அடையவேண்டி வரும்.
அதனால் இந்த சிக்கல் விரைவில் தீர்க்கப்பட வேண்டிய ஒன்று ஆகும்.
இந்த விஷயத்தில் நமக்குத்தோன்றும் ஒரு யோஜனை. இதே வினாத்தாளுக்கு மாலை வரை
பதில் எழுத வாய்ப்பினை அளித்து, இந்த மாணவனின் சான்றிதழில் மதிப்பெண்ணுடன்,
எடுத்துக்கொண்ட நேரத்தையும் குறிப்பிடலாம். அதன் மூலம் வேலைக்கு ஆள் தேடும் ஒரு
நிர்வாகம் தனக்கு என்ன தேவை இருக்கிறதோ அதற்கு பொருத்தமான நபரைத் தேர்ந்தெடுக்க
முடியும்.
அதேபோல மனித பண்புகளுக்கு இழுக்கான இன்னொரு நடத்தையும் கல்வித்துறையில்
இருப்பதை பார்க்க முடிகிறது.
சாதாரணமாக 10, 12 வகுப்பு மாணவிகள் வயதுக்கு வந்தவர்கள். தேர்வுக் காலத்தில்
ஒரு மாணவி மாத விளக்கில் சிக்கினால், பொதுவாக மனத் தளர்ச்சியை அடைகிறாள், ஒருவேளை
அவள் மிகவும் வலிகளை அனுபவிப்பவளாக இருந்தால், நிச்சயமாக தேர்வினை மற்ற நாட்களில்
தான் செய்ய முடியும் அளவிற்கு செய்ய முடியாது.
இந்த் நேரத்தில் குற்றம் செய்யாத ஒரு குழந்தை நொந்து கொண்டு வருந்தும் நிலையை
ஏற்படுத்துவது ஒரு நல்ல நிர்வாகத்திற்கு அழகு அல்ல. அதுமட்டுமல்ல, அவள் தேர்வில் தோற்றால்
வாழ முடியாத நிலையையும், அதற்கு, அவளுக்கு ‘நீ தோல்வி அடைந்தவள்’ என்று ஒரு
சான்றிதழையும் தருவது பக்குவமான மனித குணம் என்று கூற முடியாது.
மற்றவர்களின் சிரமங்களை புரிந்துகொள்ளும் மனித குணத்தை ஏற்படுத்தவேண்டிய
கல்வித்துறை, தனது குழந்தைகளின் இந்த சிரமங்களை புரிந்துக்கொள்ளாமல் மன வேதனைகளைத்
தருவது சிறப்பான பண்பாக இருக்க முடியாது.
இந்தப் பிரச்சினையை தீர்ப்பதில் நிறைய சிக்கல்கள் இருக்கிறது என்று கூறி
நிர்வாஹம் தப்பிக்கவும் கூடாது. ஏனென்றால் பலகோடி சிறுமிகளின் அன்றைய கஷ்டத்தையும்,
எதிர்கால நஷ்டங்களையும் பார்க்கவேண்டும்.
அல்லது ஒட்டுமொத்தமாக தேர்வு நடத்தி சான்றிதழ் கொடுக்கும் முறையையும்
கைவிடவேண்டும். சான்றிதழ் கொடுத்தால் அது இப்படிப்பட்ட குற்றங்கள் இல்லாததாக
இருக்கவேண்டும்.
ஒன்று தோன்றுகிறது, நிர்வாகம் தனது குற்றங்களை நீக்கிக்கொள்ளவில்லை என்றால்,
குற்றமற்ற குழந்தைகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலையை தவிர்க்க முடியாது.
இன்னொன்றையும் புரிந்துகொள்ளவேண்டும். தற்கொலை செய்துகொள்ளாத மாணவர்களில்கூட பலர்
9௦%, 8௦%, 7௦%, 6௦%,
5௦%, 4௦%,... என்று குறைவாக தற்கொலை செய்துகொண்டவர்கள் உள்ளார்கள். இந்த ஊனமடைந்த மன
நிலையும் நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது இல்லை.
உடனடி வாழ்க்கையில் பயன்படாத பகுதிகளை 10ஆம் வகுப்புக்குள் கொடுப்பதை தவிர்க்க
வேண்டும். தட்டச்சு, சமையல், அடிப்படை வீட்டு மருத்துவம், வாஹனம் ஒட்டுதல் போன்ற
அத்தியாவசிய விஷயங்களில் திறமையை வளர்க
வேண்டும். பயன்படாத விஷயங்கள் அதிகமாக இருப்பதால் தேர்வு மதிப்பெண் போன்ற பயத்தால்
புத்தகத்தைப் படிப்பதிலேயே மனதையும் நேரத்தையும் போட்டு, வாழ்க்கையில்
அத்யாவசியமானவைகளை கற்க நேரம் இல்லாதவர்களாக ஆகிறார்கள்.
அதனால் வளர்ந்த பிறகு தன்னைப் பராமரிக்க, பாதுகாக்கத் தேவையான திறமை
இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இது ஏராளமான நேரங்களில் வாழ்க்கையை சிக்கல்
நிறைந்ததாக்கி, தன் நம்பிக்கையை இழக்க வைத்து, மனதை நோகச் செய்கிறது. இது பிறகு
குற்றங்களுக்கு வழி வகுக்கும். தற்கொலை போன்ற முடிவுகளுக்கும் வழிவகுக்கும்.
அதனால் 20 வயதில் மாணவர்கள் சம்பாதிக்க முடிபவர்களாக திகழமுடிவதற்கு ஏற்ற எளிமைப்படுத்தப்பட்ட
கல்வி முறை வேண்டும். பிறகு திருமண வாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டு தனது
வருமானத்தில் உயர்கல்வி கற்கும் கல்வி முறை வேண்டும்.
20 வயதில் சம்பாதிக்க, திருமணம் செய்துகொள்ள வைக்காமல் பிறகும் பெற்றோரை
சார்ந்து படித்துக்கொண்டே இருக்கும் நிலை நடுத்தர, மற்றும் அதற்குக் கீழ் இருக்கும்
குடும்பங்களுக்கு முடியாதது. இது குடும்பங்களில் கவலைகளையும் மன அழுத்தங்களையும்,
அதனால் பல குடும்பச்சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது.
தாமதமான சம்பாத்தியம், திருமணம் போன்றவை வாழ வேண்டிய வயதை இழக்க வைக்கிறது.
இதில் கவனத்தைக் கொடுத்து தடுக்காததால் சம்பாத்ய வயதும், திருமண வயதும்
நாளுக்குநாள் தாமதமாகிக்கொண்டே இருக்கிறது.
வாழ்வதிலும், வாழ்க்கையை அனுபவிப்பதிலும் ஏக்கமும் துடிப்பும், திறமையும்
உள்ளவயதில், பல ஆண்டுகள் மன உளைச்சலிலும் எதிர்காலம் பற்றிய பயத்திலுமே வாழ்ந்தால்,
மன விரக்தி அதிகமாகிறது, மன அழுத்தங்கள் அதிகமாகிறது, மனம் சோர்வடைகிறது. அது
உடலில் பிரதிபலிக்கத் துவங்குகிறது. உடல் சோர்வடைகிறது. அதன் பிறகு தாமதமாக திருமணம்
செய்து குடும்பம் நடத்தினால் இந்தக் கலைப்புகளால் ‘பல விஷயங்களில்’ அவன் இயலாதவனாக
இருக்கிறான். ஆசையாக எதிர்பார்த்த எதிர்காலம் இப்போது சுகத்தை தருவதற்கு பதிலாக
சண்டை சச்சரவுகளையும் வருத்தங்களையும் தருகிறது.
படித்தவை வாழ்க்கையில் பயன்படுவதும் இல்லை, நினைவிலும் இல்லை. இதுபோன்ற
விஷயங்கள் 15 வயதுக்குள் உள்ள கல்வியிலிருந்து நீக்கப்படவேண்டும். உதாஹரணமாக,
இப்போது அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு முன் அறிவிப்பின்றி 10ஆம் வகுப்பு பாடத்
தேர்வினை நடத்தினால் எவ்வளவு பேர் எவ்வளவு மதிப்பெண்களை பெறுவார்கள். கௌரவமாகப்
பேசிக்கொண்டால், எல்லோரும் 9௦% மதிப்பென்களுக்கு மேல்தான் பெறுவார்கள்
என்று கூற முடியாது. வெட்கம் விட்டுப் பேசினால் 1௦% பேர் கூட 35% மதிப்பெண்களைப் பெற மாட்டார்கள். ஆனாலும் அவர்களால் தமது
வேலைகளை செய்ய முடிகிறதே. பிறகு ஏன் 15வயதிற்குள் குழந்தைகளை பயன்படாத
அவைகளையெல்லாம் படித்தாகவேண்டும் என்று நெருக்கடியைக் கொடுக்கவேண்டும்?
இப்படி பல பிரச்சினைகளுக்கு கல்வித் துறையின் திட்டங்கள் காரணமாக இருப்பதால்,
கல்வித்துறையானது இவைகளை சீர் செய்துக்கொள்வது, இந்த நாட்டின் இளம் தலை
முறைகளுக்கு நல்வாழ்வை தரும். அவர்களுக்கும் நல்ல சந்ததிகளை கொடுக்க முடியும்.
இந்த நாட்டின் வளர்ச்சியும் பலமடங்குகள் அதிகமாகும்.
இந்த நன்மைகளுக்காக கல்வித்துறையையும், அரசையும், இறைவனையும் பிரார்த்திப்போம்.